தொற்றுநோய் மற்றும் வர்த்தகம், சுற்றுலா, முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றிலான அதன் பாதகமான விளைவுகளின் காரணமாக அதிகரித்த உலகளாவிய சூழ்நிலையின் பின்னணியில் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்குத் தடையாக இருக்கும் பன்முக சவால்களை சமாளிப்பதற்காக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு உதவும் வகையில், அபிவிருத்தி முன்முயற்சிகளுக்கு போதிய நிதியுதவியை வழங்குவதற்காக 77வது குழுவிற்கு அழைப்பு விடுப்பதற்கான முக்கியத்துவத்தை வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன மீண்டும் வலியுறுத்தினார்.
கயானா கூட்டுறவுக் குடியரசின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சரின் தலைமையில் 77வது குழுவின் வெளிவிவகார அமைச்சர்களின் நாற்பத்தி நான்காவது வருடாந்தக் கூட்டம் வியாழக்கிழமை (நவம்பர் 12) மெய்நிகர் இணைய வழியில் நடைபெற்றது. இந்த ஊடாடும் உரையாடலானது, 'முக்கிய முன்னுரிமைப் பிரச்சினைகள் மற்றும் கோவிட்-19 தொற்றுநோய்க்கான உலகளாவிய பிரதிபலிப்பு மற்றும் 2030 நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்துவதற்கும், நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும் அது ஏற்படுத்தும் தடைகள்' என்ற தலைப்பில் நடைபெற்றது.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் இலங்கை மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கிய வலுவான ஆணையானது, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அவரது செழிப்பான நோக்கிற்காக, ஜி-77 இன் இலக்குகள் தொடர்பில் இலங்கையை மேலும் ஈடுபடுத்துவதற்கான நம்பிக்கையை அளிக்கின்றது என ஒரு வீடியோ அறிக்கையில் அமைச்சர் குணவர்தன எடுத்துரைத்தார். இலங்கையின் செயற்பாடுகளின் தற்போதைய நிலை மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள செயற்குழு ஆகியவற்றினூடாக நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதிலான இலங்கையின் அர்ப்பணிப்பு பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஐ.நா. அமைப்பினுள் உள்ள அனைத்து முக்கிய சர்வதேச பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்தும், அபிவிருத்திக்கான தெற்கு-தெற்கு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் தமது கூட்டு நலன்களை வெளிப்படுத்துவதற்கும், ஊக்குவிப்பதற்கும் வழங்கப்பட்டுள்ள தளத்தை வெளிநாட்டு அமைச்சர் மேலும் சுட்டிக் காட்டினார்.
தெற்கு-தெற்கு ஒத்துழைப்புக்கான ஆதரவைத் திரட்டுவதில் வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் (UNCTAD) முன்னாள் பொதுச்செயலாளர் கலாநிதி. காமனி கொரியா அவர்களின் தலைமையிலான இலங்கையின் பொருளாதார வல்லுநர்களின் உண்மையான பங்களிப்பை அவர் மேலும் நினைவு கூர்ந்தார்.
முக்கிய குறிப்பு உரையை நிகழ்த்திய குழுவின் பொறுப்பாளராக செயலாற்றிய கயானாவின் அதிமேதகு ஜனாதிபதி கலாநிதி. மொஹமட் இர்பான் அலி அவர்களுக்கு அமைச்சர் குணவர்தன தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். ஐ.நா. பொதுச் சபையின் 75வது அமர்வின் தலைவர் வொல்கன் பொஸ்கிர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டெரெஸ் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் உரையாற்றினர்.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2020 நவம்பர் 13
***
77வது குழுவின் வெளிவிவகார அமைச்சர்களுக்கான 44வது வருடாந்தக் கூட்டம்
முக்கிய முன்னுரிமைப் பிரச்சினைகள் மற்றும் கோவிட்-19 தொற்றுநோய்க்கான உலகளாவிய பிரதிபலிப்பு மற்றும் 2030 நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்துவதற்கும், நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும் அது ஏற்படுத்தும் தடைகள் தொடர்பான ஊடாடும் உரையாடலில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் வெளிநாட்டு அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களின் இடையீடு
...............................................
கௌரவ தலைவர் அவர்களே,
மேன்மை தங்கியவர்களே,
மரியாதைக்குரிய விருந்தினர்களே,
77வது குழுவின் ஸ்தாபக உறுப்பினர் என்ற வகையில், வெளிவிவகார அமைச்சர்களுக்கான 44வது வருடாந்தக் கூட்டத்தில் பங்கேற்பதில் இலங்கை மகிழ்ச்சியடைகின்றது. இந்த ஆண்டின் அமர்விற்கான கருப்பொருளானது, கோவிட்-19 தொற்றுநோயால் முன்வைக்கப்பட்ட முன்னோடியில்லாத சவால்கள் தொடர்பான இத்தகைய சரியானதொரு நேரத்தில் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் இலங்கை மக்கள் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கிய வலுவான ஆணையானது, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அவரது செழிப்பான நோக்கிற்காக, ஜி-77 இன் இலக்குகள் தொடர்பில் எம்மை மேலும் ஈடுபடுத்துவதற்கான நம்பிக்கையை அளிக்கின்றது. அரை நூற்றாண்டுக்கும் மேலாக, ஐ.நா. அமைப்பினுள் உள்ள அனைத்து முக்கிய சர்வதேச பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்தும், அபிவிருத்திக்கான தெற்கு - தெற்கு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் தமது கூட்டு நலன்களை வெளிப்படுத்துவதற்கும், ஊக்குவிப்பதற்கும் ஜி-77 ஒரு தளத்தை வழங்கியுள்ளது. தற்போதைய சூழலில், இது உலகளாவியத் தெற்கின் ஒற்றுமையின் உணர்வால் இயக்கப்படும் குறிப்பிடத்தக்கதொரு வகிபாகத்தைக் கொண்டுள்ளது.
