தேசிய பாதுகாப்பு சபையின் தலைவர் மற்றும் தெற்காசியாவுக்கான சிரேஷ்ட பணிப்பாளரின் விஷேட உதவியாளர் சுமோனா குஹாவுடன் செப்டெம்பர் 07ஆந் திகதி இடம்பெற்ற ஸூம் தளம் வாயிலான பிரியாவிடை வைபவத்தில், கோவிட் நெருக்கடியின் போது, குறிப்பாக தடுப்பூசிகளை வழங்குவதில் இலங்கைக்கு நல்கிய ஆதரவுகளுக்காக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க அமெரிக்க அரசாங்கத்திற்கு நன்றிகளைத் தெரிவித்தார். அமெரிக்க - இலங்கை உறவின் பன்முகத் தன்மையை வலியுறுத்திய தூதுவர், இரு நாடுகளும் குறிப்பாக வலுவான வர்த்தகம், மூலோபாயப் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய துறைகளில் வலுவான ஒத்துழைப்பைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
வொஷிங்டன் டி.சி. யிலான தனது பதவிக்காலத்தின் போது, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு சபை, இராஜாங்கத் திணைக்களம் மற்றும் ஏனைய திணைக்களங்கள் மற்றும் முகவரமைப்புக்களின் அதிகாரிகளிடமிருந்து கிடைத்த ஆதரவையும் தூதுவர் ஆரியசிங்க பாராட்டினார்.
செப்டம்பர் 10ஆந் திகதி, இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களின் சிரேஷ்ட ஆலோசகர் திரு. எர்வின் மசிங்காவுடனான பிரியாவிடை சந்திப்பில், மனித உரிமைகள் பேரவையின் 48வது அமர்வில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிடும் வாய்வழி ரீதியான புதுப்பிப்பைக் கருத்தில் கொண்டு, மனித உரிமைகள் பேரவை தொடர்பான விடயங்கள் சார்ந்த இலங்கையின் கருத்துக்களையும் தூதுவர் தெரிவித்தார். பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் குறித்த கவலைகளைத் தீர்ப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட முன்முயற்சிகள் மற்றும் அரசாங்கத்தால் நிறுவப்பட்ட உள்நாட்டுப் பொறிமுறைகள் குறித்து தூதுவர் திரு. மசிங்காவிடம் விளக்கிய அதே வேளை, விசாரணை, அறிக்கை அல்லது தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான விசாரணை ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்கள், பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் காணாமல் போனோர் அலுவலகம், காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம், இழப்பீடுகள் குறித்த அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் மீதான சிவில் சமூகத்தின் கவலைகள் குறித்து அவர்களுடனான விரிவான ஈடுபாடு ஆகியன தொடர்பான பணிகளையும் விரிவாக விவரித்தார்.
தூதுவரால் முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான உரையாடல்களைப் பாராட்டிய இராஜாங்கத் திணைக்களத்தின் தலைவர் மற்றும் சிரேஷ்ட ஆலோசகரின் விஷேட உதவியாளர், சில முக்கிய பிரச்சினைகளில் இலங்கையின் முன்னோக்கு குறித்து புரிந்து கொள்வதற்கு அவரது முந்தைய அனுபவங்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும் குறிப்பிட்டார்.
இலங்கைத் தூதரகம்
வொஷிங்டன் டி.சி.
2012 செப்டம்பர் 15