இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கும் இடையிலான மெய்நிகர் இருதரப்பு கலந்துரையாடல்

இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கும் இடையிலான மெய்நிகர் இருதரப்பு கலந்துரையாடல்

 மெய்நிகர் கலந்துரையாடல் தொடர்பான இலங்கை - இந்திய இணைந்த ஊடக அறிக்கை

 

மித்ராத்வ மக்க - நட்பின் பாதை: வளர்ச்சி மற்றும் செழிப்பை நோக்கி

 

இலங்கைப் பிரதமர் அதிமேதகு மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியப் பிரதமர் அதிமேதகு நரேந்திர மோடி ஆகியோர் இன்று மெய்நிகர் கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டதுடன், அதன்போது இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பரம் அக்கறை மிகுந்த பிராந்திய மற்றும் சர்வதேசப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினர்.

  1. 2020 ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தீர்க்கமான ஆணையுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றமைக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். குறித்த நல்வாழ்த்துக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், பிரதமர் மோடியுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதற்கான தனது ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார்.

  1. 2019 நவம்பர் மற்றும் 2020 பெப்ரவரி மாதங்களில் முறையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இந்தியாவுக்கு வெற்றிகரமாக விஜயங்களை மேற்கொண்டதை இரு தலைவர்களும் நினைவு கூர்ந்தனர். இந்த விஜயங்கள் உறவின் எதிர்காலத்திற்கான தெளிவான அரசியல் வழிநடத்துதலையும், நோக்கங்களையும் வழங்கின.

  1. பிராந்திய நாடுகளுக்கான பரஸ்பர ஆதரவு மற்றும் உதவி தொடர்பான தொலைநோக்கின் அடிப்படையில் கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் பிரதமர் மோடி காட்டிய வலுவான தலைமையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராட்டினார். தற்போதைய நிலைமையானது, இருதரப்பு உறவுகளுக்கு மேலதிகமான உத்வேகத்தை அளிப்பதற்கானதொரு புதிய வாய்ப்பை வழங்குவதாக இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். கோவிட்-19 தொற்றுநோயைக் கையாள்வதில் இந்தியாவும் இலங்கையும் மிக நெருக்கமாக பணியாற்றியதில் இரு தலைவர்களும் தமது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டனர். தொற்றுநோயின் ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரத் தாக்கத்தைக் குறைப்பதற்காக, இலங்கைக்கு வழங்கும் சாத்தியமான அனைத்து ஆதரவிற்குமான இந்தியாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார்.

  1. இருதரப்பு உறவுக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் முகமாக, பின்வருவனவற்றிற்கு இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்:

i. புலனாய்வு, தகவல் பகிர்வு, மிதவாதமயமாக்கல் மற்றும் திறன் அபிவிருத்தி உள்ளிட்ட துறைகள் உட்பட பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்து ஒத்துழைப்பை மேம்படுத்துதல்.

ii. இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களால் அடையாளம் காணப்பட்ட முன்னுரிமைப் பகுதிகளுக்கு ஏற்ப பயனுள்ள மற்றும் திறமையான அபிவிருத்திப் பங்காண்மையைத் தொடருதல் மற்றும் 2020 - 2025 காலப்பகுதிக்கான உயர் தாக்கமுள்ள சமூக அபிவிருத்தித் திட்டங்களை (எச்.ஐ.சி.டி.பி) செயற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் ஈடுபடுவதை மேலும் விரிவுபடுத்துதல்.

 iii.  2017 மே மாதத்தில் பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம் செய்தபோது அறிவிக்கப்பட்ட தோட்டப் பகுதிகளில் 10,000 வீட்டு அலகுகளை விரைவாக நிர்மாணிப்பதற்காக ஒன்றிணைந்து செயற்படுதல்.

iv. இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான சூழலொன்றை எளிதாக்குதல் மற்றும் கோவிட்-19 தொற்றுநோயால் முன்வைக்கப்படும் சவால்களின் பின்னணியில் விநியோகச் சங்கிலிகளை ஒருங்கிணைப்பதை ஆழப்படுத்துதல்.

v. இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம், துறைமுகங்கள் மற்றும் எரிசக்தி சார்ந்த துறைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு மற்றும் இணைப்புத் திட்டங்களை நெருக்கமான ஆலோசனைகள் மூலமாக முன்கூட்டியே உணர்ந்து கொள்வதற்கும், இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பரம் நன்மை பயக்கும் வளர்ச்சி ஒத்துழைப்புப் பங்காண்மைக்கான வலுவான அர்ப்பணிப்புக்காக ஒன்றிணைந்து செயற்படுதல்.

vi.இந்தியாவினால் வழங்கப்படும் 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வரிசையின் கீழ், சூரிய சக்தித் திட்டங்களுக்கு குறிப்பாக முக்கியத்துவமளித்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் ஒத்துழைப்பை ஆழமாக்குதல்.

