2021 ஜூன் 07ஆந் திகதி, திங்கட்கிழமை இடம்பெற்ற ரஷ்யக் கூட்டமைப்பின் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் அவர்களுடனான தொலைபேசி உரையாடலின் போது, கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்வதில் இலங்கைக்கு ரஷ்யா நல்கிய ஆதரவுகளுக்காக வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
இது சம்பந்தமாக, இலங்கையின் நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்திற்கு ஆதரவுகளை வழங்கும் முகமாக, ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அணுகிக் கொள்வதற்கான ரஷ்யாவின் உதவி மற்றும் தடுப்பூசியைத் தயாரிப்பதில் சம்பந்தப்பட்ட தொற்றுநோயியல் மற்றும் உயிரியியல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கிடையிலான தற்போதைய ஒத்துழைப்பு ஆகியவற்றை வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன வரவேற்றார்.
மனித உரிமைகள் பேரவை உட்பட பல்தரப்பு அரங்குகளில் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஆதரவுகளுக்காக, ரஷ்யாவுக்கான இலங்கையின் பாராட்டுக்களை வெளிநாட்டு அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்.
இரு வெளிநாட்டு அமைச்சுக்களினதும் கட்டமைப்பிற்குள் திட்டமிடப்பட்டுள்ள இருதரப்பு ஆலோசனைகள் மற்றும் அரசாங்கங்களுக்கிடையிலான வர்த்தக, பொருளாதார, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான ஆணைக்குழு ஆகியன குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2021 ஜூன் 09