பிரித்தானிய இராணுவத்தின் புகழ்பெற்ற வீரர்களின் சேவையைப் பாராட்டும் நல்லெண்ணத்தின் வெளிப்பாடாக, இலங்கைத் தேயிலையை சுவைபார்க்கும் அமர்வொன்று ரோயல் மருத்துவமனை செல்சியாவில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தால் 2021 செப்டம்பர் 30ஆந் திகதி ஏற்பாடு செய்யப்பட்டது. இங்கிலாந்துடனான நீண்டகால இருதரப்பு உறவுகளுக்கான இலங்கையின் உறுதிப்பாட்டுக்கான அடையாளமாக இந்த நிகழ்வு விளங்குகின்றது.
முன்னர் இலங்கையில் தேயிலைச் சுவைபார்ப்பாளராக செயற்பட்டவரும், தற்போது சர்வதேச தேயிலைக் குழுவில் இடம்பெறுபவருமான மனுஜ பீரிஸால் தேயிலை சுவைபார்ப்பு நடாத்தப்பட்டது. இலங்கையின் ஏழு பிராந்தியங்களான நுவரெலியா, உட புஸ்ஸல்லாவ, திம்புல, ஊவா, கண்டி, சபரகமுவ மற்றும் ருஹூன ஆகியவற்றின் தனித்துவமான சுவைகள், வாசனை மற்றும் வகைகளை பங்கேற்பாளர்கள் கண்டறிந்தனர். அவர்களது விருப்பத்திற்கேற்ப புதிதாக தயாரிக்கப்பட்ட சாயமூட்டப்பட்ட தேநீர் கோப்பையையும் சுவைத்தனர்.
இந்த நிகழ்வின் போது, அடுத்த விடுமுறைக்கான தலமாக இலங்கை காட்சிப்படுத்தப்பட்டதுடன், சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கையில் காணப்படும் பார்வையிடத்தக்க தலங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. பங்கேற்பாளர்களுக்கு சிலோன் டீ பொதிகள், தேயிலை முகமூடிகள் மற்றும் சுற்றுலா நினைவுப் பரிசு ஆகியன வழங்கப்பட்டன.
ஜோன் பைர்ன் மற்றும் ஜிம் லிட்டில் ஆகியோரின் வரலாற்று முக்கியத்துவத்தை விளக்கும் வகையிலான மருத்துவமனையைச் சூழ இடம்பெற்ற சுற்றுப்பயணம் ஒன்றில், இங்கிலாந்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன மற்றும் உயர்ஸ்தானிகராலயத்தின் இராஜதந்திர அதிகாரிகள் பங்குபற்றினர்.
1815ல் வோட்டர்லூ போரில் காலையில் தேநீர் தாராளமாக விநியோகிக்கப்பட்டது என்ற தகவல்களுடன், தேநீர் பருகுவதானது பிரித்தானிய இராணுவத்தில் நீண்டகாலமாக நிறுவப்பட்ட பாரம்பரியமாகும். 1942ஆம் ஆண்டில் அனைத்து வகையான தேயிலைகளையும் சந்தையில் கொள்வனவு செய்து, பிரித்தானிய அரசாங்கம் குறித்த பாரம்பரியத்தை அதிகாரப்பூர்வமாக்கினர். சிலோன், அசாம் மற்றும் ஆபிரிக்காவிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட வலுவான கறுப்புத் தேயிலையையே பிரித்தானிய அரசாங்கம் இராணுவத்திற்காக கொள்வனவு செய்திருந்தது.
1692இல் நிறுவப்பட்ட ரோயல் மருத்துவமனை செல்சியாவானது, கொரியா, போல்க்லாந்து தீவுகள், சைப்ரஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளிலும், மற்றும் இரண்டாம் உலகப் போரிலும் பணியாற்றிய பிரித்தானிய இராணுவத்தின் சுமார் 300 வீரர்களுக்கான ஓய்வு இல்லமும், முதியோர் இல்லமும் ஆகும்.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
லண்டன்
2021 அக்டோபர் 12