துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

துருக்கி குடியரசின் வெளியுறவு அமைச்சர் மெவ்லட் சாவுசோக்லுவுடன் 2022 ஜனவரி 28, வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற  இருதரப்பு சந்திப்பில், இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையில் நிலவும் 'மிதமான, சுமூகமான மற்றும் பரஸ்பர ஆதரவான பங்காளித்துவத்தை' வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சுட்டிக் காட்டினார். இந்த வகையில், துருக்கி தனது 'ஆசியா புதிய முயற்சி' என்ற கட்டமைப்பில் இலங்கையுடன் இன்னும் நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கு வெளிப்படுத்திய விருப்பத்தை அமைச்சர் பீரிஸ் வரவேற்றார். துருக்கியுடனான இருதரப்பு உறவுகளில் பரஸ்பர 'நண்பர், நட்பு நாடு மற்றும் மதிப்புமிக்க பங்காளி என்ற வகையில்' இலங்கையின் முக்கியத்துவத்தை துருக்கிய வெளிவிவகார அமைச்சர் சாவுசோக்லு எடுத்துரைத்தார்.

இலங்கையில் நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பாக துருக்கியினால் பேணப்படும் கொள்கை ரீதியான நிலைப்பாட்டையும்,  பிராந்திய மற்றும் பலதரப்பு மன்றங்களில் வெளிப்படுத்தப்பட்ட ஒற்றுமையையும் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பாராட்டி, ஒப்புக்கொண்டார். மேலும் விளக்கமளித்த அமைச்சர், இலங்கையில் வாழும் அனைத்து சமூகங்கள் மற்றும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், நம்பகமான, அனைத்தையும் உள்ளடங்கிய உள்நாட்டு செயன்முறையின் மூலம் நல்லிணக்கத்தின் எஞ்சிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு வெளிநாட்டு  அமைச்சர்களும் கலந்துரையாடினர். பொருளாதார ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டி, ஜூன் 2021 இல் நடைபெற்ற இலங்கை - துருக்கி பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான துருக்கி கூட்டுக் குழுவின் இரண்டாவது அமர்வில் அடையாளம் காணப்பட்டவாறு, வர்த்தகத்தை மேலும் பன்முகப்படுத்தி, ஆண்டுக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தக இலக்கை அடைந்து கொள்வதற்காக சீராக செயற்பட வேண்டியதன் அவசியத்தை அவர்கள் அடையாளம் கண்டனர். முதலீடு மற்றும் வணிக இணைப்புக்களை மேம்படுத்துதல், சுற்றுலா மற்றும் இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் ஒத்துழைப்பின் சாத்தியமான புதிய பகுதிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான தொடர்பை மேம்படுத்துவதில் துருக்கிய விமான சேவையின் பங்களிப்பை அமைச்சர் பீரிஸ் பாராட்டினார்.

எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக,  இரு அமைச்சர்களும் இந்த விஜயத்தின் போது இரட்டை வரி விதிப்பைத் தவிர்ப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இரு அமைச்சர்களும் பாதுகாப்பு, காவல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பரஸ்பர ஆர்வமுள்ள ஏனைய பகுதிகள்  குறித்தும் ஆலோசித்ததுடன், எதிர்காலத்தில் உயர்மட்ட விஜயங்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் எதிர்பார்த்தனர். கோவிட்-19 தொற்றின் தாக்கத்தை குறைப்பதற்காக 2021 ஆம் ஆண்டு துருக்கிய ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு முகவரமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட மருத்துவ உதவிகள் மற்றும் 2004 சுனாமிக்குப் பின்னர் தென்னிலங்கையில் வீட்டுக் கட்டுமானத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகளுக்காக துருக்கி அரசாங்கத்திற்கு இலங்கையின் பாராட்டுக்களை அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.

பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத்  கொலம்பகே மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த இருதரப்பு சந்திப்பில் கலந்துகொண்டனர். வெளிவிவகார அமைச்சர் சாவுசோக்லுவுடன் இலங்கைக்கான துருக்கித் தூதுவர் டிமெட் செகெர்சியோகுலு மற்றும் வெளிவிவகார அமைச்சரின் ஆலோசகர்களும் இணைந்திருந்தனர். இந்த விஜயத்தின் போது துருக்கிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

இதற்கு முன்னர் ஜூன் 2016 இல் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த வெளிவிவகார அமைச்சர் சாவுசோக்லு இலங்கைக்கு மேற்கொண்ட  இரண்டாவது விஜயம் இதுவாகும்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2022 ஜனவரி 30

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close