ஜனவரி 12, புதன்கிழமை ஹங்கேரிய வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் பீட்டர் சிஜார்டோவுடன் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பில், இலங்கை - ஹங்கேரி இருதரப்பு உறவுகளை முடிவு சார்ந்த, பலதரப்பட்ட பங்காளித்துவமாக மாற்றுவதற்கான இலங்கையின் தீவிரமான ஆர்வத்தை வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் வெளிப்படுத்தினார். அமைச்சர் சிஜார்டோ இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இருதரப்பு ஆர்வமுள்ள பல துறைகள் குறித்து இரு அமைச்சர்களும் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். எஞ்சியிருக்கும் நல்லிணக்கப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஹங்கேரியின் அணுகுமுறையைப் பாராட்டிய அமைச்சர் பீரிஸ், நல்லிணக்கத்தின் முன்னேற்றம் மற்றும் நாட்டின் சர்வதேசக் கடமைகளுக்கு இணங்க மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் உள்ள நம்பகமான உள்நாட்டுக் கட்டமைப்பு குறித்தும் ஹங்கேரிய அமைச்சருக்குத் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தில் ஹங்கேரி அங்கம் வகிப்பதாகவும், அதனுடன் இலங்கை முக்கியமான மற்றும் நிலையான பங்காளித்துவத்தைப் பேணி வருவதாகவும் அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டார்.
தற்போதைய உலக சூழலில் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா உறவுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துதல் மற்றும் ஆழமாக்குதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இரு அமைச்சர்களும் எடுத்துரைத்தனர். இந்த நோக்கத்தில், பொருளாதார ஒத்துழைப்புக்கான இலங்கை - ஹங்கேரி கூட்டு ஆணைக்குழுவின் இரண்டாவது அமர்வை இவ்வருட முற்பகுதியில் கூட்டுவதற்கு இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர். ஐரோப்பிய ஒன்றியச் சந்தைக்கான வரியற்ற அணுகலின் மூலம் இலங்கையின் முக்கிய ஏற்றுமதிகள் பயனடைந்து வருவதனால், ஹங்கேரிய சந்தையை அணுகுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை வசதியை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கிடையேயான இரட்டை வரிவிதிப்பு ஒப்பந்தத்தை ஆரம்பத்தில் இறுதி செய்து, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், ஆயுர்வேதம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றிலான ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது ஆர்வம் காட்டப்பட்டது.
இந்த விஜயத்தின் போது, ஹங்கேரியில் இருந்து விஜயம் செய்திருந்த வர்த்தகக் குழுவுடன் சென்ற அமைச்சர் சிஜார்டோ, இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தின் கீழ் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் இணைந்து இலங்கை - ஹங்கேரி வர்த்தக மன்றத்தை ஆரம்பித்து வைத்தார்.
அபிவிருத்தி ஒத்துழைப்பு என்பது இருதரப்பு பங்காளித்துவத்தின் முக்கிய அங்கம் எனக் குறிப்பிட்ட அமைச்சர் பீரிஸ், இலங்கைக்கு 52 மில்லியன் யூரோ கடனுதவியின் மூலம் உட்கட்டமைப்பு அபிவிருத்தி உதவிகளை வழங்கியமைக்காக ஹங்கேரிக்கு இலங்கையின் பாராட்டுக்களைத் தெரிவித்தார். தற்போதைய திட்டங்களில் கொஹூவல மற்றும் கட்டம்பே ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் நிர்மாணிக்கப்படும். நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் அழைப்பின் பேரில், கொஹூவல மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளை அமைச்சர் சிஜ்ஜார்டோ பார்வையிட்டதுடன், இரண்டு அமைச்சர்களும் அந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தனர்.
2022- 2024ஆம் ஆண்டுக்கான ஸ்டைபென்டியம் ஹங்கேரிகம் திட்டத்தின் கட்டமைப்பிற்குள் இலங்கைக்கும் ஹங்கேரிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது அமைச்சர் சிஜ்ஜார்டோவின் விஜயத்தின் மற்றுமொரு அம்சமாகும். இத்திட்டத்தின் கீழ், பொறியியல், விஞ்ஞானம், பொருளாதாரம் மற்றும் நீர் முகாமைத்துவம் உட்பட பரந்த அளவிலான கல்வித் துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலைக் கற்கைகளை மேற்கொள்வதற்குத் தகுதியான இலங்கை மாணவர்களுக்கு ஹங்கேரி ஆண்டுதோறும் 20 புலமைப்பரிசில்களை வழங்குகின்றது. புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் பயனடையும் 86வது நாடாக இலங்கை உள்ளது. இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.
இருதரப்பு ஒத்துழைப்புத் துறையில், பரஸ்பர நலன்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக இரு வெளிநாட்டு அமைச்சுக்களுக்குமிடையே வழக்கமான அரசியல் ஆலோசனைகளைக் கூட்ட வேண்டியதன் அவசியத்தை இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.
கோவிட்-19 முன்வைத்த பகிரப்பட்ட சவால்களை எதிர்கொள்ளும் போது, உலகளாவிய தடுப்பூசி சமத்துவத்தை செயற்படுத்துவதற்காக, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஹங்கேரி போன்ற இருதரப்பு நாடுகளின் ஊடாக ஐரோப்பாவில் உள்ள நாடுகள் வழங்கிய ஆதரவை அமைச்சர் பீரிஸ் ஒப்புக்கொண்டார்.
வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற இந்த இருதரப்பு சந்திப்பில், பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஹங்கேரிய புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் வர்த்தகக் கொள்கை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக்கான இராஜாங்க செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் பீட்டர் செரெஸ்னிஸ் மற்றும் ஹங்கேரிய வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் அமைச்சர் சிஜார்டோவுடன் இந்த சந்திப்பில் இணைந்திருந்தனர்.
வெளிநாட்டு அமைச்சு,
கொழும்பு
2022 ஜனவரி 13