சிங்கப்பூர் மற்றும் புரூனே தாருஸ்ஸலாமில் உள்ள இலங்கையர்களுடன் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ்  குணவர்தன மெய்நிகர் ரீதியாக சந்திப்பு

 சிங்கப்பூர் மற்றும் புரூனே தாருஸ்ஸலாமில் உள்ள இலங்கையர்களுடன் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ்  குணவர்தன மெய்நிகர் ரீதியாக சந்திப்பு

சிங்கப்பூர் மற்றும் புரூனே தாருஸ்ஸலாமில் உள்ள சமூகம் மற்றும் வணிக சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையர்கள், மகா சங்கத்தினர் மற்றும் ஏனைய மதத் தலைவர்களுடன் 2021 ஜூலை 01ஆந் திகதி நடைபெற்ற மெய்நிகர் சந்திப்பில் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன உரையாடினார். இந்த ஊடாடும் அமர்வில் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய மற்றும் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோருடன் வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன இணைந்திருந்தார்.

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் தாய்நாட்டோடு மீண்டும் இணைவதற்கான தொடர்ச்சியான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கும், இலங்கை மற்றும் அவற்றின் புரவலன் நாடுகளுக்கு இடையிலான நாடுகடந்த உறவுகளை வளர்ப்பதில் அவர்களின் முக்கிய பங்கை வகிப்பதற்குமான இந்தப் புதிய முயற்சியை வெளிநாட்டு அமைச்சர் குணவர்தனவின் வழிகாட்டுதலின் கீழ் புதிதாக நிறுவப்பட்ட வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் பிரிவு மேற்கொண்டுள்ளது.

இந்த சவாலான காலத்தில், கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான இலங்கையின் போராட்டத்தில் ஏராளமான  வழிகளில் அவர்கள் நல்கிய கணிசமான பங்களிப்புக்களுக்காக, குறிப்பாக அவசர மருத்துவப் பொருட்களை வழங்கி தொடர்ந்தும் நல்கிய ஆதரவுகளுக்காக வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன தனது உரையின் ஆரம்பத்தில் சிங்கப்பூர் மற்றும் புரூனே தாருஸ்ஸலாமில் உள்ள இலங்கைச் சமூகத்தினருக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் உள்ள மகா சங்கத்தினர் உள்ளிட்ட இலங்கைச் சமூகத்தினர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வளர்ப்பதில் மிகவும் பயனுள்ள பாலமாக அமைந்துள்ளனர் என்ற உண்மையை எடுத்துக்காட்டிய வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன, பொருளாதாரம், சமூகம் அல்லது கலாச்சாரம் போன்ற ஒவ்வொரு துறையிலும் இலங்கையின் முன்னேற்றத்திற்கும் செழிப்பிற்கும் பங்களிப்புச் செய்யும் வகையில், தற்போதைய சூழலில் இன்னும் தீவிரமாக அதே பாதையில் தொடர்ந்தும் செயற்படுமாறு கேட்டுக்கொண்டார். குறிப்பிடத்தக்க ஆண்டுகளில் நாட்டின் அபிவிருத்திக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை சிங்கப்பூரிலுள்ள துடிப்பான இலங்கைச் சமூகத்தினர் வழங்கியிருப்பதை நினைவுகூர்ந்த அவர், சம்பந்தப்பட்ட இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பரம் நன்மை பயக்கும் உறவுகளை உருவாக்குவதற்கான வாய்ப்புக்களை இந்த சிறந்த இணைப்புகள் இன்னும் வழங்கும் என நம்பிக்கை வெளியிட்டார்.

