13வது பாலி ஜனநாயக மன்றத்தில் உரையாற்றிய பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, இலங்கைப் பிரஜைகளினதும், பிராந்தியத்தினதும் ஆரோக்கியத்தை உறுதி செய்வதிலான இலங்கையின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டினார். 'ஜனநாயகத்தை நிலைநிறுத்துதல்: கோவிட்-19 தொற்றுநோய்' என்ற தலைப்பில் 2020 டிசம்பர் 10ஆந் திகதி நடைபெற்ற அமைச்சர்கள் மட்டக் குழுவில் அவர் இதனைத் தெரிவித்தார். கோவிட்-19 தொற்றுநோயைத் தடுப்பதற்காகவும், பராமரிப்பதற்காகவும் நாடுகளின் அரச கொள்கைகளைப் பகிர்ந்து கொள்வது குறித்து அமைச்சர்கள் மட்டக் குழு கவனம் செலுத்தியது.
மன்றத்தை ஒழுங்கமைப்பதற்காக இந்தோனேசியா முன்னெடுத்த முன்முயற்சியைப் பாராட்டிய அதே வேளையில், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காக ஒத்துழைப்பதற்கான பொதுவான நோக்கத்திற்காக, தனித்தனியாகவும் கூட்டாகவும் பங்களிப்புச் செய்யும் அர்ப்பணிப்புக்களுக்காக இந்தோனேசிய அரசாங்கத்திற்கு இராஜாங்க அமைச்சர் நன்றிகளைத் தெரிவித்தார்.
கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை ஒரு சீரான, பல்துறை சார்ந்த அணுகுமுறையை பின்பற்றியதுடன், ஜனநாயக வழிமுறைகளிலான உறுதிப்பாட்டைக் கொண்டிருந்த அதே வேளை, 2020 ஆகஸ்ட் மாதத்தில் பாராளுமன்றத் தேர்தலை வெற்றிகரமாகவும், அமைதியாகவும் நடத்தியதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். அரசொன்றின் பிரஜைகளின் ஆரோக்கியமே ஜனநாயம் உள்ளடங்கலான வலுவான தூணாகும் என இலங்கை நம்புகின்றது. எனவே, சர்வதேச சமூகங்களிடையே உரையாடலையும், ஒத்துழைப்பையும் கட்டியெழுப்புவதற்கான உண்மையான நோக்கம் பாலி ஜனநாயக மன்றத்திற்கு உள்ளதாக இராஜாங்க அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார். தனது அனுபவத்தையும், சிறந்த நடைமுறைகளையும் சக நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதற்கும், உரிய முடிவுகளைப் பெற்றுக் கொள்வதற்காக அவர்களுடன் ஒற்றுமையுடன் செயற்படுவதற்குமான தனது ஆதரவை இலங்கை மேலும் உறுதிப்படுத்தியது.
ஜனநாயகம், பின்னடைவு மற்றும் வளர்ந்து வரும் ஐயுறவு, மற்றும் நெருக்கடிகளின் போது பலதரப்பட்ட அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம், நெருக்கடியின் போது விரிதிறனைத் தக்கவைத்துக்கொள்வதற்கான வழிமுறைகள், சமூகத்தில் நிலையாதொரு ஜனநாயகம் மற்றும் நீதியை நோக்கிய பங்களிப்பு ஆகியவற்றை பாலி ஜனநாயக மன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்கள் மையமாகக் கொண்டிருந்தன.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஒரு முற்போக்கான இராஜதந்திரக் கட்டமைப்பை உருவாக்குவதற்காக 2008ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பாலி ஜனநாயக மன்றம், தற்போது வருடாந்த ஆசிய - பசிபிக் மன்றமாக அபிவிருத்தியடைந்துள்ளது. இந்த மன்றமானது, கடந்த தசாப்தத்தில், பன்முகத்தன்மையை நிர்வகித்து, சமத்துவம், பரஸ்பரம் புரிந்துணர்வு மற்றும் மரியாதை ஆகியவற்றை ஊக்குவித்த அதே நேரத்தில், அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஜனநாயகத்திற்கு உதவியது. இந்தோனேசியக் குடியரசின் ஜனாதிபதி ஜொக்கோ விடோடோ மற்றும் இந்தோனேசியக் குடியரசின் வெளிவிவகாரங்களுக்கான அமைச்சர் ரெட்னோ எல்.பி. மார்சுடி ஆகியோர் இந்த வருட பாலி ஜனநாயக மன்றத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்ததுடன், இந்த மன்றத்தில் 10 அமைச்சர்கள் மட்டத்திலான பங்கேற்புக்களுடன் உலகெங்கிலுமுள்ள 33 நாடுகள் கலந்து கொண்டன.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2020 டிசம்பர் 10
...........................................
