சிக்கித் தவித்த 248 புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களை ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் மூலமாக 2021 ஏப்ரல் 01 ஆந் திகதி நாட்டிற்கு மீள அனுப்பி வைப்பதற்கான விஷேட ஏற்பாடுகளை ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கை வெளிநாட்டு அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் மேற்கொண்டது. இதில் சுமார் 45 பேர் தமது வீசாக்கள் காலாவதியானதன் பின்னர் ஓமான் சுல்தானேற்றில் தங்கியிருந்த புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்கள் ஆவர். தொழில்களை இழந்தவர்கள், தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தஞ்சமடைந்தவர்கள், சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் மற்றும் மருத்துவ அவசரநிலைக்கு உட்பட்டவர்கள் ஏனைய புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களில் உள்ளடங்குவர்.
ஆதரவற்ற புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களின் தண்டம் மற்றும் அபராதங்களை முழுமையாக தள்ளுபடி செய்வதன் மூலம் ஓமான் அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்கியது. அவர்கள் நாடு திரும்புவதற்குத் தேவையான பயண ஆவணங்களை மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் இலவசமாக வழங்கியது. அபராதம் பெற்ற புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்கள் தண்டம் / அபராதமற்ற விதிவிலக்குடன் நாடு திரும்புவதற்கு சலுகையளித்தமைக்காக மேன்மை தங்கிய சுல்தான் ஹைதம் பின் தாரிக் அவர்களின் அரசாங்கத்திற்கு ஓமான் சுல்தானேற்றுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்ததுடன், 2021 ஜூன் 30 ஆந் திகதி வரை பொது மன்னிப்புக் காலத்தை மேலும் நீடிக்குமாறு கோரிக்கை விடுத்தார். பொது மன்னிப்பைப் பயன்படுத்தி தண்டம் மற்றும் அபராதங்களை முழுமையாக தள்ளுபடி செய்வதன் மூலம் சுமார் 425 வறிய புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களை நாட்டிற்கு மீள அனுப்பி வைப்பதற்கான வசதிகளை தூதரகம் வழங்கியுள்ளது.
248 ஆதரவற்ற புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்தவுடன் அவர்களுக்கான இலவசமான பி.சி.ஆர். பரிசோதனைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டதுடன், அவர்கள் அனைவருக்கும் தங்குமிடம், உணவு மற்றும் ஏனைய வசதிகளுடன் கூடிய 14 நாட்களுக்கான இலவச தனிமைப்படுத்தல் வசதிகளை அரசாங்கத்தினால் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் வழங்கப்பட்டது.
இலங்கைத் தூதரகம்
மஸ்கட்
2021 ஏப்ரல் 05