தூதுவர் தம்மிகா குமாரி சேமசிங்க, 2021 ஜூலை 06ஆந் திகதி வோர்சாவில் உள்ள பெல்வெடெரே அரண்மனையில் வைத்து போலாந்து குடியரசின் ஜனாதிபதி திரு. ஆண்ட்ரேஜ் துடா அவர்களிடம் தனது நற்சான்றுகளைக் கையளித்தார். முறையான கையளிக்கும் நிகழ்வைத் தொடர்ந்து தூதுவர் மற்றும் போலாந்து ஜனாதிபதி ஆகியோருக்கு இடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
தூதுவர் சேமசிங்கவை வரவேற்ற ஜனாதிபதி துடா, இலங்கையுடனான நீண்டகால உறவுகளைப் பாராட்டிய அதே வேளை, பரஸ்பரம் நன்மை பயக்கும் மற்றும் உறுதியான விளைவுகளுக்காக இருதரப்பு ஒத்துழைப்பின் நோக்கத்தை விரைவாக விரிவுபடுத்த போலந்து ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார். லொட் பொலிஷ் எயார்லைன்ஸால் வோர்சா மற்றும் கொழும்புக்கு இடையே 2019ஆம் ஆண்டு முதல் நிறுவப்பட்ட நேரடி விமான இணைப்பு, கோவிட்-19 தொற்றுநோயின் சவால்களுக்கு மத்தியிலும், இருவழி வர்த்தக மற்றும் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கும், அதிகரிப்பதற்கும் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார். போலாந்து முதலீட்டாளர்களுக்கும் வணிகங்களுக்கும் தற்போதுள்ள ஏற்றுமதி - இறக்குமதித் தயாரிப்பு வகைகளை பல்வகைப்படுத்துவதற்கு இலங்கை அதிக வாய்ப்புக்களை வழங்கும் என ஜனாதிபதி துடா நம்பிக்கை வெளியிட்டார். போலாந்து சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு பயணிப்பதற்குத் தயாராக இருப்பதையும், விருப்பத்துடன் இருப்பதையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டியதுடன், ஆர்வமுள்ள பயணிகளுக்கு இடமளிப்பதற்காக இலங்கை தனது சுற்றுலாத் துறையை விரைவில் 'திறக்கும்' என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்புரிமை உட்பட போலாந்தின் வெளியுறவுக் கொள்கை நலன்கள் பற்றிய ஒரு கண்ணோட்டத்தையும் அவர் வழங்கினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கை மக்களின் ஜனாதிபதி துடாவுக்கான வாழ்த்துக்களை தூதுவர் சேமசிங்க வெளிப்படுத்தியதுடன், முதன்மையான ஐரோப்பிய நாடு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் என்ற வகையில், பன்முக மற்றும் முடிவுகள் சார்ந்த கூட்டாண்மைக்காக போலாந்துடனான தனது ஆறு தசாப்த கால இருதரப்பு ஈடுபாட்டை மேலும் முன்னேற்றுவதற்கும் மாற்றுவதற்குமான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களின் மக்களை மையமாகக் கொண்ட, அறிவு சார்ந்த மற்றும் 'வணிக சார்பான' தேசியக் கொள்கைக் கட்டமைப்பை விளக்கிய தூதுவர் சேமசிங்க, இலங்கையின் முன்னுரிமை பெற்ற பகுதிகளில் போலாந்து வணிகங்களுக்கு கிடைக்கக்கூடிய முதலீட்டு வாய்ப்புக்களை எடுத்துரைத்தார். விவசாயம், கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை மற்றும் இயற்கை உரங்களின் பயன்பாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகள், கொழும்பு துறைமுக நகரம், விருந்தோம்பல் தொழில்துறை, உற்பத்தி (குறிப்பாக மின்னணுவியல்), வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுவையூட்டிகள், தேநீர், ரப்பர் மற்றும் தேங்காய் ஆகியன இதில் உள்ளடங்கும். இலங்கை தனது பொருளாதாரத்தில் 'மாற்றத்தக்க தாக்கத்தை' ஏற்படுத்திய வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்று, அதன் மூலம் தனது உலகளாவிய பிம்பத்தை ஒரு முக்கியமான முதலீட்டு இடமாக நிறுவியது என தூதுவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
கோவிட்-19 தடுப்பூசிகள் எளிதாகவும், மலிவாகவும் அணுகிக்கொள்ளும் வகையில் உலகளாவிய ரீதியாக நன்மை பயக்கும் செயற்பாடு மேற்கொள்ளப்படல் வேண்டும் என ஜனாதிபதி டுடா வோர்சாவில் வெளியிட்ட அறிக்கையை வரவேற்ற தூதுவர் சேமசிங்க, அரசாங்கத்தின் கோவிட்-19 தொற்றுத் தணிப்புத் திட்டம் மற்றும் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் குறைந்தது 13 மில்லியன் இலங்கையர்களுக்கு தடுப்பூசிகளை உட்செலுத்துவதற்கான ஜனாதிபதி ராஜபக்ஷவின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும் அந்த செயற்பாட்டில் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய சுருக்கமான கண்ணோட்டத்தை வழங்கினார்.
