2020 அக்டோபர் 02 முதல் 04 வரையான காலப்பகுதியில், தம்புள்ளையிலுள்ள சமூக சிந்தாந்த அபிவிருத்திக்கான வெளிக்களப் பயிற்சி நிலையமான ரங்கிரி அகுவாவில் வெளிநாட்டு அமைச்சின் உத்தியோகத்தர்கள் வெளிக்களப் பயிற்சி நிகழ்ச்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். இந்தப் பயிற்சி நிகழ்ச்சியானது, வெளிநாட்டு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் வெளிநாட்டு அமைச்சின் கொள்கைத் திட்டமிடல் மற்றும் மனிதவள அபிவிருத்திப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டது.
குழுப்பணித் திறன்களை மேம்படுத்துதல், உள்ளகக் குழு உறவுகளை மீள ஊக்குவித்தல், சிறந்த தகவல் தொடர்பாடல் மற்றும் தலைமைத்துவத் திறன்கள் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு, இலங்கை வெளிநாட்டு சேவை, நிர்வாக சேவை மற்றும் கணக்கியல் சேவை ஆகியவற்றின் அதிகாரிகளை உள்ளடக்கிய அமைச்சின் உத்தியோகத்தர்களுக்காக வடிவமைக்கப்பட்ட முதலாவது வெளிக்களப் பயிற்சிப் பட்டறை இதுவாகும். இந்த வெளிக்களப் பயிற்சியில் மொத்தமாக அமைச்சின் 58 உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர்.
அலுவலக சூழலிலிருந்து தொலைவாக உள்ள தம்புள்ளையில், குழுக்களை கட்டமைக்கும் எண்ணக்கருக்கள், குழு உளவியல், பணி சார்ந்த வாழ்க்கை சமநிலைக்கான உணர்ச்சிபூர்வமான நுண்ணறிவு மற்றும் தியானம் குறித்த சிறப்பு அமர்வுகளுடன், தலைமைத்துவம் மற்றும் தகவல் தொடர்பாடல் திறன்கள், திட்டமிடல், மாற்ற முகாமைத்துவம், பிரதிநிதித்துவம் மற்றும் ஊக்கப்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட நடவடிக்கைகளில் உத்தியோகத்தர்கள் ஈடுபட்டனர். ஒவ்வொரு அமர்வும் விரிவான வெளிக்களப் பயிற்சி முறைகளைப் பயன்படுத்தி நடாத்தப்பட்டது.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
12 அக்டோபர் 2020