இலங்கைக்கும் ஓமான் சுல்தானேற்றுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 40வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஓமான் ஹொக்கி சங்கத்தின் ஒத்துழைப்புடன் மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் நடாத்தப்பட்ட முதலாவது இலங்கை - ஓமான் கிளப் அளவிலான ஹொக்கி போட்டியின் பரிசளிப்பு விழாவில், இலங்கையின் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டார். ஓமான் சுல்தானேற்றின் கலாச்சாரம், விளையாட்டு மற்றும் இளைஞர்கள் அமைச்சின் துணைச் செயலாளர் பசில் அஹமட் அல் ரவாஸ் ஓமான் தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி இவ்விழாவில் கலந்து கொண்டார்.
2021 டிசம்பர் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் மஸ்கட்டில் உள்ள பௌஷரில் உள்ள சுல்தான் கபூஸ் விளையாட்டு வளாகத்தின் ஹொக்கி மைதானத்தில் நடைபெற்ற ஹொக்கி போட்டியை ஓமான் ஹொக்கி சங்கத்துடன் இணைந்து ஓமானின் கலாச்சாரம், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு நடாத்தியது. ஓமான் ஹொக்கி சங்கத்தின் தலைவர் கலாநிதி மர்வான் அல் ஜுமா, இலங்கை ஹொக்கி சம்மேளனத்தின் தலைவர் கமல் புஷ்பகுமார, ஓமான் - இலங்கை ஹொக்கி குழுவின் தலைவர் திவங்க விஜேரத்ன, ஓமான் ஹொக்கி சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் இரு நாடுகளினதும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சுக்களின் அதிகாரிகளின் முன்னிலையில் ஓமான் சுல்தானேற்றுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாத் 2021 டிசம்பர் 28ஆந் திகதி போட்டியை ஆரம்பித்து வைத்தார்.
இரு நாட்கள் இடம்பெற்ற போட்டியில் டிஃபென்ஸ் வோரியர்ஸ் ஹொக்கி கிளப் மற்றும் கொழும்பு ஹொக்கி அண்ட் ஃபுட்போல் கிளப் ஒஃப் ஸ்ரீ லங்கா ஆகிய அணிகள் ஓமானின் அஹ்லி சிதாப் கிளப் மற்றும் சோஹர் கிளப் ஆகிய அணிகளுடன் மோதின. இலங்கையின் டிஃபென்ஸ் வோரியர்ஸ் ஹொக்கி கிளப் 40வது ஆண்டு சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது.
ஓமான் நடாத்திய டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை - 2021 தகுதிச் சுற்றுப் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்துகொள்வதற்காக 2021 அக்டோபரில் விஜயம் செய்திருந்த இலங்கையின் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களால் இலங்கை மற்றும் ஓமானுக்கு இடையேயான முதலாவது கிளப் அளவிலான ஹொக்கி போட்டி முன்மொழியப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் பாலசூரிய இந்த விஜயத்தின் போது ஓமான் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் மற்றும் ஓமானிய தனியார் துறை உயரதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன், இலங்கைக்கும் ஓமான் சுல்தானேற்றுக்கும் இடையிலான பொருளாதார இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பரஸ்பரம் ஆர்வமுள்ள விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.
இலங்கைத் தூதரகம்,
மஸ்கட்
2022 ஜனவரி 04