vii.விவசாயம், கால்நடை வளர்ப்பு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் ஆயுஷ் ஆகிய துறைகளில் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன், தொழில் வல்லுநர்களுக்கான அதிகரித்த பயிற்சியின் மூலம் திறன் அபிவிருத்தி மற்றும் இரு நாடுகளிலும் மக்கள் தொகையின் முழுமையான திறனை உணர்ந்து கொள்ளுதல்.

viii. நாகரிக இணைப்புக்கள் மற்றும் பௌத்தம், ஆயுர்வேதம் மற்றும் யோகா போன்ற பொதுவான பாரம்பரியத் துறைகளிலான வாய்ப்புக்களை ஆராய்வதன் மூலம் மக்களுக்கு இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துதல். பௌத்த மதத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் சர்வதேச விமான நிலையமாக அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள புனித நகரமான குஷினகருக்கு இலங்கையிலிருந்து பௌத்த யாத்திரிகர்கள் குழு விஜயம் செய்வதற்கு இந்திய அரசாங்கம் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும்.

 ix.இணைப்பை மேம்படுத்துவதன் மூலமும், பயணத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்காக இரு நாடுகளுக்குமிடையில் துவக்கப் பொறிமுறையை ஆரம்பத்தில் நிறுவுவதன் மூலமும், கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்படும் அச்சுறுத்தலை மனதில் கொண்டு, தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதன் மூலமும் சுற்றுலாவை எளிதாக்குதல்.

 x.தற்போதுள்ள கட்டமைப்புக்கள் மற்றும் ஐ.நா. வின் நிலையான அபிவிருத்தி இலக்குகள் உள்ளிட்ட பகிரப்பட்ட குறிக்கோள்களுக்கு ஏற்ப வழக்கமான ஆலோசனை மற்றும் இருதரப்பு நெறிமுறைகள் மூலம் மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக தொடர்ந்தும் ஈடுபடுதல்.

xi.பணியாளர்கள் விஜயப் பரிமாற்றம், கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு, காவல் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் இலங்கைக்கான ஆதரவு உட்பட இரு தரப்பினரின் ஆயுதப்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்.

  1. இரு நாடுகளுக்குமிடையிலான பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்காக இந்தியப் பிரதமர் மோடி 15 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் தொகையை வழங்குவதாக மேற்கொண்ட அறிவிப்பை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வரவேற்றார். பௌத்த மடங்களின் நிர்மானம் / புனரமைத்தல், திறன் அபிவிருத்தி, கலாச்சாரப் பரிமாற்றங்கள், தொல்பொருள் ஒத்துழைப்பு, புத்தரின் நினைவுச்சின்னங்களின் பரஸ்பர வெளிப்பாடு, பௌத்த அறிஞர்கள் மற்றும் மதகுருமார்கள் போன்றவர்களின் ஈடுபாட்டை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் பௌத்தம் சார்ந்த இரு நாடுகளுக்கிடையேயான மக்கள் தொடர்புகளை ஆழப்படுத்துவதற்கு இந்த மானியம் உதவியாக அமையும்.

  1. அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்துவதன் மூலம் நல்லிணக்க செயன்முறையை முன்னெடுத்துச் செல்லுதல் உட்பட, ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் மரியாதை ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்வதற்காக பிரதமர் மோடி இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார். இலங்கை மக்களின் ஆணைப்படி விருத்தி செய்யப்பட்ட நல்லிணக்கத்தை அடைந்து கொள்வதன் மூலம், அரசியலமைப்பு விதிகளை அமுல்படுத்துவதன் வாயிலாக, தமிழர்கள் உட்பட அனைத்து இனத்தவர்களின் எதிர்பார்ப்புக்களை தெளிவாக புரிந்து கொள்வதற்கு இலங்கை செயற்படும் என்ற நம்பிக்கையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளிப்படுத்தினார்.

  1. சார்க் (SAARC), பிம்ஸ்டெக் (BIMSTEC), ஐயோரா (IORA) மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆகியவற்றின் கட்டமைப்புக்கள் உள்ளடங்கலாக, பரஸ்பரம் ஈடுபாட்டின் பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகளில் அதிகரித்து வரும் ஒருங்கிணைப்பை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

  1. தெற்காசியாவை தென்கிழக்கு ஆசியாவுடன் இணைக்கும் பிராந்திய ஒத்துழைப்புக்கான முக்கிய தளம் பிம்ஸ்டெக் என்பதை உணர்ந்து, இலங்கைத் தலைமையின் கீழ் வெற்றிகரமான பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டை நடாத்துவதை உறுதி செய்வதற்காக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

  1. 2021 - 2022 காலத்திற்கான ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தெரிவு செய்யப்படுவதற்காக சர்வதேச சமூகத்திடமிருந்து கிடைத்த வலுவான ஆதரவுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

கொழும்பு

26 செப்டம்பர், 2020

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close