புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஹோ தி தன் ட்ரக் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை 2021 ஜூலை 15ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் சந்தித்தார்.
இலங்கைக்கான வியட்நாம் தூதுவரை வரவேற்ற அமைச்சர் குணவர்தன, அனைத்து பன்முக அரங்குகளிலும் இலங்கைக்கு தொடர்ச்சியாக வியட்நாம் நல்கிய ஆதரவுகளுக்காக நன்றிகளைத் தெரிவித்தார். குறிப்பாக விவசாயம், மீன்பிடி மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இலங்கை - வியட்நாம் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு பங்களிக்கும் திட்டங்களுக்கு அமைச்சர் அவதானம் செலுத்தினார். அரசியல், பொருளாதாரம், முதலீடு, வர்த்தகம், விவசாயம், தேசிய பாதுகாப்பு, விஞ்ஞானம் - தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் கல்வி ஆகியவற்றில் காணப்படுகின்ற பொறிமுறைகளின் மூலம் ஒத்துழைப்பை உயர்த்துவதற்கும் மேம்படுத்துவதற்குமான அதிகரித்த ஆற்றல் இரு நாடுகளுக்கும் இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை - வியட்நாம் உறவுகள் தாபிக்கப்பட்டு 51 ஆண்டுகள் நிறைவடையும் விழா இந்த ஆண்டு அனுஷ்டிக்கப்படவிருக்கும் முக்கியமான மைல்கல்லை கவனத்தில் கொண்ட தூதுவர் ட்ரக், நிறுவப்பட்ட பாராளுமன்ற நட்புறவுக் குழுவின் மூலம் அரசியல் உறவுகளை புத்துயிர் பெறச் செய்வதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்குமிடையேயான நட்புறவின் வலுவான பிணைப்புக்களையும் வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன வலியுறுத்தினார். அணிசேராக் கொள்கையின் அடிப்படையில் வியட்நாமுக்கு இலங்கை அளித்துள்ள ஆதரவுகள் குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், சாத்தியமான பகுதிகளில் இலங்கை மற்றும் வியட்நாமுக்கு இடையில் சிறந்த ஒத்துழைப்பை உருவாக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆகியோர் 2021 ஜூன் 14ஆந் திகதி தொலைபேசி வாயிலான உரையாடலொன்றை வெற்றிகரமாக முன்னெடுத்தனர். இந்த ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக பயனுள்ள ஒத்துழைப்புக்கு வழிவகுக்கும் இலங்கைக்கும் வியட்நாமுக்குமிடையிலான பாரம்பரிய நட்பு குறித்து இரு தலைவர்களும் இந்த உரையாடலின் போது கருத்து தெரிவித்தனர்.
2020ஆம் ஆண்டில் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதன் மூலம், பல நூற்றாண்டுகள் பழமையான வியட்நாம் இலங்கை உறவுகள் முக்கியமானதொரு மைல்கல்லைக் குறித்து நிற்கின்றது. இந்த ஆழமாக வேரூன்றிய நட்புறவானது, கலாச்சாரம், வரலாற்று ஒற்றுமைகள் மற்றும் மிக முக்கியமாக, இரு நாடுகளினதும் மக்களிடையேயான வலுவானதொரு பிணைப்பு நூலாக பௌத்த மதத்தின் பொதுவான பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டது. 17ஆம் நூற்றாண்டில் தென் வியட்நாமில் பௌத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதாக வரலாற்றுப் பதிவுகள் எமக்குக் கூறுகின்ற அதே வேளை, தென் வியட்நாமில் தேரவாத பௌத்த மதத்தை ஸ்தாபிப்பதற்காக இலங்கை மதகுருமார்கள் பங்களிப்புச் செய்ததாகவும் நம்பப்படுகின்றது.
2013 நவம்பர் 23ஆந் திகதி கொழும்பு பொது நூலகத்தில் மறைந்த ஜனாதிபதி ஹோ சி மின் அவர்களின் மார்பிளவு சிலை இலங்கையினால் திறந்து வைக்கப்பட்டது. மேலும், மறைந்த ஜனாதிபதி ஹோ சி மின் அவர்களின் 124வது பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில், 2014ஆம் ஆண்டில் நினைவு முத்திரையொன்றும் வெளியிடப்பட்டது.
மேற்கண்ட திட்டங்கள் வியட்நாமுடனான இலங்கையின் நட்புறவை விளக்குவதுடன், ஒரு காலத்தில் தேசிய இயக்கத்தின் போது வியட்நாமுடனான இலங்கையின் ஒத்துழைப்பின் ஒரு முக்கியமான மைல்கல்லையும் குறித்து நிற்கின்றது.
வெளிநாட்டு அமைச்சு மற்றும் கொழும்பில் உள்ள வியட்நாம் தூதரகம் ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த சந்திப்பில் இணைந்திருந்தனர்.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2021 ஜூலை 19