சர்வதேச உள்நாட்டு தொழிலாளர் தினம் மற்றும் குடும்பங்களுக்கு பணம் அனுப்பி வைக்கும் சர்வதேச தினம் ஆகியவற்றுக்கு அமைவாக, வெளிநாடுகளில் மரணித்த இலங்கைத் தொழிலாளர்களுக்கான இழப்பீட்டுக் கடிதங்களை அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்குக் கையளிக்கும் நிகழ்வு வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவினால் அமைச்சின் வளாகத்தில் 2021 ஜூன் 16 ஆந் திகதி ஏற்பாடு செய்யப்பட்டது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களினூடாக வெளிநாடுகளில் உள்ள அந்தந்த தொழில் தருனர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 30 மில்லியன் இலங்கை ரூபாய் பெறுமதியிலான இழப்பீட்டுக் கடிதங்கள் வெளிநாட்டு அமைச்சர் கௌரவ. தினேஷ் குணவர்தனவுடன் இணைந்து வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் (பேராசிரியர்) ஜயநாத் கொலம்பகே, கொன்சியூலர் விவகாரப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திரு. விஸ்வநாத் அப்போன்சு, இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் தூதரகத் தலைவர் திரு. சிம்ரின் சிங் ஆகியோரினால் வெளிநாடுகளில் மரணித்த புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒப்படைக்கப்பட்டன.
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்காக அமைச்சு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து இந்த நிகழ்வின் போது வெளிநாட்டு அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், மரணித்தவர்களின் குடும்பங்களுக்கு மத்தியில் உரையாற்றிய கௌரவ அமைச்சர், குறித்த மரணித்த நபரின் உயிரிழப்பு ஈடுசெய்யப்பட முடியாதது எனினும், மரணித்த தொழிலாளர்கள் சார்பாக இழப்பீட்டினை வழங்குவது பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு ஒருவித நிவாரணமாக அமையும் எனத் தெரிவித்தார்.
குறித்த இழப்பீடு, சம்பள நிலுவைத் தொகை மற்றும் ஏனைய நிவாரணங்களை மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் உதவியுடன் அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவு பெற்றுக் கொண்டது. குறிப்பிட்ட நாட்டின் அதிகாரிகளுடன் அந்தந்த நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் தொடர்ச்சியான பின்தொடர்தல் நடவடிக்கைகளின் விளைவாகவே இந்தக் கொடுப்பனவுகள் பெற்றுக் கொள்ளப்படன.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2021 ஜூன் 16