கொரியக் குடியரசின் தேசிய சபையின் சபாநாயகர் பார்க் பியோங்- யூக் தலைமையில் விஜயம் செய்திருந்த கொரிய தூதுக்குழுவை கௌரவிக்கும் வகையில், 2022 ஜனவரி 20ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மதிய போசன விருந்தளித்தார்.
மதிய போசனத்தின் போது, கொரியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து இரு தரப்பினரும் விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். கட்டுமானம், மின் உற்பத்தி மற்றும் தகவல் தொடர்பாடல் ஆகியவற்றில் கொரியாவின் நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பங்களுடன் இதுவரை நல்கப்பட்ட மகத்தான ஆதரவிற்காக கொரிய அரசாங்கத்திற்கான இலங்கை அரசாங்கத்தின் ஆழ்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்த வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், முதலீடுகள், அதிகரித்த தொழில் வாய்ப்புக்கள் மற்றும் கொரிய அதிகாரிகளின் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுத்தார். கடந்த காலத்தில், கொரிய தொழில் முயற்சியாளர்களுக்காக இலங்கையில் விசேட முதலீட்டு வலயம் அமைக்கப்பட்டிருந்தமையை நினைவுகூர்ந்த அமைச்சர் பீரிஸ், இந்த முயற்சியை மீளப் பெறுவது குறித்து பரிசீலனை செய்வது சரியான தீர்வாக இருக்கும் என வலியுறுத்தினார்.
கொரிய சபாநாயகர் தனது உரையில், இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே நிலவி வருகின்ற மிதமிஞ்சிய இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்கான கொரிய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். மிகவும் ஏழ்மையான நாடாக இருந்த கொரியா, ஒரு நூற்றாண்டு கால இடைவெளியில் அப்பகுதியில் மாபெரும் பொருளாதார நாடாக மாறியதன் தந்திரோபாயத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய அவர், இலங்கையின் பொருளாதாரத்தை இந்து சமுத்தரத்தில் ஒரு முக்கிய கடல்சார் மையமாக விரிவுபடுத்தி, மேம்படுத்துவதற்காக கொரியாவின் அபிவிருத்தி மாதிரியை இலங்கையும் பின்பற்றலாம் என சுட்டிக்காட்டினார்.
தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன, திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் சீதா அறம்பேபொல, பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் கௌரவ. தாரக்க பாலசூரிய, மருந்தக உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் கௌரவ. சன்ன ஜயசுமண, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல். பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, முதலீட்டு சபையின் தலைவர் ராஜா எதிரிசூரிய, தென்கொரியத் தூதுவர் சந்துஷ் வூன்ஜின் ஜியோங் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் மற்றும் கொரியத் தூதரகத்தின் ஏனைய அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். பொருளாதாரம் மற்றும் அரசியல் தவிர, கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் நல்லிணக்கத்தில் இலங்கையின் முன்னேற்றம், மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தல் மற்றும் அதன் சீர்திருத்த செயன்முறைகளை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
கொரியக் குடியரசின் தேசிய சபையின் சபாநாயகர் மற்றும் அவருடன் இணைந்திருந்த பிரதிநிதிகள் 2021 ஜனவரி 19 முதல் 21 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். 2022 ஜனவரி ஆரம்பத்தில் கொரியாவிற்கு விஜயம் செய்திருந்த வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு கொரிய சபாநாயகருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
வெளிநாட்டு அமைச்சு,
கொழும்பு
2022 ஜனவரி 21