மறைந்த பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கான நிதியுதவியை வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் கையளிப்பு

மறைந்த பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கான நிதியுதவியை வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் கையளிப்பு

அண்மையில் பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் கலகக் கும்பலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கான நிதியுதவியொன்றை வெளிநாட்டு அமைச்சில் இன்று (15) இடம்பெற்ற நிகழ்வில் வைத்து வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கையளித்தார்.

பிரியந்த குமாரவின் மரணம் தொடர்பில் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்த அமைச்சர் பீரிஸ், இந்த தருணத்தில் இரு பிள்ளைகளினதும் எதிர்காலம் மற்றும் குடும்பத்தினரின் நிதிப் பாதுகாப்பே கரிசனைக்குரிய பிரதான விடயமாகும் எனத் தெரிவித்தார். இதனடிப்படையில், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கான உதவிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாடி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். தொழில்தருனர் மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்திடமிருந்து நிதிப் பலன்கள் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்யுமாறு பாகிஸ்தான் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வழக்கை விசாரணை செய்வதற்காக பாகிஸ்தானில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள பாகிஸ்தான் பதில் உயர்ஸ்தானிகர் தெரிவித்ததாக அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டார். பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு 100,000 அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு சியால்கோட் பிரதேச வர்த்தக சமூகம் இணக்கம் தெரிவித்துள்ளது.

விசாரணையின் முன்னேற்றங்களை இலங்கை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், மரணத்திற்குக் காரணமானவர்கள் விரைவாக சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட்டு, நீதி நிலைநாட்டப்படும் என நம்புவதாகவும் வெளிநாட்டு அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் வெளிநாட்டு அமைச்சின் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2021 டிசம்பர் 15

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close