அதிகரித்த இருதரப்பு வர்த்தகம் மற்றும் வணிக நடவடிக்கைகள், இருவழி சுற்றுலா மற்றும் மக்களுக்கிடையிலான இணைப்பிற்கான நம்பிக்கைக்குரிய வாய்ப்புக்கள் இருப்பதால், கொழும்பில் ஒரு இராஜதந்திரப் பணிமனையை ஆரம்பிக்க போலாந்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்ற நம்பிக்கையையும் தூதுவர் சேமசிங்க வெளிப்படுத்தினார்.
ஜனாதிபதி சான்சலரி அலுவலகத்தின் சர்வதேசக் கொள்கைப் பணியகத்தின் இராஜாங்க செயலாளர் திரு. க்ரிஸ்ஸ்டோஃப் ஸ்கெர்ஸ்கி மற்றும் பாதுகாப்பு, அமெரிக்கா, ஆசியா மற்றும் கிழக்குக் கொள்கைக்கான கீழ்நிலைச் செயலாளர் திரு. மார்கின் பிரைடாக்ஸ் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
தற்போதைய நியமனத்திற்கு முன்னர், இலங்கை வெளிநாட்டு அமைச்சில் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாயப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக தூதுவர் சேமசிங்க செயற்பட்டார். வெளிநாட்டு அமைச்சின் அரசியல், பொருளாதார மற்றும் பலதரப்பு விவகாரப் பிரிவுகளிலும், வெளிநாடுகளில் நியூயோர்க், வொஷிங்டன் டி.சி. மற்றும் புது டில்லி ஆகியவற்றில் உள்ள இலங்கைத் தூதரகங்களிலும் 25 ஆண்டுகளாக இருதரப்பு மற்றும் பல்தரப்பு இராஜதந்திர அனுபவங்களைக் கொண்ட ஒரு தொழில்முறை இராஜதந்திரியாவார் (1996 ஆம் ஆண்டு வகுப்பு).
நியூயோர்க்கிலான தனது இராஜதந்திரப் பணிகளில், மூன்றாம் குழு மற்றும் ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் பணிகளை தூதுவர் சேமசிங்க மேற்கொணடார். 2013 டிசம்பரில் பாதுகாப்புச் சபையின் சிறுவர்கள் மற்றும் ஆயுத மோதல் அறிக்கைகளுக்கான இணைப்புக்களில் ஐ.நா. பொதுச்செயலாளரின் 'பெயரிடுதல் மற்றும் வெட்கமடையச் செயதல் பட்டியலில்' இருந்து இலங்கையை நீக்குவதற்கான பணிகளை வெற்றிகரமாக வழிநடாத்திய அணியின் முன்னணி உறுப்பினராக செற்பட்டார். ஐக்கிய நாடுகள் சபையில் இளைஞர் விவகாரங்கள் குறித்து இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவதற்காகவும் அவர் கணிசமான பங்களிப்புக்களை வழங்கினார்.
கண்டியில் உள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டத்தை ஆரம்பித்த தூதுவர் சேமசிங்கவிற்கு, அமெரிக்காவின் பென்சில்வேனியா, ஸ்வர்த்மோர் கல்லூரியில் சர்வதேச உறவுகள் மற்றும் பொதுக் கொள்கையில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி., ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் மேம்பட்ட சர்வதேச ஆய்வுகள் கல்லூரியிலிருந்து சர்வதேச பொதுக் கொள்கையில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார்.
நிக்கவரெட்டியவில் பிறந்த தூதுவர் சேமசிங்க, இலங்கையின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள நிக்கவரெட்டிய பிரதேச சபையில் உள்ள திம்பிரியாவவைச் சேர்ந்தவராவார்.
இலங்கைத தூதரகம்
வோர்சா
2021 ஜூலை 09
..........................................
Link to Polish Presidential Palace website: https://www.prezydent.pl/aktualnosci/listy-uwierzytelniajace/art,50,prezydent-przyjal-listy-uwierzytelniajace-od-ambasadorow-czterech-panstw.html