அருவமான கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான அரசாங்கங்களுக்கிடையேயான குழுவின் பதினாறாவது அமர்வு 2021 டிசம்பர் 13 முதல் 18 வரை முழுமையாக இணையவழியில் நடைபெற்றது.
யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவின் செயலாளர் நாயகம் புஞ்சி நிலமே மீகஸ்வத்த இந்த வருடாந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கியதுடன், இதில் உலகெங்கிலும் உள்ள அரசுகள், கட்சிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், கலாச்சார நிறுவனங்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்கள் உட்பட கிட்டத்தட்ட எண்ணூறு பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த அமர்வின் போது முன்மொழியப்பட்ட புரவலன் நாடாக இலங்கைக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வு கொழும்பில் நடைபெறவிருந்தது, எனினும் தற்போது நிலவும் தொற்றுநோய் நிலைமையின் காரணமாக அதனை முழுவதுமாக இணையவழியில் நடாத்த வேண்டியிருந்தது.
இருப்பினும், திறப்பு விழா பரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. தொடக்க விழாவில் இலங்கையின் பாரம்பரிய இசை, நடனம் மற்றும் மேள தாளங்களுடன் பாரம்பரிய எண்ணெய் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது.
யுனெஸ்கோ சார்பில் யுனெஸ்கோவின் பிரதிப் பணிப்பாளர் ஜிங் குயூ உரையாற்றினார். இலங்கை அரசாங்கத்தின் சார்பில், யுனெஸ்கோவுக்கான இலங்கைத் தூதுவரும் நிரந்தரப் பிரதிநிதியுமான பேராசிரியர் ஷானிகா ஹிரிம்புரேகம, அமைச்சர்கள், அங்கம் வகிக்காத அரச தரப்பினர்கள் உட்பட அரச தரப்பினரின் உயரதிகாரிகள், நிபுணர்கள், உலகெங்கிலும் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்ற பங்கேற்பாளர்களை வரவேற்றார்.
இலங்கைத் தூதரகம்,
பாரிஸ்
2021 டிசம்பர் 24