ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐரோப்பிய வெளியக நடவடிக்கைச் சேவையின் செயலாளர் நாயகத்துடன்  தூதுவர் ஆசீர்வதம் சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐரோப்பிய வெளியக நடவடிக்கைச் சேவையின் செயலாளர் நாயகத்துடன்  தூதுவர் ஆசீர்வதம் சந்திப்பு

பெல்ஜியத்துக்கான இலங்கைத் தூதுவரும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதுவருமான கிரேஸ் ஆசீர்வதம், 2021 அக்டோபர் 20ஆந் திகதி பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய வெளியக நடவடிக்கைச் சேவையின் செயலாளர்  நாயகம் திரு. ஸ்டெஃபானோ சனினோவை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இருதரப்பு உறவுகளின் நிலை மற்றும் நாட்டில் இடம்பெறும் கோவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசியேற்றும் செயற்றிட்டம், ஜி.எஸ்.பி. பிளஸ் திட்டத்தின் கீழான வர்த்தகம், வர்த்தக வசதி, முதலீடு, அபிவிருத்தி உதவி போன்ற பல விடயங்களிலான தொடர்ச்சியான ஆக்கபூர்வமான ஈடுபாடு குறித்து தூதுவர் ஆசீர்வதம் செயலாளர் நாயகத்திற்கு விளக்கினார்.இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு இடையேயான இருதரப்பு உறவுகள் கூட்டு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கட்டமைப்பின் கீழ் பல ஆண்டுகளாக ஒத்துழைப்பின் பல பகுதிகளில் வேரூன்றியுள்ளதாகக் குறிப்பிட்ட செயலாளர் நாயகம் சன்னினோ, இந்த உறவுகள் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு மேலும் பங்களிப்புச் செய்யும் வகையில் தொடர்ந்தும் விருத்தியடையும் என நம்பிக்கை தெரிவித்தார். கடந்த வாரம் ஜி.எஸ்.பி. பிளஸ் கண்காணிப்புக் குழுவுடனான இலங்கையின் ஆக்கபூர்வமான ஈடுபாடு மற்றும் ஆட்சி, சட்டம் மற்றும் மனித உரிமைகள் குறித்த ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை பணிக்குழுவின் ஐந்தாவது கூட்டத்தை 2021 செப்டம்பர் 29ஆந் திகதி வெற்றிகரமாக முன்னெடுத்தமை குறித்து பாராட்டுக்களைத் தெரிவித்த செயலாளர் நாயகம்  சன்னினோ, விரும்பிய முடிவுகள் சரியான நேரத்தில் அடைந்து கொள்ளப்படும் வரை அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் முன்னேற்றங்களைத் தொடர்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்த்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

கொவிட்-19 தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவுகளை வழங்கும் என செயலாளர் நாயகம் தெரிவித்தார். இருதரப்பு ஒத்துழைப்புக்கும் மேலதிகமாக,  ஆசிய இணைப்பு மூலோபாயம் மற்றும் இந்தோ- சிபிக் மூலோபாயம் போன்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டங்களில் இலங்கையை ஈடுபடுத்துவதற்கான ஆர்வத்தை செயலாளர் நாயகம் வெளிப்படுத்தினார்.

இந்தக் கலந்துரையாடல் சுமுகமான சூழலில் நடைபெற்றது.

இலங்கைத் தூதரகம்,

பிரஸ்ஸல்ஸ்

2021 அக்டோபர் 08

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close