சிலோன் டீ, இலங்கையின் சுவையூட்டிகள் மற்றும் தேங்காய் சார்ந்த உற்பத்திகளை பெல்ஜியத்தில் உள்ள கோட்ரிஜ்கில் 2021 அக்டோபர் 27 முதல் 28 வரை நடைபெற்ற இன்ட்ராஃபுட் வர்த்தகக் கண்காட்சியின் 8வது பதிப்பில் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையுடன் இணைந்து பெல்ஜியத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் விளம்பரப்படுத்தியது.
வருடத்திற்கு இருமுறை இடம்பெறும் இந்த இரண்டு நாள் வர்த்தக நிகழ்வு, புதிய அல்லது மேம்படுத்தப்பட்ட தயாரிப்புக்களை உருவாக்குவதற்காக உணவுத் தொழில் முகாமையாளர்களுக்கு உதவும் வகையில், அனைத்து பொருட்கள் மற்றும் அதிநவீன தகவல்களைக் கண்டறிந்து கொள்வதற்காக, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, உற்பத்தி அபிவிருத்தி, உற்பத்தி, கொள்முதல் மற்றும் தரம் ஆகிய துறைகளில் இருந்து மூலப்பொருட்கள், பொருட்கள், சேர்க்கைகள், நுகர்வுப் பொருட்கள் மற்றும் அரை பதப்படுத்தப்பட்ட பொருட்களின் விநியோகஸ்த்தர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுடன் உணவுத் தொழில் முகாமையாளர்களை இணைக்கின்ற, பெனலக்ஸ் (பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பர்க்) மற்றும் வடக்கு பிரான்ஸ் பிராந்தியத்திற்கான தொழில்முறை வர்த்தகக் கண்காட்சியாகும். பெனலக்ஸ் மற்றும் வடக்கு பிரான்ஸ் பிராந்தியத்தில் உணவு மூலப்பொருள் தொழிற்துறைக்கான முதல் சந்திப்பு இடமாக இன்ட்ராஃபுட் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
விச்சி தேங்காய் நிறுவனம் என்ற இலங்கை ஏற்றுமதியாளர் கண்காட்சியில் கலந்து கொண்டு சைவ உணவு மற்றும் பால் உற்பத்திகளுக்கு மாற்றுப் பொருட்களான தேங்காய் பால், தேங்காய் சிரப், கிரீம் செய்யப்பட்ட தேங்காய், மற்றும் சிலோன் டீ மற்றும் சுவையூட்டி வகைகள் உட்பட பல்வேறு பதப்படுத்தப்பட்ட மற்றும் அரைப் பதப்படுத்தப்பட்ட இயற்கைத் தேங்காய் உற்பத்திகளை காட்சிப்படுத்தியதுடன், இவை தொடர்பில் பார்வையாளர்கள் கேட்டறிந்து கொண்டனர். தொழில்துறை முகாமையாளர்கள் மற்றும் விச்சி நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கு இடையே வணிகத் தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக தூதரகம் மெய்நிகர் தொடர்புக்கு உதவியது.
நிலையான விவசாய மூலப்பொருட்களை கொள்வனவு செய்தல் மற்றும் சான்றளித்தல், உணவுத் துறையில் தற்போதைய போக்குகள், புதிய உற்பத்திகள் மற்றும் உணவுத் துறைத் தலைவர்களின் திட்டங்கள் உட்பட தற்போதைய தலைப்புக்களின் பரந்த அளவிலான கருத்தரங்குகளை இரண்டு நாள் நிகழ்வின் போது இந்த நிகழ்வின் அமைப்பாளர்கள் முன்னெடுத்திருந்தனர்.
120 கண்காட்சியாளர்கள் பங்குபற்றிய மற்றும் சுமார் 1500 உணவுத் தொழில் வல்லுநர்களை ஈர்த்துள்ள இன்ட்ராஃபுட் வர்த்தகக் கண்காட்சியானது தொழில்துறை நிபுணர்களுக்காக பிரத்தியேகமாக நடாத்தப்பட்டது. 2018ஆம் ஆண்டிலிருந்து இன்ட்ராஃபுட்டில் இலங்கை பங்குபற்றுவது இது இரண்டாவது தடவையாகும். இந்தக் கண்காட்சியின் அடுத்த பதிப்பு 2023இல் நடைபெறும்.
இலங்கைத் தூதரகம்,
பெல்ஜியம்
2021 நவம்பர் 03