2021 ஜனவரி 12ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களை விடைபெறும் நிமித்தம் சந்தித்த கொழும்பில் உள்ள வியட்நாம் தூதுவர் பாம் திபிச் நொக், விவசாயம் மற்றும் மீன்வளத் துறைகளிலான ஒத்துழைப்புக்கு இலங்கை மற்றும் வியட்நாம் மகத்தான ஆற்றலைக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.
குறிப்பாக வியட்நாம் தனது சிறந்த நடைமுறைகள், அறிவு மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றத்தைப் பகிர்ந்து கொள்ள முடியும் என தூதுவர் குறிப்பிட்டார். வியட்நாம் இலங்கைக்கு உதவி வழங்கக்கூடிய பகுதிகளான பதப்படுத்தல் தொழில், குறிப்பாக மீன் பதப்படுத்தல், மீன் தீவன உற்பத்தி போன்ற பகுதிகளை அமைச்சர் குணவர்தன வலியுறுத்தினார்.
மீன்வளத்துறையில் இத்தகைய ஒத்துழைப்பு கிராமப்புற மீன்பிடித்தலை மேம்படுத்துவதற்கும், மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவில் மீன் வளர்ப்புக்கும் பங்களிக்கும் என்பதில் சந்தேகமில்லை என தூதுவர் பாம் திபிச் நொக் மேலும் தெரிவித்தார். விவசாயத் துறை ஒத்துழைப்பு குறித்து மேலும் கலந்துரையாடிய தூதுவர், வியட்நாம் விவசாயத்துக்கு எவ்வாறு உதவுகின்றது என்பதை அறியக்கூடிய கோப்பி, மிளகு மற்றும் ரப்பர் ஆகியவற்றில் அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை முன்னேற்றுவதற்காக முன்னுரிமை ரீதியான வர்த்தக ஒப்பந்தத்தைத் தொடர வேண்டியது அவசியம் என அவர்கள் இருவரும் ஒப்புக்கொண்டனர்.
சுற்றுலா, ஜனநாயகம் மற்றும் கல்வி ஒத்துழைப்பு போன்ற துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அமைச்சர் குணவர்தன வலியுறுத்தினார். மேலும், வியட்நாமின் சிறந்த தலைவரான ஹோ சி மின் மற்றும் அணிசேரா இயக்கத்தில் இலங்கையுடன் நெருக்கமாகப் பணியாற்றிய வியட்நாம் புரட்சிகர அரசாங்கத்தின் வெளிநாட்டு அமைச்சர் நுயென் தி பின் அம்மணி ஆகியோருடன் இலங்கை கொண்டிருந்த நெருங்கிய தொடர்புகளை அமைச்சர் குறிப்பிட்டார். தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்காக சர்வதேசத் தளங்களிலான கூட்டுறவின் முக்கியத்துவத்தை அமைச்சர் எடுத்துரைத்தார். ஆசியானில் துறைசார் உரையாடல் கூட்டாண்மை அந்தஸ்துக்கான இலங்கையின் முயற்சிக்கான தனது முழு ஆதரவையும் வியட்நாமின் தூதுவர் தெரிவித்தார்.
இலங்கையும் வியட்நாமும் 2020ஆம் ஆண்டில் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடின. வியட்நாமும் இலங்கையும் பல நூற்றாண்டுகளாக ஆழமான வேரூன்றிய நட்பு உறவுகளை அனுபவித்து வருகின்றன. இந்த உறவு கலாச்சார மற்றும் வரலாற்று ஒற்றுமைகள் மற்றும் மிக முக்கியமாக பௌத்த மதத்தின் பொதுவான பாரம்பரியத்தை இரு நாடுகளின் மக்களிடையேயான வலுவானதொரு பிணைப்பு நூலாக அடிப்படையாகக் கொண்டது. வரலாற்றுப் பதிவுகளுக்கு அமைய 17ஆம் நூற்றாண்டில் வியட்நாமின் தெற்கில் பௌத்த மதம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், தெற்கு வியட்நாமில் தேரவாத பௌத்த மதத்தை ஸ்தாபிக்க இலங்கை மதகுருமார்கள் பங்களித்ததாகவும் நம்பப்படுகின்றது.
2014ஆம் ஆண்டில், ஜனாதிபதி ஹோ சி மின் அவர்களின் 124வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் இலங்கை ஒரு முத்திரையை வெளியிட்டது. இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில், 2013 நவம்பர் 23ஆந் திகதி கொழும்பு பொது நூலகத்தில் ஜனாதிபதி ஹோ சி மின் அவர்களின் மார்பளவு சிலையையும் இலங்கை திறந்து வைத்தது.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2021 ஜனவரி 13