கொழும்பைத் தளமாகக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட இராஜதந்திரப் பிரதிநிதிகளை 2021 ஏப்ரல் 09, வெள்ளிக்கிழமை வெளிநாட்டு அமைச்சில் சந்தித்த வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன, இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கினார். அரசியலமைப்பு சீர்திருத்த செயன்முறை, ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் நல்லிணக்க வழிமுறைகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான முன்னேற்றம் உள்ளிட்ட பல செயற்பாடுகள் குறித்த புதுப்பிக்கப்பட்ட தகவல்களை அவர் தூதுவர்களுக்கு வழங்கினார்.
ஊடாடும் வகையில் அமைந்த இந்த சந்திப்பானது, வர்த்தகம், முதலீடு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய - இலங்கை ஒத்துழைப்பு குறித்த கலந்துரையாடல், ஜனவரி 2021 இல் இலங்கை - ஐரோப்பிய ஒன்றிய கூட்டு ஆணைக்குழுவின் 23வது கூட்டத்தைத் தொடர்ந்து திட்டமிடப்பட்ட இலங்கை - ஐரோப்பிய ஒன்றிய கூட்டு ஆணைக்குழுவின் துணைக் குழுக்களைக் கூட்டுவதற்கான திட்டங்கள் ஆகியன சார்ந்த கலந்துரையாடல்களை உள்ளடக்கியிருந்தது. கோவிட்-19 / கோவிட்டுக்குப் பிந்தைய சூழலில் இலங்கையில் சுற்றுலாவை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பான இலங்கை சுகாதார நெறிமுறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
பிரான்சின் தூதுவர் எரிக் லவெர்டு, இத்தாலியின் தூதுவர் ரீட்டா மன்னெல்லா, ருமேனியத் தூதுவரின் தூதரகப் பொறுப்பாளர் விக்டர் சியுஜ்தியா மற்றும் ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதித் தூதரகத் தலைவர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2021 ஏப்ரல் 10