13வது பாலி ஜனநாயக மன்றத்தின் 'ஜனநாயகம் மற்றும் கோவிட்-19 தொற்றுநோய்' குறித்த அமைச்சர்கள் மட்ட குழுவில், பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் கௌரவ தாரக்க பாலசூரிய அவர்களின் அறிக்கை 2020 டிசம்பர் 10
மாண்புமிகு தலைவர் அவர்களே, மரியாதைக்குரிய பிரதிநிதிகளே,
ஆரம்பத்தில், இந்த மெய்நிகர் ரீதியான 13வது பாலி ஜனநாயக மன்றத்தை கூட்டிய இந்தோனேசியக் குடியரசின் அரசாங்கத்திற்கும், அதன் வெளிநாட்டு அமைச்சிற்கும் எனது வாழ்த்துக்ளை தெரிவித்துக் கொள்கின்றேன். கோவிட்-19 தொற்றுநோயால் முன்வைக்கப்பட்ட சவால்களுக்கு மத்தியிலும், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ய இந்தோனேசியா மேற்கொண்ட முயற்சிகள், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அதன் கூட்டாளர்களுடன் இணைந்து ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை நிரூபிக்கின்றது. இந்தக் கலந்துரையாடல்களின் வெளிப்பாடாக இந்த முக்கியமான தலைப்பிலான உரையாடல் ஊக்குவிக்கப்படும் என நான் நம்புகின்றேன்.
தொற்றுநோயின் தாக்கங்கள் பன்முகத்தன்மை கொண்டவையாக அமைவதுடன், உலகளாவிய பரிமாணங்களின் பொருளாதார, சமூக மற்றும் சுகாதார நெருக்கடியை உருவாக்குகின்றன.
இந்தத் தொற்றுநோயின் தாக்கங்களிலிருந்து இலங்கை விடுபடவில்லை. இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக உலக சுகாதார அமைப்பு மற்றும் உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில், இலங்கை அரசாங்கத்தின் முதன்மையான கவனம் உயிர்களைப் பாதுகாப்பதிலும், குறிப்பாக இந்த தொற்றுநோயால் பாதிக்கப்படக்கூடிய அதன் குடிமக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதிலும் செலுத்தப்படுகின்றது.
இந்தக் கொள்கையைப் பின்பற்றுவதற்காக, இலங்கையின் சுகாதார அதிகாரிகள் உத்தேசத் திட்டங்களில் ஈடுபட வேண்டியது மட்டுமல்லாமல், தீர்க்கமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும். தொடர்பாடல் தடமறிதல் முறைமை மற்றும் கடுமையான பரிசோதனையின் மூலமாக, கோவிட்-19 நோயாளிகளை தனிமைப்படுத்தி, சிகிச்சையளிப்பதன் ஊடாக தொற்றுநிலைமையை இலங்கையின் சுகாதார அதிகாரிகள் வெற்றிகரமாக நிர்வகித்துள்ளனர். 1951 முதல் நாட்டில் நடைமுறையில் உள்ள இலவச சுகாதார அமைப்பானது, ஒரு பொது சுகாதார முறையால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு அது மிகவும் முக்கியமானதாகும்.
இந்தத் தொற்றுநோயை நிர்வகிப்பதற்காக சுகாதார அமைப்பில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பையும் இந்த நெருக்கடியில் இலங்கை உருவாக்கியுள்ளதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற எந்தவொரு சுகாதார நெருக்கடியையும் எதிர்கொள்ளத் தயார்படுத்துகின்றது.
இந்த தொற்றுநோயின் சுகாதாரத் தாக்கங்களுக்கு அப்பால், இந்த நெருக்கடியின் பொருளாதார வீழ்ச்சிக்கு அவசரமான குறுகிய மற்றும் நீண்ட காலக் கவனம் தேவை என்பது தெளிவாகின்றது. குறிப்பாக ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் நிலைமை இதுவேயாகும்.
எமது சமூகங்களில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் பாதுகாக்கப்படுவதையும் அவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்வதற்காக, அவர்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்ட பல கொள்கைகளை இலங்கை அரசாங்கம் இயற்றியுள்ளது. வரவிருக்கும் சவால்களிலான தமது பின்னடைவை நிவர்த்தி செய்வதற்காக, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், தினசரி ஊதியம் பெறுபவர்கள், விவசாயிகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களில் பங்குதாரர்களாக உள்ளவர்களுக்கு வழங்கப்படும் ஆதரவும் இதில் உள்ளடங்கும்.
