மனித உரிமைகள் பேரவையின் 45 வது அமர்வு நிகழ்ச்சி நிரல் 2: பொது விவாதம் 15 செப்டம்பர் 2020

மனித உரிமைகள் பேரவையின் 45 வது அமர்வு நிகழ்ச்சி நிரல் 2: பொது விவாதம் 15 செப்டம்பர் 2020

 

மனித உரிமைகள் பேரவையின் 45 வது அமர்வு

நிகழ்ச்சி நிரல் 2: பொது விவாதம்

15 செப்டம்பர் 2020

  

இலங்கையின் அறிக்கை

 

 

 

தலைவி அவர்களுக்கு

“உலகளாவிய மனித உரிமைகள் புதுப்பிப்பு” 14 செப்டெம்பர் 2020 அன்று மேற்கொள்ளப்பட்டபோது, மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்ட கருத்துக்கள் தொடர்பில் இலங்கை பதிலளிக்க விழைகிறது.

இந்த வருடம் பெப்ரவரி/ மார்ச் இலிருந்து, உலகலாவிய மட்டத்தில் எதிர்கொள்ளப்படும் சுகாதார நெருக்கடியான, கோவிட்-19 தொற்று நோய்ப் பரவலானது, பல நாடுகளின் அரசாங்கங்களைப் பல்வேறு அம்சங்களில் பாதித்திருக்கிறது. இலங்கையும் அதற்கு விதிவிலக்கல்ல.

இலங்கையில் கோவிட்-19 நோய்ப்பரவலானது, சமநிலையானதும் பல்துறை அணுகுமுறை மூலமாகவும் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டமையை இக்கழகம் பாராட்டுமென நாம் நம்புகின்ற அதேசமயம், சவால்களுக்கு மத்தியில் இலங்கையின் ஜனநாயக செயன்முறைகள் அர்ப்பணிப்புடன் பேணப்பட்டு வருவதுடன், கடந்த மாதம் இந்நாட்டில்  பாராளுமன்ற தேர்தலும் அமைதியாகவும் வெற்றிகரமாகவும் நடாத்தி முடிக்கப்பட்டு, அது ஐரோப்பிய ஒன்றியத்தினால் பாராட்டப்பட்டது.

தலைவி அவர்களே,

ஐக்கிய நாடுகளின் தீர்மானம் 30/1 இற்கான இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகினாலும், உள் நாட்டில் வடிவமைக்கப்பட்டதும் அரசாங்கத்தின் கொள்கைக் கட்டமைப்பிற்கேற்ப நிறைவேற்றப்பட்டதுமான ஒரு செயன்முறை மூலமாக, இலங்கை அரசியலமைப்பின் கட்டமைப்பினுள் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் எட்டப்படவேண்டுமென்ற அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. அத்துடன், ஆகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெற்ற புதிய பாராளுமன்ற தேர்தலின் பின்னர் பதவியேற்றுள்ள புதிய அரசாங்கமானது, இவ்வருடம் பெப்ரவரியில் இக்கழகத்தின் முன்பாக வழங்கப்பட்ட உறுதிமொழிகளைக் காப்பாற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளது.

20 ஆம் சட்டத்திருத்த வரைவானது, பாராளுமன்றத்தினூடாக சமர்ப்பிக்கப்பட்டு, ஒரு முழுமையான ஜனநாயக செயன்முறையைப் பின்பற்றி, சகல பங்குதாரர்களும் தத்தமது கருத்துக்களை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டு, கலந்துரையாடப்பட்டு, விவாதிக்கப்படும்.  எனவே, முன்வைக்கப்பட்ட 20 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பிலான உயர்ஸ்தானிகரது கருத்துக்கள் தேவையற்றதும், முன் தீர்ப்பினைக் கொண்டதும், அனுமானத்தின் அடிப்படையிலானதுமென இலங்கை அரசாங்கம் கருதுகின்றது.

முன்னாள் இராணுவ வீரருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு, இலங்கை அரசியலமைப்பிலுள்ள அதிகாரங்கள் மற்றும் ஏற்பாடுகளுக்கமைவாக வழங்கப்பட்டதென இலங்கை அரசாங்கம் குறிப்பிட விரும்புகின்றது.

தலைவி அவர்களே,

நிறுவனங்களின் முக்கிய பதவிகளுக்கு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டமை தொடர்பான குறிப்புக்கள் பொய்யானதும் ஆதாரமற்றதுமான குற்றச்சாட்டுக்களென அரசாங்கம் நிராகரிக்கிறது. இக்குற்றச்சாட்டுகளின் நம்பகத்தன்மையை இலங்கை தொடர்ந்து மறுத்து வருவதுடன், குறிப்பாக, இனமோதலின் இறுதிக்கட்டங்களைப் பொறுத்தவரையில் இந்த குற்றச்சாட்டுகளை ஆராய்ந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் இணக்கப்பாட்டு ஆணைக்குழு மற்றும் பரணகம ஆணைக்குழுவிடம் எந்தவொரு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கும் எதிராக கணிசமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறது.

எந்தவொரு உறுதியான ஆதாரமும் இல்லாத நிலையில், தொடர்ச்சியாக இந்த சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கெதிராக தன்னிச்சையாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அல்லது மனிதகுலத்திற்கெதிரான குற்றங்கள் ஆகியவை ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் நீதியின் இயற்கையான கொள்கைகளை மீறுவதாகவும் இலங்கை கருதுகிறது.

முடிவில், கண்காணித்தல் மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் ஏற்கனவே இவற்றைப் பகிரங்கமாக மறுத்துள்ளதுடன், கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாத்து ஊக்குவிப்பதற்கும் மற்றும் சிவில் சமூகத்திற்கான இடைவெளியைக் கொடுப்பதற்கும்  உறுதிபூண்டுள்ளது. மேலும் ஊடகவியலாளர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் மீதான தாக்குதல் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வழக்குத் தொடரப்படுகிறது.

இந்த அரசாங்கத்தின் பிரதான கவனமானது;  “எந்தவொரு குடிமகனும் தனதும் தனது குடும்பத்தினரதும் பாதுகாப்பிற்காக எந்த பயமுமின்றி சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை” உருவாக்கும் நோக்கத்துடன் தேசிய பாதுகாப்பை உறுதி செய்தலிலும் அனைத்து குடிமக்களுக்கும் நாட்டில் சட்டம் ஒழுங்கு முறையை நிலைநிறுத்துவதிலும் உள்ளது.

மேற்கண்ட கொள்கைக் கட்டமைப்பிற்கமைவாக, இலங்கையில் அமைதி, நல்லிணக்கம் அல்லது வளர்ச்சிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி, அதன் அனைத்து குடிமக்களின் வாழ்க்கையையும் மேம்படுத்தி, ஐ.நா.வின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

நன்றி.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close