கென்ய வெளிநாட்டு அமைச்சர் தூதுவர் ரெய்செல்லே ஒமாமோவை கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கனநாதன் 2021 செப்டம்பர் 15ஆந் திகதி நைரோபியில் சந்தித்தார்.
ஆரம்பத்தில், இரு நாடுகளுக்கும் இடையே அபிவிருத்தியடைந்து வரும் உறவுகளை எடுத்துரைத்த வெளிநாட்டு அமைச்சர், புதிய சுறுசுறுப்பு மிகுந்த போக்கை ஏற்படுத்தியமைக்கும், பல்வேறு செயற்பாடுகள் மற்றும் ஈடுபாடுகளின் மூலம் கென்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் ஒரு உத்வேகத்தை உருவாக்கியமைக்குமாக உயர்ஸ்தானிகருக்கு நன்றிகளைத் தெரிவித்தார். இருதரப்பு ஒத்துழைப்புக்கான இரு நாடுகளுக்கிடையேயான ஒற்றுமையை நிரூபித்துள்ள நட்புறவை கென்யாவும் இலங்கையும் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக அனுபவித்து வருவதாக வெளிநாட்டு அமைச்சர் ஓமாமோ குறிப்பிட்டார்.
கொழும்புக்கும் நைரோபிக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் சமீபத்திய விமான இணைப்பானது, இரு நாடுகளும் இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்காக பௌதீக ரீதியாக நெருக்கமாக இணைவதற்கான திருப்புமுனையாகும் என உயர்ஸ்தானிகர் கனநாதன் வலியுறுத்தினார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் இலங்கையில் நடைபெற்று வரும் துடிப்பான தடுப்பூசி செயற்றிட்டம் குறித்தும் உயர்ஸ்தானிகர் வெளிநாட்டு அமைச்சருக்கு விளக்கமளித்தார். கோவிட்-19 ஐ வெற்றிகரமாக ஒழிப்பதன் மூலம், விமான இணைப்பு வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, மக்களுக்கிடையிலான தொடர்பு ஆகியன இரு நாடுகளுக்கும் இடையே படிப்படியாக அதிகரிக்க முடியும் என அவர் மேலும் கருத்துத் தெரிவித்தார். பலதரப்பு மன்றங்களில் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக் குறித்து கருத்துத் தெரிவித்த உயர்ஸ்தானிகர் கனநாதன், இரு நாடுகளும் பரஸ்பர நன்மைக்காக இருதரப்பு மன்றங்களில் தொடர்ந்தும் இணைந்து பணியாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டார். கென்யாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் நிறுவனங்கள், பொதுநலவாய அமைப்பு, அணிசேரா இயக்கம், இந்து சமுத்திர விளிம்பு சங்கம் உள்ளிட்ட சர்வதேச மற்றும் பிராந்திய மன்றங்களில் கென்யா மற்றும் இலங்கைக்கு இடையே தற்போதுள்ள பயனுள்ள ஒத்துழைப்பைத் தொடருவதற்கு வெளிநாட்டு அமைச்சர் ஓமாமோ உறுதியளித்தார்.
பல்வேறு ஒத்துழைப்புத் துறைகளாக இருதரப்புப் பொறிமுறைகளை பரவலாக்குவதற்கு வெளிநாட்டு அமைச்சர் மற்றும் உயர்ஸ்தானிகர் இருவரும் ஒப்புக்கொண்டனர். கென்யாவை எமது நல்ல நண்பராகக் கொண்டிருப்பதில் நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம் என்றும் இலங்கை எப்போதும் உங்கள் உண்மையான நண்பராக இருக்கும் என்றும் உயர்ஸ்தானிகர் கனநாதன் தெரிவித்தார். இலங்கை மற்றும் கென்யா ஆகியவற்றுக்கு இடையேயான சிறந்த உறவுகளை இலங்கை பாராட்டுகின்றது. இந்தக் கூட்டாண்மையை நீடித்தமைக்காகவும், இரு நாடுகளுக்கிடையேயான உறுதியான அடித்தளத்தைத் தொடர்ந்தும் பேணியமைக்காகவும் உயர்ஸ்தானிகர் கணநாதனுக்கு அமைச்சர் நன்றிகளைத் தெரிவித்தார்.
இறுதியாக, வெளிநாட்டு அமைச்சு, கென்ய அரசாங்கம் மற்றும் ஏனைய அனைத்து தனியார் நிறுவனங்களினதும் உறுதியான ஆதரவை வெளிநாட்டு அமைச்சர் ஓமாமோ உயர்ஸ்தானிகருக்கு மீள உறுதிப்படுத்தினார்.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
நைரோபி
2021 செப்டம்பர் 21