மரியாதைக்குரிய பிரதிநிதிகளே, கனவான்களே மற்றும் கனவாட்டிகளே,
ஜனநாயகம் என்பது முயற்சித்த மற்றும் சோதிக்கப்பட்ட அமைப்பாக உள்ளதுடன், நாடுகள் முன்னேற்றமடைவதற்கான சிறந்த சூத்திரத்தை இது வழங்குகின்றது. ஒரு வலுவான ஜனநாயகத்திற்குள் அமைதி, சுபிட்சம், மனித நலன் ஆகியவை செழித்து வளர்கின்றன என்பது அனைவரும் அறிந்ததே. இந்தக் கடினமான காலங்களில் ஜனநாயகக் கொள்கைகளை வெற்றிகரமாகப் பயன்படுத்துவதானது, சாதாரண காலங்களில் அவற்றின் செழிப்பான வளர்ச்சியைப் பொறுத்தது என்பதை நினைவில் கொள்வது அவசியமாகும்.
முன்னோடியில்லாத எதிர்பார்க்கப்படாத காலம் என்று மட்டுமே கூறக்கூடிய தற்போதைய சூழலில், எண்ணற்ற பல விடயங்களுக்கு மத்தியிலான ஆரோக்கியம், தனிப்பட்ட சுதந்திரங்கள், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகம் ஆகியவற்றின் மீதான அழுத்தங்கள் கடுமையானவை.
இந்த நெருக்கடியினால் உடல்நலம் மற்றும் பொருளாதாரத் தாக்கங்களுடனான சவால்களால் நாடுகள் ஆட்கொள்ளப்பட்டிருக்கும்போது, நடமாடுவதற்கான மற்றும் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகள் சமூகத்தின் சிறந்த நன்மைக்காக கவனக்குறைவாக சமரசம் செய்யப்படலாம். இது போன்ற காலங்களில், ஜனநாயக நாடுகளாகிய நாம் இந்தக் கட்டுப்பாடுகள் தற்காலிகமானவை என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுடன், இதுவரை எம்மை நல்ல நிலையில் வைத்திருக்கும் ஜனநாயகக் கொள்கைகளுக்காக நாம் ஆதரவளிக்க வேண்டும்.
எமது ஜனநாயக நாடுகளிலான தற்போதைய சூழ்நிலையின் தாக்கங்கள் குறித்து நாம் கருத்தில் கொள்ளும்போது, 'ஒரு அளவு அனைவருக்கும் பொருந்துகின்றது' என்ற எமது எல்லா நாடுகளுக்கும் பொருந்தக்கூடிய ஜனநாயக முறைமை இல்லை என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். எமது சமூகங்களின் மாறுபட்ட தன்மையைக் கருத்தில் கொண்டு, சமூக, கலாச்சார மற்றும் புவியியல் பண்புக்கூறுகள் மற்றும் ஜனநாயகக் கொள்கைகளின் பயன்பாடு ஆகியன ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்துவமானது. இது எம்முடைய ஏனைய வேறுபாடுகளைப் போலவே, அனைவராலும் புரிந்து கொள்ளப்பட வேண்டிய மற்றும் மதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
தடுப்பூசியின் மேம்படுத்தல்களிலான முன்னேற்றங்கள் குறித்த நேர்மறையான செய்திகளுடன், இயல்பு நிலைக்குத் திரும்பும் சூழல் அணமித்துள்ளதென்ற நம்பிக்கையில் உலகம் உள்ளது.
இந்த மன்றத்தால் எடுத்துக்காட்டப்படுவது போல, குறிப்பாக பிராந்திய மட்டத்தில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மைக்கு மதிப்பளிக்கும் நாடுகளாக இருப்பதால், நாடுகள் தடுப்பூசிகளை அணுக முற்படுவதன் காரணமாக, சாத்தியமான ஏற்றத்தாழ்வுகளை நாம் தடுக்க வேண்டியது அவசியமாகும். இந்தத் தடுப்பூசிகள் அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாகவும், மலிவான பெறுமதியைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். எனவே, இந்த முக்கியமான தடுப்பூசியை அனைத்து நாடுகளும் பெற்றுக்கொள்வதற்கும், யாரும் கண்டுகொள்ளப்படாது இருக்காமலிருப்பதற்குமான ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறை பின்பற்றப்படுவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.
அவ்வாறு செய்வதன் மூலம், எம்மில் ஒரு சிலருக்கு மாத்திரமன்றி, அனைவருக்கும் பொருந்தக்கூடிய வகையில், உயிர்களையும், ஜனநாயகத்தின் உண்மையான சாராம்சத்தையும் பாதுகாப்போம்.
நன்றி
The full video can be viewed at: https://youtu.be/5nd9t5svSzk