அடையாளங்களைப் பாதுகாக்கும் சமூகங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை  வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நாயகம் மீண்டும்  வலியுறுத்தல்

 அடையாளங்களைப் பாதுகாக்கும் சமூகங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை  வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நாயகம் மீண்டும்  வலியுறுத்தல்

நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76வது அமர்வின் உயர் மட்ட அமர்வை முன்னிட்டு இடம்பெற்ற சந்திப்பின் போது, வெளிநாட்டு அமைச்சர் (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ் மற்றும் இஸ்லாமிய  ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச் செயலாளர் யூசுப் அல்- தைமீன் ஆகியோர் அடையாளத்தைப் பாதுகாக்கும் சமூகங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பின் நேர்மறையான விளைவுகளை மீண்டும் வலியுறுத்தினர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச் செயலாளருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலை நினைவு கூர்ந்த அமைச்சர் பீரிஸ், இலங்கைக்கும் முஸ்லிம் உலகத்திற்கும் இடையிலான நீண்டகாலத் தொடர்பு மற்றும் நெருக்கமான உறவுகளைக் குறிப்பிட்டார். பலஸ்தீன அரசை முதலில் அங்கீகரித்தவர்களில் இலங்கையும் ஒன்றாவதுடன், இளம் பாராளுமன்ற உறுப்பினராக முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ச இலங்கை பலஸ்தீன நட்புறவுச் சங்கத்தை நிறுவி, கடந்த 25 ஆண்டுகளாக அதன் தலைவராகப் பணியாற்றினார். பலஸ்தீனப் பிரச்சனைக்கு இலங்கை தொடர்ந்தும்  ஆதரவளித்து வருவதாகவும், ரமல்லாவில் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவின் பெயரில் வீதியொன்றுக்கு பெயரிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். மனித உரிமைகள் பேரவை உட்பட பல்தரப்பு அரங்கில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு இலங்கைக்கு வழங்கிய ஆதரவை வெளிநாட்டு அமைச்சர் பாராட்டியதுடன், அரசியல் நோக்கங்களுக்காக நாடுகளை தனிமைப்படுத்துவதை எதிர்த்து, நாடுகள் தமது தேசிய பிரச்சினைகள் தீர்த்துக் கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இலங்கைக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கும் அதன் உறுப்பு நாடுகளுக்கும் இடையிலான  நெருக்கமான மற்றும் நீண்டகால உறவுகளை பொதுச் செயலாளர் அல்-தைமீன் பாராட்டினார். இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளதாகவும், உள்ளூர் சமூகக் கலாச்சாரங்கள் மற்றும் நாட்டின் சட்டத்தை மதிக்க வேண்டும் என முஸ்லிம் சமூக உறுப்பினர்களை எப்போதும் வலியுறுத்தினார். தனிமைப்படுத்தி, தங்களுக்குள் வாழும் மற்றும் ஏனைய சமூகங்களுடன் தொடர்பு கொள்ளாது வாழும் சமூகங்களின் அபாயங்கள் குறித்து குறிப்பிட்ட அவர், இது பிரிவினை மற்றும் பேரழிவுக்கான செயன்முறையாவதுன், இதனால் தீவிரவாதத்திற்கு வழி வகுக்கப்படும் எனக் குறிப்பிட்டார். இலங்கை அரசாங்கத்துடனான உரையாடலையும், கோவிட்-19 ஆல் மரணித்த முஸ்லிம் சமூக உறுப்பினர்களின் உடல்களை முஸ்லிம் மரபுகளின்படி அடக்கம் செய்ய அனுமதிக்கும் நடவடிக்கைகளையும் அவர் பாராட்டினார். இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தீவிரவாதம், வன்முறை மற்றும் வெறுப்புக்கு எதிராக நிற்பதனை அவர் வலியுறுத்தியதுடன், சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய கருவிகளால் தவறான தகவல்கள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

அனைவரும் தமது மரபுகளையும் கலாச்சாரங்களையும் சமமாக மற்றும் எந்தப் பாகுபாடும் அல்லது இடையூறும்  இல்லாமல் பின்பற்ற அனுமதிக்கும் நாடே இலங்கையாகும் என அமைச்சர் தெரிவித்தார். நாட்டில் நடைமுறையில் உள்ள முறைமைகளின் வகையில் அரசாங்கம், பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில் பல முக்கிய பதவிகள் முஸ்லிம் சமூக உறுப்பினர்களால் வகிக்கப்படுவதாகவும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

கோவிட்-19 தொற்றுநோயின் காரணமாக திட்டமிடப்பட்ட விஜயம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நாட்டின்  முன்னேற்றங்களைக் காண தூதுக்குழுவொன்றிற்கு தலைமை தாங்கி இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு செயலாளர் நாயகத்திற்கு வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் அழைப்பு விடுத்தார்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2021 செப்டம்பர் 22

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close