2021 மே 18ஆந் திகதி, செவ்வாய்க்கிழமை வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களை வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்த கொழும்பைத் தளமாகக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்கள், ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை ஒத்துழைப்பு மற்றும் ஜி.எஸ்.பி. பிளஸ் செயன்முறை உள்ளிட்ட பரஸ்பர நலன்கள் குறித்து கலந்துரையாடினர்.
இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் நிலவும் பன்முக ஒத்துழைப்பை வெளிநாட்டு அமைச்சர் வரவேற்றார். 2021 ஜனவரி 25ஆந் திகதி நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை கூட்டு சந்திப்பு தொடர்பான பின்தொடர் நடவடிக்கை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
வயது வந்தோர் வைரஸ் தாக்கத்திற்கு உட்படுவதனைத் தடுப்பதற்கான தேசிய செயற்றிட்டத்தின் பின்னணியில், இலங்கை உள்ளிட்ட நாடுகள் கோவிட்-19 தடுப்பூசிகளை சமமாக அணுகிக் கொள்வதற்கான உலகளாவிய முயற்சிகளை ஆதரிக்கும் கோவெக்ஸ் வசதிக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்களிப்பு தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் சைபி, பிரான்சின் தூதுவர் எரிக் லாவெர்டு, இத்தாலியின் தூதுவர் ரீட்டா மன்னெல்லா, நெதர்லாந்தின் தூதுவர் டஞ்சா கொங்கிரிப், ஜேர்மனியின் தூதுவர் ஹோல்கர் சீபர்ட் மற்றும் ரூமேனியாவின் தூதரகப் பொறுப்பாளர் விக்டர் சியுஜ்தியா ஆகியோர் இந்த சந்திபபில் பங்கேற்றனர். பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2021 மே 19