தூதரக அதிகாரிகளுடன் 2021 செப்டம்பர் 23ஆந் திகதி சினோபார்ம் பெய்ஜிங் இன்ஸ்டிடியூட் ஒப் பயோலொஜிகல் ப்ரொடக்ட்ஸ் நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு தூதுவர் கலாநிதி. பாலித்த கொஹொன அழைக்கப்பட்டார். சினோஃபார்ம் தலைமையகத்தின் துணைத் தலைவர் ஷி ஷெங்கி, உயிரியல் பொருட்கள் பிரிவின் தலைவர் ஸு ஜிங்ஜின் மற்றும் சர்வதேசப் பிரிவின் துணைத் தலைவர் யான் பிங் ஆகியோர் தூதுவரை வரவேற்றதுடன், தூதுக்குழுவினரின் சுற்றுப்பயணத்திற்கு வசதிகளை வழங்கினர். மத்திய கட்டுப்பாட்டு அறை மற்றும் வருடத்திற்கு ஐந்து பில்லியன் டோஸ்களை உற்பத்தி செய்யும் தடுப்பூசி உற்பத்தி ஆலைக்கு தூதுவர் விஜயம் செய்தார்.
வர்த்தக அடிப்படையில் இலங்கைக்கு 23 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை வழங்கிய சினோபார்முக்கு தூதுவர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
சினோபார்ம் பெய்ஜிங் இன்ஸ்டிடியூட் ஒப் பயோலொஜிகல் ப்ரொடக்ட்ஸ் நிறுவனம் 1919 இல் தொடங்கப்பட்டதிலிருந்து அதன் தற்போதைய அதிநவீன வசதிகளை வரை படிப்படியாக அடைந்து கொண்ட முன்னேற்றங்கள் குறித்து தூதுக்குழுவுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
விஜயத்தின் போது, இலங்கையில் கோவிட்-19 தடுப்பூசி நிரப்பும் ஆலையொன்றை நிறுவுவதன் நன்மையை தூதுவர் மீண்டும் வலியுறுத்தினார். உள்ளூர் சந்தை வாய்ப்புக்கள் மற்றும் பிராந்தியத்திலான பரந்த சந்தை அணுகலை அவர் மேலும் வலியுறுத்தினார். சினோஃபார்ம் நிர்வாகம் இதற்கு நேர்மறையாக பதிலளித்தது.
முன்னதாக, (07 செப்டம்பர் 2021) தூதுவர் சினோஃபார்முக்கு விஜயம் செய்திருந்ததுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கடிதத்தை நிறுவனத்தின் தலைவர் திரு. லியு ஸிங்ஸெனிடம் கையளித்திருந்தார்.
இலங்கைத் தூதரகம்
பெய்ஜிங்
2021 செப்டம்பர் 24