தொழில்நுட்பம், வளங்கள் மற்றும் அறிவுப் பரிமாற்றம், அபிவிருத்திக்கான எமது கூட்டான பாதையை ஆதரிப்பதற்கான நிதியுதவி மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகியவை இதில் உள்ளடங்குகின்றன.
உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளுக்கு இணங்க சுகாதார விதிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் கோவிட்-19 தொற்றுநோயின் பரவலை இலங்கை அரசாங்கம் நிர்வகித்து வருகின்றது.
இலங்கையின் செயற்பாடுகளின் தற்போதைய நிலை மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள செயற்குழுவினூடாக 2030ஆம் ஆண்டளவில் அனைத்து நிலையான அபிவிருத்தி இலக்குகளை யும் அடைவதிலான இலங்கையின் அர்ப்பணிப்பு பிரதிபலிக்கின்றது.
தற்போதைய சுகாதார நெருக்கடியிலிருந்து எழுகின்ற முன்னோடியில்லாத விளைவுகள், வர்த்தகம், சுற்றுலா, முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் உள்ள பாதிப்புக்களை அதிகரிப்பதன் மூலம் உலகளவில் பிரதிபலிக்கும் வகையில் பொருளாதாரங்கள் மீது பரவியுள்ளன. குறிப்பாக, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் மேலதிகமான சுமையை எதிர்கொள்கின்றன. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்குத் தடையாக இருக்கும் பன்முக சவால்களை சமாளிப்பதற்கு உதவும் வகையில், அபிவிருத்தி முயற்சிகளுக்கு போதிய நிதியுதவியை வழங்குவதற்கான குழுவிற்கு அழைப்பு விடுப்பதனை இலங்கை மீண்டும் வலியுறுத்துகின்றது. இந்த சூழலில், அபிவிருத்திக்கான நிதியுதவி, கடன் நிவாரணம் மற்றும் கோவிட்-19 இன் தாக்கத்தை குறைப்பதற்கான நிதிக் கொள்கைகளை பின்பற்றுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் சர்வதேச சமூகத்திற்கு விடுத்த அழைப்பினை நான் நினைவு கூர்கின்றேன்.
தெற்கு-தெற்கு ஒத்துழைப்புக்கான ஆதரவைத் திரட்டுவதிலும், தெற்கு ஆணைக்குழு மற்றும் தெற்கு மையத்தை நிறுவுவதிலும் வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் (UNCTAD) முன்னாள் பொதுச்செயலாளர் கலாநிதி. காமனி கொரியா அவர்களின் தலைமையிலான இலங்கையின் பொருளாதார வல்லுநர்கள் முன்னோடியான வகிபாகத்தைக் கொண்டிருந்தனர்.
உறுப்பு நாடுகளின் அபிவிருத்திக்கு வறுமை ஒரு பாரிய தடையாக உள்ளதுடன், வறுமையை அதன் அனைத்து வடிவங்களிலும் ஒழிப்பதற்கான இந்தக் குழுவின் உறுதிப்பாட்டை நாங்கள் பகிர்ந்து கொள்கின்றோம். உள்நாட்டு தொழில்வாய்ப்புக்களை ஊக்குவிக்கும் உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்குப் பொறுப்பான இலங்கையின் ஜனாதிபதி செயலணி செயற்படுகின்றது. ஆறு மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு அரசாங்கம் நிதி நிவாரணத்தை வழங்கியுள்ள அதே வேளை, கோவிட்-19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்தையும் நிறுவியுள்ளது. அனைவருக்கும் கோவிட்-19 க்கான தடுப்பூசியை கிடைக்கச் செய்வதன் முன்னுரிமையை நாங்கள் குறிப்பாக சுட்டிக் காட்டுகின்றோம்.
காலநிலை மாற்றம் மற்றும் ஃபிண்டெக் பசுமைப் பொருளாதாரம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான எமது கூட்டு முயற்சிகளை அணிதிரட்டுதல் ஆகியவற்றுக்கு நாங்கள் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டியது அவசியமாகும்.
இந்த சவால் மிகுந்த கால கட்டங்களில் குழுவின் பொறுப்பாளராக செயலாற்றிய கயானாவின் அதிமேதகு ஜனாதிபதி கலாநிதி. மொஹமட் இர்பான் அலி அவர்களுக்கு எனது பிரதிநிதிகள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள். இறுதியாக, குழுவின் நலன்களை கூட்டாக முன்னேற்றுவதில், ஜி-77 க்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகின்றேன்.
ஆயுபோவன்!
நன்றி.
2020 நவம்பர் 12
The full video can be viewed at: https://youtu.be/fFSIm7hATnM