தாய்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவரும், யுனெஸ்கெப்பின் நிரந்தரப் பிரதிநிதியுமான சி.ஏ. சமிந்தா ஐ. கொலொன்ன, 2022 ஜனவரி 25ஆந் திகதி பேங்கொக்கில் கலப்பின முறைமையில் நடைபெற்ற 3வது நம்பிக்கைப் பொறுப்பாளர் சபைக் கூட்டத்தில் ஆசிய இடர் தயார்நிலை நிலையத்தின் துணைத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவராக இணையவழியில் கூட்டத்தில் இணைந்த தூதுவர் கொலொன்ன, கோவிட்-19 தொற்றுநோய்களின் சவால்களுக்கு மத்தியில் ஆசிய இடர் தயார்நிலை நிலையம் கடந்த ஆண்டு முழுவதும் மேற்கொண்ட பணிகளுக்காக ஆசிய இடர் தயார்நிலை நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹான்ஸ் குட்மேன் மற்றும் ஆசிய இடர் தயார்நிலை நிலையத்தின் உறுப்பினர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
ஆசிய இடர் தயார்நிலை நிலையத்தின் தலைமைப் பதவி பங்களாதேஷில் இருந்து கம்போடியாவிற்கு மாற்றப்பட்டது, மேலும் கம்போடியாவின் சபை உறுப்பினர் மற்றும் கம்போடியாவின் இடர் முகாமைத்துவத்திற்கான தேசிய குழுவின் ஆலோசகர் கிம் விரக் 2022 ஆம் ஆண்டிற்கான தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1986 இல் நிறுவப்பட்ட ஆசிய இடர் தயார்நிலை நிலையத்தில் பங்களாதேஷ், கம்போடியா, சீனா, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகியவற்றுடன் இலங்கை ஆசிய ஆசிய இடர் தயார்நிலை நிலையத்தின் ஸ்தாபக உறுப்பினராக உள்ளது.
2021 ஆம் ஆண்டில், 2021-2025 ஆம் ஆண்டிற்கான நேபாளம், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் உலக வங்கியின் நிதியுதவியுடன் தெற்காசிய திட்ட நடைமுறைப்படுத்தலிற்கான கெயார்வின் ஒரு பகுதியாக நீர் மற்றும் விவசாயத் துறைகளில் விஷேட கவனம் செலுத்தி காலநிலை தழுவல் மற்றும் பின்னடைவு முயற்சிகளில் ஒத்துழைப்பதற்காக ஆசிய இடர் தயார்நிலை நிலையம் இலங்கையின் சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்துடனும், மற்றும் ஆசிய ஆயத்த கூட்டாண்மைக்காக இலங்கையின் முக்கியமான தனியார் துறை வலையமைப்பாக ஒத்துழைப்பைத் தொடர்வதற்கும், இடர் ஆயத்தம், பதிலளிப்பு மற்றும் மீட்புக்கான உள்நாட்டில் தலைமையிலான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு, தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் வளிமண்டலவியல் திணைக்களம் உட்பட இலங்கையிலுள்ள பல்வேறு அமைச்சுக்கள் மற்றும் முகவர் நிலையங்களுக்கு அனர்த்த இடர் முகாமைத்துவத்திற்கான ஆதரவை ஆசிய இடர் தயார்நிலை நிலையம் வழங்கி வருகின்றது.
தாய்லாந்திற்கான இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை,
பேங்கொக்
2022 பிப்ரவரி 07