2020 டிசம்பர் 14, திங்கட்கிழமை நடைபெற்ற 'இலங்கை - தென்னாபிரிக்க வர்த்தக ஊக்குவிப்புக் கூட்டத்தில்' உரையாற்றுவதற்காக, கொழும்பில் உள்ள வெளிச்செல்லும் தென்னாபிரிக்க உயர் ஸ்தானிகர் மாண்புமிகு ரொபினா பி. மார்க்ஸ் அவர்களை லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய ஆய்வுகள் நிறுவனம் அன்புடன் வரவேற்றது.
தொடக்கக் கருத்துக்களை வழங்கிய உயர் ஸ்தானிகர் மார்க்ஸ், இலங்கையில் தனது வர்த்தகத் தடத்தை விரிவுபடுத்த தென்னாபிரிக்காவிற்கு முடிந்ததாகவும், ஒட்டுமொத்தமான வர்த்தகமும் தனது நாட்டிற்கு பெருமளவில் ஆதரவாக அமைந்ததாகவும் தெரிவித்தார். தென்னாபிரிக்கா இலங்கையின் மிகப்பெரிய இறக்குமதி ஆதாரமாகவும், ஆபிரிக்கப் பிராந்தியத்தில் இரண்டாவது பெரிய ஏற்றுமதித் தளமாகவும் உள்ளது. தென்னாபிரிக்காவிலிருந்து பெரும்பாலும் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதுடன், இலங்கையிலிருந்து பாரிய எடையிலான தேநீர், ஆடை மற்றும் ரப்பர் உற்பத்திகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கோவிட்-19 காலத்திலான இருதரப்பு வர்த்தக உறவுகள் குறித்து மேலும் கருத்து தெரிவித்த உயர் ஸ்தானிகர், இலங்கையில் அதன் வர்த்தக மூலோபாயத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தையும், இரு நாடுகளுக்கிடையிலான சீரான வர்த்தக உறவுக்கான விருப்பத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டினார். 'அனைத்து நாடுகளுக்கும் தேசிய நலன் முக்கியமானது எனினும், இலங்கைக்கும் தென்னாபிரிக்காவிற்கும் இடையில் இன்னும் சீரான வர்த்தகத்தை நாங்கள் விரும்புகின்றோம். இந்த இருதரப்பு உறவில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் இருவரும் பணியாற்ற வேண்டும் என்பதால் இது முக்கியமானது என நாங்கள் நினைக்கின்றோம்' என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கைத் தேயிலைக்கான சந்தை அணுகல் குறித்து உரையாற்றிய உயர் ஸ்தானிகர், 'அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் முடியுமானவரை தன்னிறைவாக மாறுவதற்காக ஆதரிக்கும் மனப்பான்மையுடன், இலங்கைக்கு ஓரளவு நிவாரணமளிக்கும் முகமாக, தேயிலைக் கட்டணங்களை மூன்று ஆண்டுகளுக்கு அதிகரிக்காத ஒரு காலத்திற்கு குறைப்பதற்கான கோரிக்கையை நாங்கள் கருத்தில் கொள்வோம்' என தெரிவித்தார்.
முதலீட்டைப் பொறுத்தவரையில், சர்வதேச சில்லறை வர்த்தக நாமமான ஸ்பார், ஸ்பார் குரூப் லிமிடெட் சவுத் ஆப்ரிக்கா மற்றும் சிலோன் பிஸ்கட் லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டு முயற்சியின் மூலம், இலங்கையில் 20 சில்லறை விற்பனை நிலையங்களை விரிவுபடுத்தும் திட்டத்துடன் நான்கு விற்பனை நிலையங்களை திறந்துள்ளதாக உயர்ஸ்தானிகர் மார்க்ஸ் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது, தென்னாபிரிக்காவிற்கான மீன் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள், இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிலுக்கு பெறுமதி சேர்த்து, அறிவுகளைப் பகிர்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சார்ந்த துறையிலான வாய்ப்புக்கள் மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்தல் மற்றும் பதப்படுத்தல் துறையிலான உணவுப் பாதுகாப்பு ஆகியன குறித்து இலங்கை வர்த்தக சமூகத்தின் பிரதிநிதிகளுடன் உயர் ஸ்தானிகர் மார்க்ஸ் கருத்துக்களைப் பரிமாறினார்.
இந்த மெய்நிகர் சந்திப்பு, வெளிநாட்டு அமைச்சரும், லட்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய ஆய்வுகள் நிறுவனத்தின் தலைவருமான கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களின் வேண்டுகோளின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டது. லட்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய ஆய்வுகள் நிறுவனத்தின் முகாமைத்துவ சபையின் உறுப்பினரும் இலங்கையில் உள்ள சர்வதேச வர்த்தக சபையின் தலைவருமான திரு. கோசல விக்ரமநாயக்க, வெஸ்க்ரோவின் ஆசியாவிற்கான நாட்டு முகாமையாளர் திரு. பெஞ்சமின் ஜோர்டான், வெஸ்க்ரோவின் சர்வதேச வர்த்தக அபிவிருத்தியின் முகாமையாளர் திருமதி. நாடின் ஸ்மித்-கிளார்க், டெஸ் பி.எல்.சி. யின் தலைமை நிறைவேற்று அதிகாரி திரு. ஷிரான் பெர்னாண்டோ, சபையர் கெப்பிடலின் தலைவர் திரு. ஆர்மில் சம்மூன் மற்றும் ரான்ஃபர் குழுமத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் திருமதி. ருவினிகா கினிகம ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2020 டிசம்பர் 24