80% புதுப்பிக்கத்தக்க சக்திக்கான ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களின் உறுதிப்பாட்டை 26 வது ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டிற்கான ஐக்கிய இராச்சியத்தின் பிராந்தியத் தூதுவருக்கு பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் கௌரவ தாரக பாலசூரிய மீண்டும் உறுதிப்படுத்தினார்

80% புதுப்பிக்கத்தக்க சக்திக்கான ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களின் உறுதிப்பாட்டை 26 வது ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டிற்கான ஐக்கிய இராச்சியத்தின் பிராந்தியத் தூதுவருக்கு பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் கௌரவ தாரக பாலசூரிய மீண்டும் உறுதிப்படுத்தினார்

2020 அக்டோபர் 27 ஆந் திகதி இடம்பெற்ற மெய்நிகர் கலந்துரையாடலின் போது, 80% புதுப்பிக்கத்தக்க சக்திக்கான ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களின் உறுதிப்பாட்டை 26 வது ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டிற்கான ஆசிய / பசிபிக் மற்றும் தெற்காசியாவிற்கான ஐக்கிய இராச்சியத்தின் COP26 பிராந்தியத் தூதுவர் கென் ஓ'ஃப்லாஹெர்டி அவர்களுக்கு பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் கௌரவ தாரக பாலசூரிய மீண்டும் உறுதிப்படுத்தினார்.

காலநிலை மாற்றத்தின் பாதகமான பாதிப்புக்களுக்கான 2020 உலகளாவிய காலநிலை இடர் சுட்டிக்கு அமைய இலங்கை உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய 6 வது நாடாக விளங்குவதுடன், காலநிலையிலான பின்னடைவு மற்றும் இணைவாக்கத்தை மேம்படுத்துவதற்காக, பச்சை வீட்டு வாயுக்களைக் குறைக்கும் பொருட்டு சதுப்பு நிலங்கள், ஈரநிலங்கள் மற்றும் காடுகளை பேணி, பராமரிப்பதனூடாக இலங்கை மேற்கொண்டுள்ள முயற்சிகளை இராஜாங்க அமைச்சர் எடுத்துரைத்தார். காலநிலை சார்ந்த நட்பு ரீதியான போக்குவரத்து முறைமைகளை மேம்படுத்துவதற்காக, இலங்கையின் இளம் தொழில்முனைவோர்களால் மின்சார வாகனங்களை வடிவமைப்பதற்கும், உற்பத்தி செய்வதற்கும் தேவையான பசுமை நிதியுதவியின் முக்கியத்துவமும் குறிப்பிடப்பட்டது. கடல் சார்ந்த பிளாஸ்டிக் மாசுபாட்டை நிவர்த்தி செய்வதில் இலங்கையின் உறுதிப்பாட்டை வலியுறுத்துகையில், கடலோர நகரங்களில் குறிப்பாக பிளாஸ்டிக் குப்பைகளை மீள்சுழற்சி செய்வதற்கான வசதிகளை வளர்ப்பதற்கான தேவை ஒரு முக்கிய அங்கமாக அடையாளம் காணப்பட்டது.

மைக்ரோ பிளாஸ்டிக்குகளின் தாக்கத்தை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்திய பொதுநலவாய குப்பைத் திட்டத்தின் கீழ், ஆய்வக வசதிகள் மற்றும் பொது விழிப்புணர்வு பிரச்சாரங்களை வலுப்படுத்துவதன் மூலம் பகுப்பாய்வுக்கான திறனை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சியின் ஒத்துழைப்பு மூலம் இங்கிலாந்து மற்றும் இலங்கைக்கு இடையிலான ஒத்துழைப்பு உட்பட இலங்கையின் பசுமை முயற்சிகளை தூதுவர் ஓ'ஃப்லாஹெர்டி பாராட்டினார். சதுப்புநில சுற்றுச்சூழல் முறைமைகள் மற்றும் வாழ்வாதாரங்கள் குறித்த பொதுநலவாய நீலப்பசுமை சாசன பணிக் குழுவில் இலங்கையின் முக்கிய வகிபாகத்தை அவர் மேலும் பாராட்டிய அதே வேளை, நிலையான நைதரசன் முகாமைத்துவம் குறித்த கொழும்பு பிரகடனத்தின் மூலம் 2030 க்குள் உலகின் நைதரசன் கழிவுகளை பாதியாகக் குறைப்பது தொடர்பிலும் கருத்துத் தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் வளர்ந்து வரும் போக்குகளை எடுத்துரைத்த தூதுவர் ஓ'ஃப்லாஹெர்டி, புதைபடிவ எரிபொருட்களுடன் ஒப்பிடும்போது, காற்று மற்றும் சூரிய சக்தி ஆகியன அதிகம் செலவு குறைந்தவை எனத் தெரிவித்தார். ஆசிய பிராந்தியத்தில் பல நாடுகள் நிலக்கரி மின்சக்தியை அகற்றுவதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

காலநிலை மாற்றம் என்பது ஒரு உலகளாவிய நிகழ்வு ஆவதுடன், இது குறித்து எந்தவொரு நாடும் தனியாக இயங்க முடியாது, மாறாக இருதரப்பு மற்றும் பல்தரப்பு மட்டங்களிலான ஒத்துழைப்பு அவசியமாகும். எவ்வாறாயினும், இலங்கை உட்பட ஒரு நாட்டின் நடவடிக்கை அல்லது செயலற்ற தன்மை உலகளாவிய சூழலில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும். இது சம்பந்தமாக, இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பானது, எமது நிலைப்பிற்கான முக்கியமானதொரு அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நிகழ்ச்சி நிரலை அமைக்கின்றது.

2021 ஆம் ஆண்டில் கிளாஸ்கோவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான தரப்புக்களின் 26 வது மாநாட்டை (COP26) ஐக்கிய இராச்சியம் நடாத்திய சூழலில், இந்தக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இந்த மெய்நிகர் கலந்துரையாடலை இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அதிமேதகு சாரா ஹல்டன் நிர்வகித்தார். வெளிநாட்டு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, சமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திருமதி. ஹசந்தி உருகொடவத்த திசாநாயக்க மற்றும் ஐரோப்பா, மத்திய ஆசியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாயப் பிரிவின் பதில் பணிப்பாளர் நாயகம் திருமதி. தம்மிகா சேமசிங்க மற்றும் கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் செழுமைப் பிரிவின் தலைவர் திரு. அண்ட்ரூ பிரைஸ் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

 

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

28 அக்டோபர் 2020

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close