சிங்கப்பூரிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தைப் பொங்கல் திருவிழாவை உயர்ஸ்தானிகராலய வளாகத்தில் 2022 ஜனவரி 20ஆந் திகதி, வியாழக்கிழமை கொண்டாடியது.
சிங்கப்பூர் - சிலோன் தமிழர்கள் சங்கம் மற்றும் ஸ்ரீ செண்பக விநாயகர் கோயில் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இக் கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினர்களாக இணைந்திருந்தனர். 1850 களில் கட்டப்பட்ட சிங்கப்பூரில் உள்ள செண்பக விநாயகர் கோயில், அப்போது சிலோன் என்று அறியப்பட்ட இலங்கையுடன் ஒரு நீண்டகாலத் தொடர்பைக் கொண்டுள்ளது. கோவிலின் முதலாவது கட்டிட அமைப்புக்களைக் கட்டுவதற்கான முன்னோடியாக செயற்பட்ட இலங்கை தமிழர்களுக்கு பாராட்டுக்கள் வழங்கப்பட்டன. சிங்கப்பூர் - சிலோன் தமிழர்கள் சங்கம் ஆண்டு தோறும் கோவில் பராமரிப்பு மற்றும் முகாமைத்துவத்திற்காக முக்கிய பங்கு வகித்தது.
செண்பக விநாயகர் கோயிலின் ஸ்ரீ சபேசன் குருக்கள் விஷேட பூஜையை நடாத்தியதுடன், ஜனாதிபதி, பிரதம மந்திரி, இலங்கை மற்றும் சிங்கப்பூர் அரசாங்கங்களுக்கு ஆசீ வேண்டி பிரார்த்தனைகளில் ஈடுபட்டார்.
நிகழ்விற்கு வருகை தந்தவர்களை வரவேற்று உரையாற்றிய உயர்ஸ்தானிகர் சசிகலா பிரேமவரதன, ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் தைப் பொங்கல் தின வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள, 'விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதொரு கலாச்சாரத்தை மரபுரிமையாகக் கொண்டிருக்கும் இலங்கையர்களாக, நாம் தைப் பொங்கலை மிகுந்த மரியாதையுடன் எதிர்நோக்குகின்றோம், இயற்கைக்கு இணக்கமான வகையில் பசுமையான விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் நாம் செழிப்பை நோக்கி செல்ல வேண்டும்' என்ற கருத்துக்களை சிறப்பித்துக் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் அபிவிருத்திக்காக இலங்கைத் தமிழ் சமூகம் ஆற்றிய பரந்த பங்களிப்புக்களை அங்கீகரித்த உயர்ஸ்தானிகர், அவர்கள் நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் திறமை ஆகியவற்றின் பெருமைக்குரிய பிரதிபலிப்பாவர் எனக் குறிப்பிட்டார். சிங்கப்பூர் - இலங்கை உறவு, இந்த பகிரப்பட்ட கலாச்சார விழுமியங்கள் மற்றும் வலுவான மக்களுக்கிடையிலான தொடர்புகளால் அடித்தளமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
நிகழ்வின் நிறைவில் பொங்கல் மற்றும் சிலோன் தேநீர் உள்ளிட்ட பாரம்பரிய இனிப்பு வகைகள் பரிமாறப்பட்டன.
சிங்கப்பூரில் உள்ள முன்னணித் தமிழ் நாளிதழான தமிழ் முரசு இந்த நிகழ்வு குறித்த செய்தியை சிங்கப்பூரில் பதிவு செய்தது.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
சிங்கப்பூர்
27 ஜனவரி 2022