ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவின் அழைப்பின் பேரில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமால் குணரத்ன அவர்களின் தலைமையிலான குழு ரஷ்யாவிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பு சபையின் செயலாளர் நிகோலாய் பத்ருஷோவை சந்தித்தது.
நட்பு ரீதியானதாக இந்த சந்திப்பு இடம்பெற்றது. இராணுவ - தொழில்நுட்ப ஒத்துழைப்பு உட்பட இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.
ரஷ்யாவின் பாதுகாப்பு சபை மற்றும் இலங்கையில் சம்பந்தப்பட்ட முகவர்களின் மூலம் இரு நாடுகளுக்கிடை யேயான தொடர்பை விரிவுபடுத்தும் நோக்கத்தை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இரு நாட்டு மக்களுக்கும் அரசாங்கங்களுக்கும் இடையிலான நட்பை வலியுறுத்திய பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமால் குணரத்ன, சர்வதேச அரங்கில் மற்றும் இருதரப்பு உறவுகளின் பின்னணியில் இலங்கைக்கு ஆதரவுகளை நல்குகின்றமைக்காக ரஷ்யாவிற்கு நன்றிகளைத் தெரிவித்தார்.
இலங்கைத் தூதரகம்
மொஸ்கோ
2021 ஆகஸ்ட் 31