உலகின் அனைத்து நாடுகளுடனும் 'கல்யாண மித்ர' நட்புரீதியான உறவுகளைப் பேணுகையில், இலங்கையின் கௌரவம், சுதந்திரம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக அனைத்து வேறுபாடுகளையும் களைந்து இலங்கையர்கள் ஒன்றிணைத்து செயற்படுவது 2021ஆம் புத்தாண்டில் எமது பொறுப்பாகும் என வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது புத்தாண்டு தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
உலகில் உள்ள எம்மை விட மிகவும் ஒடுக்கப்பட்ட மற்றும் எம்மை விடவும் குறைவான வசதிகளைக் கொண்ட நாடுகள் எம்மை விடவும் வேகமாக அபிவிருத்தியடைந்துள்ளமை குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும். அந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல், சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களின் உதாரணங்களை நாம் எடுத்துக்கொள்ளல் வேண்டும்.
தூய தேரவாத பௌத்தம் இலங்கையின் வளர்ச்சிக்கு மிகவும் மதிப்புமிக்க வழிகாட்டியாகும், எனினும் அதனை கடைப்பிடிப்பதற்கு நாம் முழுமையாக கவனம் செலுத்தியுள்ளோமா என திரும்பிப் பார்க்க வேண்டிய தருணம் இதுவாகும்.
'நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை' எனும் கொள்கை அறிக்கை மற்றும் அரசாங்கத்தின் அணிசேரா ரீதியிலான நட்பு சார்ந்த வெளியுறவுக் கொள்கை ஆகியவை இலங்கையை உலகின் சிறந்த தேசமாக மாற்ற உதவும். இந்தப் புத்தாண்டில் நாம் அனைவரும் எமது தாய்நாட்டை ஒரு இறையாண்மை கொண்ட அரசாகவும், எதிர்கால சந்ததியினருக்கு முன்மாதிரியாகவும் பாதுகாப்போம்.
இந்தப் புத்தாண்டு அனைத்து இலங்கையர்களுக்கும், உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் வளமான ஆண்டாக அமைய வேண்டும் என வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன வாழ்த்தினார்.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2021 ஜனவரி 01