இலங்கை சுற்றுலா அபிவிருத்திப் பணியகம் மற்றும் ஒஸ்ட்ரிய கிரிக்கெட் சங்கம் ஆகியன இணைந்து வியன்னாவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் முழுமையான உறுப்பு நாடுகளின் தூதரகங்களின் பங்கேற்புடன் முதலாவது 'தூதரகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை' ஒஸ்ட்ரிரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை ஏற்பாடு செய்தது. இப்போட்டி 2021 செப்டம்பர் 05ஆந் திகதி, ஞாயிற்றுக்கிழமை வியன்னாவில் உள்ள டி லா சாலே ஸ்போர்ட்ஸென்ட்ரமில் நடைபெற்றது.
ஐரோப்பிய மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான மத்திய அமைச்சு, கலை, கலாச்சாரம், சிவில் சேவை மற்றும் விளையாட்டுக்கான மத்திய அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் தூதரகத் தலைவர்கள் மற்றும் அறிஞர்கள், தொழில் முனைவோர், பயண முகவர்கள், பதிவர்கள், சுற்றுலா இதழ்கள், அச்சு மற்றும் மின்னணு ஊடக எழுத்தாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய எட்டு நாடுகள் போட்டிக்காக தமது அணிகளைக் களமிறக்கின.
தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தூதரகம் மற்றும் இலங்கைத் தூதரகம் தகுதி பெற்றன. பாகிஸ்தான் தூதரகம் 'தூதரகக்; கோப்பையை' வென்ற அதே நேரத்தில், இலங்கைத் தூதரகம் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. தூதரக அலுவலகத் தலைவர் சரித்த வீரசிங்க மற்றும் முதல் செயலாளர் லியாகத் அலி வாரிச் ஆகியோர் முறையே இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளை வழிநடத்தினர்.
போட்டியில் ஐரோப்பிய மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான மத்திய அமைச்சு, கலை, கலாச்சாரம், சிவில் சேவை மற்றும் விளையாட்டுக்கான மத்திய அமைச்சின் அனைத்து அதிகாரிகள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான நட்புறவு கிரிக்கெட் போட்டிகளும் இடம்பெற்றன.
விளையாட்டு மைதானம் பதாகைகள், கொடிகள், பின்னணிகளால் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்த அதே வேளை, 'சோ ஸ்ரீ லங்கா' முத்திரை காட்சிப்படுத்தப்பட்டது. உலகின் சிறந்த 'சிலோன் டீ' விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டது. இலங்கை உட்பட அனைத்து பங்கேற்கும் நாடுகளினதும் இசை இசைக்கப்பட்ட அதே நேரத்தில், அனைத்து நாடுகளும் தமது பாரம்பரிய உணவு மற்றும் பானங்களை காட்சிப்படுத்தியமை உண்மையிலேயே ஒரு பண்டிகை சூழ்நிலையை உருவாக்கியது.
கிரிக்கெட் போட்டிகளில் 300 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டதுடன், இலங்கை ஒஸ்ட்ரிய நாட்டினரிடையே ஒரு முன்னணி சுற்றுலாத் தலமாக இலங்கையை காட்சிப்படுத்த முடிந்தது.
தூதரகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஒஸ்ட்ரியாவில் பரந்த ஊடகக் கவனத்தை ஈர்த்தது.
இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை,
வியன்னா
2021 செப்டம்பர் 15