ஐக்கிய அமெரிக்கத் தூதரகப் பொறுப்பாளர் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

 ஐக்கிய அமெரிக்கத் தூதரகப் பொறுப்பாளர் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் தூதரகப் பொறுப்பாளர் மார்ட்டின் டி. கெல்லி 2021 ஜூன் 08ஆந் திகதியாகிய இன்றைய தினம் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்தார். இலங்கைக்கு தொடர்ந்தும் நல்கிய ஆதரவுகளுக்காக அமெரிக்க அரசாங்கத்திற்கும், அதன் மக்களுக்கும் வெளிநாட்டு அமைச்சர் நன்றிகளைத் தெரிவித்தார். கோவெக்ஸ் திட்டத்தின் மூலம் கோவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும் என்ற அமெரிக்க ஜனாதிபதியின் சமீபத்திய அறிவிப்பை அவர் குறிப்பாகப் பாராட்டினார்.

2021 ஜூன் 04ஆந் திகதி வருகை தந்த யுஎஸ்எய்ட் அவசர மருத்துவப் பொருட்கள் மற்றும் எம்.வி. எக்ஸ்- ரஸ் பேர்ள் கப்பல் பேரழிவால் ஏற்பட்ட பாதகமான சுற்றுச்சூழல் பாதிப்பைத் தணிப்பதற்காக நல்கப்பட்ட அமெரிக்கத் தொழில்நுட்ப ஆதரவு ஆகியவற்றுக்கு அவர் நன்றிகளைத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் கலந்து கொண்ட வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் மற்றும் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தேசிய தடுப்பூசித் திட்டத்தின் நிலை குறித்து விரிவாக விளக்கினார்.

2021 மே 18ஆந் திகதி அமெரிக்கக் காங்கிரஸின் உறுப்பினரான டெபோரா ரோஸ் அம்மையார் அறிமுகப்படுத்திய உத்தேச தீர்மான இல. H.Res.413 குறித்த அரசாங்கத்தின் ஆழ்ந்த கவலைகளை தூதரகப் பொறுப்பாளர் கெல்லிக்கு அமைச்சர் வெளிப்படுத்தினார். இந்தத் தீர்மானம் இலங்கையில் நல்லிணக்க முயற்சிகளுக்கு பயனுள்ளதாக இருக்காது என அமைச்சர் விளக்கினார். மேற்கண்ட தீர்மானத்தை வெளிநாட்டு விவகாரங்கள் குழுச் சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் குறித்த தீர்மானத்தை மீளப் பெறுவதற்கான அல்லது திருத்துவதற்கான அரசாங்கத்தின் கவலைகள் மற்றும் நிலைப்பாட்டைத் தெரிவிப்பதற்காக அமெரிக்க வெளியுறவுத் திணைக்களத்தின் உடனடியான தலையீட்டை அவர் நாடினார்.

வர்த்தக மற்றும் முதலீட்டுக் கட்டமைப்பு ஒப்பந்தத்தின் பங்காண்மை உரையாடல் மற்றும் இணைந்த ஆணைக்குழு உள்ளிட்ட பல இருதரப்பு விடயங்கள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டன.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2021 ஜூன் 08

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close