உயர் ஸ்தானிகர் கனநாதன் நைரோபியில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் தனது தகுதிச் சான்றுகளை கையளிப்பு

உயர் ஸ்தானிகர் கனநாதன் நைரோபியில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் தனது தகுதிச் சான்றுகளை கையளிப்பு

நைரோபியில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம், ஐக்கிய நாடுகள் வாழ்விடம் மற்றும் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்திற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக அங்கீகாரமளிக்கப்பட்டுள்ள கென்யாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் வி. கனநாதன் நைரோபியில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கான பணிப்பாளர் நாயகம் திருமதி. சஹ்லே-வேர்க் செவ்டு அவர்களடம் 2021 ஜனவரி 14ஆந் திகதி இடம்பெற்ற மெய்நிகர் விழாவில் தனது தகுதிச் சான்றுகளை கையளித்தார்.

விழாவைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலின் போது, ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் வாழ்விடத்தின் நிறுவனத் திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் ஆகிய இரண்டிலுமான இலங்கையின் பங்கேற்பை பாராட்டிய நைரோபியில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம், குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தின் குறிக்கோள்களையும் இலக்குகளையும் உணர்வதற்கான ஆழ்ந்த அர்ப்பணிப்புள்ள தெற்காசியாவின் முன்னணி நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும் எனக் குறிப்பிட்டார்.

சதுப்பு நிலங்கள், கடல் குப்பை மற்றும் மைக்ரோ பிளாஸ்டிக் ஆகியவற்றின் உலகளாவிய ஆரோக்கியத்திற்கான நிலையான முகாமைத்துவம், சுற்றுச்சூழல் ரீதியாக கழிவுகளை நிர்வகித்தல் மற்றும் 2019 இல் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் பேரவையின் நான்காவது அமர்வின் போது உணவு இழப்பு மற்றும் கழிவுகளைத் தடுப்பதற்கான நிலையான நடவடிக்கைகள் மற்றும் புதுமையான தீர்வுகள் ஆகிய தலைப்புக்களில் இலங்கை 4 தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கியுள்ளதாக தெரிவித்த உயர் ஸ்தானிகர், உலகளாவிய சமூகத்திற்கு உதவும் அத்தகைய தீர்மானங்கள் தொடர்பில் உறுப்பு நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்துடன் இணைந்து இலங்கை தொடர்ந்தும் செயற்படும் என நைரோபியில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு உறுதியளித்தார்.

நைரோபியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் உயர் ஸ்தானிகர் ஆகிய இருவரும் ஐக்கிய நாடுகள் நிலையான நைதரசன் முகாமைத்துவம் குறித்த உலகளாவிய பிரச்சாரத்தின் முக்கியத்துவம் குறித்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதோடு, 2030 க்குள் நைதரசன் கழிவுகளை பாதியாகக் குறைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் நிலையான நைதரசன் முகாமைத்துவம் குறித்த கொழும்புப் பிரகடனத்தை ஏற்றுக்கொள்வதற்காக 2019 அக்டோபரில் கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் ஆதரவுடன் இலங்கை நடாத்திய கூட்டத்தை நினைவு கூர்ந்தனர்.

இறுதியாக, 2021 பெப்ரவரியில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் ஒன்றுகூடலுக்கு (யு.என்.இ.ஏ.-5) முன்னதாக தகுதிச் சான்றுகளை கையளிக்கும் விழாவை ஏற்பாடு செய்தமைக்காக நைரோபியில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கான பணிப்பாளர் நாயகததிற்கு உயர் ஸ்தானிகர் கனநாதன் நன்றிகளைத் தெரிவித்த அதே வேளையில், நைரோபியில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம், ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் வாழ்விடத்துடனான உறவுகளை ஒத்துழைப்பின் அடையாளம் காணப்பட்ட அனைத்து முக்கிய துறைகளிலும் ஈடுபடுவதன் மூலமாக மேலும் பலப்படுத்துவதற்கான இலங்கைத் தூதரகத்தின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை உறுதிப்படுத்தினார்.

இலங்கை உயர் ஸ்தானிகராலயம்

நைரோபி

2021 ஜனவரி 15

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close