எம்.வி எக்ஸ் - பிரஸ் பேர்ள் கப்பலினால் சுற்றுச்சூழலில் ஏற்படும் தாக்கத்தை மதிப்பீடு செய்வதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு உதவும் முகமாக, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தினூடாக ஐரோப்பிய ஒன்றியம் / ECHO (ஐரோப்பிய ஒன்றிய நிதியத்தின் அவசரக் குழு) மூன்று (03) தொழில்நுட்ப நிபுணர்களை வழங்கி ஆதரவுகளை அளிக்கின்றது.
அவசரநிலைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள எண்ணெய் மற்றும் அபாயகரமான மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களிலான நிபுணர் திரு. ஸ்டீபன் லு ஃப்ளோச், அபாயகரமான மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மற்றும் கடல் குப்பை ஆகியவற்றில் நிபுணத்துவம் வாய்ந்த திருமதி. காமில் லா குரோக்ஸ் மற்றும் எண்ணெய், அபாயகரமான மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களினாலான கசிவுகளைத் தொடர்ந்து ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கத்தை மதிப்பீடு செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்த லூய்கி அல்காரோ போன்ற முந்தைய அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள் இதில் உள்ளடங்குவர்.
தற்போதைய நிலைமை மற்றும் சம்பந்தப்பட்ட பங்குதாரர் முகவரால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நிபுணர்களின் குழுவுக்கு விளக்கமளிக்கும் முகமாக வெளிநாட்டு அமைச்சினால் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. சமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவிற்கான பணிப்பாளர் நாயகம் திருமதி. ஹசந்தி உருகொடவத்தே திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு ஹனா சிங்கர் ஹம்டி ஆகியோர் இந்த சந்திப்புக்கு தலைமை தாங்கினர். ஏற்பட்ட அனர்த்தம் பற்றிய அறிமுகத்துடன் இந்த சந்திப்பு ஆரம்பமாகியதுடன், தொடர்புடைய ஆணையுடன் சம்பந்தப்பட்ட பங்குதாரர் நிறுவனத்தினால் மேலதிக விரிவாக்கம் மற்றும் புதுப்பிப்புக்களுக்கான பின்னணி விபரிக்கப்பட்டது.
அனர்த்தத்துடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் மற்றும் முகவரமைப்புக்களின் வகிபாகம் தொடர்பாக முகவரமைப்புக்களின் ஆணைகளைப் புரிந்து கொள்வதற்கும் மற்றும் முக்கிய பங்குதாரர் முகவர் மூலமாக எதிர்கால நடவடிக்கை குறித்த பரிந்துரைகளுடன் இந்த செயன்முறையை ஆதரிப்பதற்காக 03 நிபுணர்களும் எவ்வாறு பங்களிப்புச் செய்ய முடியும் என்பது பற்றிய ஆரம்பக் கலந்துரையாடல்களுக்கும் இந்த சந்திப்பு வழி வகுக்கின்றது.
அரச நகர அபிவிருத்தி அமைச்சு, கடலோரப் பாதுகாப்பு, கழிவகற்றல் மற்றும் சமூகத் தூய்மை, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, இலங்கை கடற்படை, இலங்கை கடலோர காவற்படை, தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம், மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம், வணிகக் கப்பல் செயலகம், இலங்கை துறைமுக அதிகாரசபை, மீன்வள மற்றும் நீர்வளத் திணைக்களம், சுற்றுச்சூழல் அமைச்சு, நீதி அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அனர்த்தத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் சார்ந்த சேதத்தை மதிப்பீடு செய்வதற்காக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைக்குழுவால் நிறுவப்பட்ட குழுவின் பல்வேறு நிபுணர்கள் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்ற பங்குதாரர் முகவர்ளில் உள்ளடங்குவர்.
கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அதிகாரசபை, சுற்றுச்சூழல் அமைச்சு, மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் போன்ற ஏனைய அரச நிறுவனங்களுடன் இந்த நிபுணர்கள் எதிர்வரும் நாட்களில் நெருக்கமாகப் பணியாற்றுவர்.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2021 ஜூன் 18