இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பரிஸில் உள்ள இலங்கைத் தூதரகம் விழாவொன்றை ஏற்பாடு செய்திருந்தது. கோவிட்-19 தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க தூதுவர், இராஜதந்திரிகள் மற்றும் தூதரக ஊழியர்களின் பங்கேற்புடன் தூதரக வளாகத்தில் இந்த விழா நடைபெற்றது.
விழாவின் ஆரம்பத்தை குறிக்கும் வகையில், யுனெஸ்கோவுக்கான இலங்கையின் தூதுவரும் நிரந்தரப் பிரதிநிதியுமான பேராசிரியர் ஷானிகா ஹிரிம்புரேகம தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தூதரக ஊழியர்களால் தேசியக் கீதம் இசைக்கப்பட்டதுடன், தாய்நாட்டைப் பாதுகாப்பதில் உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சுதந்திர தினச் செய்தியை தூதுவர் ஹிரிம்புரேகம வழங்கியதைத் தொடர்ந்து இரண்டாவது செயலாளர் திருமதி. துலாஞ்சி ஹேரத் கௌரவ பிரதமரின் சுதந்திர தினச் செய்தியையும், திருமதி சஹானா மிஸ்கின் கௌரவ வெளிநாட்டு அமைச்சரின் சுதந்திர தினச் செய்தியை தமிழ் மொழியிலும் வழங்கினர்.
தூதரக ஊழியர்களுக்னு மத்தியில் உரையாற்றிய தூதுவர் பேராசிரியர் ஹிரிம்புரேகம, தூதரகத்தில் அவர்கள் ஆற்றுகின்ற அவர்களது விலைமதிப்பற்ற சேவைகளுக்கு நன்றிகளைத் தெரிவித்ததுடன், இந்த முக்கியமான தொற்றுநோய் சூழ்நிலையில் எமது நாட்டை பொருளாதார ரீதியாக பாதுகாத்து அபிவிருத்தி செய்வதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
பிரான்ஸ், ஸ்பெயின், போர்த்துக்கல், அன்டோரா மற்றும் மொனாக்கோ ஆகிய நாடுகளில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளும் வகையில் இந்நிகழ்வு தூதரக முகநூல் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
இலங்கைத் தூதரகம்,
பாரிஸ்
2022 பிப்ரவரி 11