ஆசியான் நாடுகளுடனான பொருளாதார ஒருங்கிணைப்புக்கு ஏராளமான சந்தர்ப்பங்கள் இருப்பதனை தனது  உரையில் வலியுறுத்திய பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, இந்த  இரண்டு முக்கிய ஆசியான் நாடுகளுடனான ஈடுபாட்டிலிருந்து இலங்கை முழுமையான நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்காக சிங்கப்பூர் மற்றும் புரூனே தாருஸ்ஸலாமில் உள்ள இலங்கையர்களின் திறன்கள் மற்றும் செல்வாக்கினாலான தொடர்ச்சியான ஆதரவைக் கோரினார்.

தொடக்கக் கலந்துரையாடலை மிதப்படுத்திய வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, அதிகரித்த பொருளாதாரப் பங்களிப்புக்கள் மற்றும் சமூகத்தில் அவர்களின் விலைமதிப்பற்ற வகிபாகங்களில் தமது பங்கை வகிப்பதற்கானதொரு வழியில் முன்வருமாறு வலியுறுத்திய அதே வேளை, இலங்கையின் அபிவிருத்தி மற்றும் முயற்சிகளுக்கு முன்னெப்போதையும் விட வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களிடமிருந்தான பரந்த ஆதரவு  அவசியம் என தனது தொடக்க உரையில் வலியுறுத்தினார்.

சிங்கப்பூர் மற்றும் புரூனே தாருஸ்ஸலாமில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களின் நலனைக் கவனிக்கும் அதே  வேளையில், தொற்றுநோயின் போது அவர்களைத் திருப்பி அனுப்பும் முயற்சிகளில் உயர் ஸ்தானிகராலயத்திற்கு ஏற்பட்ட பல சவால்களை சமாளிப்பதற்கு நல்கிய விலைமதிப்பற்ற ஆதரவு மற்றும் பங்களிப்புக்களுக்காக சிங்கப்பூரில் உள்ள இலங்கை சமூகத்தினருக்கு சிங்கப்பூருக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் சஷிகலா பிரேமவர்தன தனது சுருக்க உரையில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். நன்கொடைகள் மற்றும் பங்களிப்புக்களை முறையாகப் பயன்படுத்துவதற்கான சிறந்த ஒருங்கிணைப்பின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

கலந்துரையாடலில் பங்கேற்ற மகா சங்கத்தினர் மற்றும் ஏனைய மதத் தலைவர்கள் மற்றும் சிங்கப்பூர் மற்றும்  புரூனே தாருஸ்ஸலாமில் உள்ள 15 க்கும் மேற்பட்ட சமூக மற்றும் வணிக சங்கங்களின் பிரதிநிதிகள் தற்போதைய கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிராகப் போராடுவதிலான இலங்கையின் முயற்சிகளுக்கு தமது வலுவான ஆதரவை வெளிப்படுத்திய அதே வேளை, பல வகையான நன்கொடைகள் மற்றும் பங்களிப்புக்களை நல்குவதற்கும் உறுதியளித்தனர். தாய்நாட்டின் முன்னேற்றத்திற்காக சாத்தியமான அனைத்து வழிகளிலும் தமது முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதில் வெளிநாட்டு அமைச்சு மற்றும் சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் ஆகியவற்றுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதையும் அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

பொருளாதார விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் பி.எம். அம்சா, தூதரக விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் பிரிவிற்கான பணிப்பாளர் நாயகம் விஸ்வநாத் அப்போன்சு மற்றும் வெளிநாட்டு அமைச்சின் பல சிரேஷ்ட அதிகாரிகள் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுடன் ஈடுபடும் இந்தத் தொடக்க அமர்வில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற மகா சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பிரித் அமர்வைத் தொடர்ந்து இந்த நிகழ்வு நிறைவடைந்தது.

தற்போது இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 10000 தொகையிலான இலங்கையர்களின் ஒரு துடிப்பான சமூகம் சிங்கப்பூரில் இருப்பதுடன், கிட்டத்தட்ட வெளிநாட்டிலுள்ள 500 இலங்கையர்கள் புரூனே தாருஸ்ஸலாமில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2021 ஜூலை 03

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close