இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையிலான ஒத்துழைப்பு மற்றும் பங்காளித்துவம்

இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையிலான ஒத்துழைப்பு மற்றும் பங்காளித்துவம்

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பு மற்றும் பங்காளித்துவம் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை மற்றும் இந்தோனேசிய அதிகாரிகளுக்கு இடையிலான இரண்டு ஊடாடும் அமர்வுகளை ஜகார்த்தாவில் உள்ள இலங்கைத் தூதரகம் 2022 ஜனவரி 13ஆந் திகதி ஏற்பாடு செய்தது.

இலங்கைத் தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் நாயகம் திருமதி. சித்ராஞ்சலி திஸாநாயக்க மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை, இலங்கை மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களுக்கான சங்கம் மற்றும் தகவல் மற்றும் தொழில்நுட்ப கைத்தொழில் சம்மேளனம் ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். இந்தோனேசியாவின் தேசிய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சபையின் தலைவர் கலாநிதி. இல்ஹாம் ஹபிபி மற்றும் சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்தோனேசியத் தரப்பிலிருந்து பங்கேற்றனர்.

புத்தாக்கம், படைப்பாற்றல் மற்றும் பிரச்சனைகளைத் தீர்க்கும் திறன்களுக்காக இலங்கை பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்பட்டு வருவதாகவும், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தற்போது மென்பொருள் தயாரிப்புக்கள் மற்றும் சேவைகளை அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆபிரிக்காவின் முன்னணி சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதாகவும் இந்தோனேசியா மற்றும் ஆசியானுக்கான இலங்கைத் தூதுவர் யசோஜா குணசேகர தெரிவித்தார். மேலும் தகவல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகள் தற்போது நாட்டின் 4வது பெரிய ஏற்றுமதி வருமானத்தை ஈட்டுகின்றன. குளோபல் சேர்வீஸ் சஞ்சிகையால் அபிவிருத்தியடைந்து வரும் முதல் 10 உலக இடங்களுக்குள் இலங்கை தரவரிசைப்படுத்தப்பட்டமை உட்பட, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்குவதற்காக இலங்கை சர்வதேச நற்பெயரைக் கொண்டுள்ளதுடன், 2017 இல் ஏ.டி. கேர்னியின் உலகளாவிய சேவைகள் இருப்பிடக் குறியீட்டில் 11வது இடத்தையும், கார்ட்னர்ஸின் கடல்சார் சேவைகளுக்கான 30 முன்னணி இடங்களின் தரவரிசை மற்றும் ஐக்கிய நாடுகளின் மின்-அரசக் கணக்கெடுப்பில் தெற்காசியாவில் 1வது இடத்தையும் பிடிpத்துள்ளது.

இலங்கைப் பங்கேற்பாளர்கள் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் இலங்கையில் இருக்கும் வசதிகள் மற்றும் சாத்தியக்கூறுகளான உயர் தகுதி வாய்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், மலிவு விலையின் அ தர அலுவலக இடங்கள், தனியாருக்குச் சொந்தமான அர்ப்பணிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பம் ஃ வணிக செயன்முறை முகாமைத்துவம், எட்டு தொலைத்தொடர்பு இயக்குனரகங்கள் மற்றும் ஐந்து சர்வதேச நீர்மூழ்கிக் கப்பல் கேபிள்கள் மற்றும் தரவுப் பாதுகாப்பிற்கான விதிமுறைகள் குறித்து விரிவாக விளக்கினர். இந்தோனேசியத் தரப்பு இலங்கையுடன் ஒத்துழைக்க விருப்பம் தெரிவித்ததுடன், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கும் பரிந்துரைத்தது. டிஜிட்டல் திறமைகளை மேம்படுத்துவதற்கு இலங்கை மற்றும் இந்தோனேசியா முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடியதுடன், இரு நாடுகளிலிருந்தும் ஸ்டார்ட் எப்களை இணைப்பதற்கான தொடக்கநிலை மன்றத்தை ஏற்பாடு செய்வதற்கும் ஒப்புக்கொண்டனர்.

டிஜிட்டல் பொருளாதாரத்தின் தேவைகளுக்கு ஏற்ப இந்தோனேசியாவில் உள்ள தொழிலாளர்களின் திறன் மற்றும் அதிக மனித வளங்களைப் பயிற்றுவிப்பதற்கான தேவையைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் உள்ள உலகத் தரம் வாய்ந்த தகவல் தொழில்நுட்பக் கல்வி வசதிகளை முன்னிலைப்படுத்துவதற்காக, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம், சினெக் கல்லூரி, இலங்கை தொழில்நுட்பக் கல்லூரி, எடித் கோவன் பல்கலைக்கழகம் ஆகியன இந்தக் கூட்டத்தில் பங்கேற்றன.

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பத் துறையில் இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்கான வரைபடத்தை உருவாக்குவதற்கான தொடர் சந்திப்பு இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது.

இலங்கைத் தூதரகம்,

ஜகார்த்தா

2022 ஜனவரி 19

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close