தலைவி அவர்களே,
இந்த சபை அறிந்திருப்பதைப் போல, 'உற்பத்திமயமான குடிமக்கள், திருப்தியான குடும்பம், ஒழுக்கமானதும், நியாயமானதுமான சமூகம் மற்றும் வளமானதொரு தேசம்' ஆகிய நான்கு விளைவுகளை அடைவதை நோக்கமாகக் கொண்டதொரு கொள்கைக் கட்டமைப்பைத் தொடர்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு இலங்கை மக்கள் கடந்த நவம்பரில் மகத்தானதொரு ஆணையை வழங்கினர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முன்னொருபோதுமில்லாத வகையில் 59.09% வாக்குகளினால் வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆணை மக்களால் புதுப்பிக்கப்பட்டது. எந்தவொரு சக்திக்கும் அடிபணியாமல், மக்களையும், நாட்டின் இறையாண்மையையும் பாதுகாக்கும் அதே வேளையில், செழிப்பை நோக்கி முன்னோக்கிச் செல்வதற்காக இலங்கை மக்கள் அளித்துள்ள ஆதரவின் தெளிவான சமிக்ஞை இதுவாகும்.
தலைவி அவர்களே,
கோவிட்-19 தொற்றுநோயின் காரணமாக உலகின் மிகவும் வளர்முக நாடுகளும் கூட கணிசமான சவால்களுக்கு முகங்கொடுத்த நேரத்தில், அதன் பரவலைக் கட்டுப்படுத்தியதன் மூலம் அந்த சவாலை வெற்றிகரமாக இலங்கை எதிர்கொண்டது. ஒரு வலுவான உள்நாட்டு சுகாதார அமைப்பின் உதவியுடனான தேசிய அளவிலான தடுப்பு நடவடிக்கைகளின் ஒருங்கிணைந்த பொறிமுறைக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கோவிட்-19 முன்வைத்த சவால்களைக் குறைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட பாகுபாடற்றதும், முழுமையானதுமான தொடர் நடவடிக்கைகளின் விளைவாக மக்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு முக்கியத்துவமளிக்கப்பட்டது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், நாள் வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நிதியுதவிகளை வழங்குதல், இலங்கையர்களை நாட்டிற்கு மீள அழைத்து வருவதனை ஒருங்கிணைந்த முறையில் நிர்வகித்தல், தற்போதுள்ள தொழில்களை ஆதரிக்கும் அதே வேளையில் புதிய பொருளாதாரப் போக்குகளை உருவாக்குவதற்கான வணிக வழிகளை ஆராய்தல் மற்றும் விவசாயிகள், நுகர்வோர் மற்றும் விநியோகஸ்த்தர்களை இணைத்தல், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குதல் மற்றும் தொலைநோக்கு கல்வி உள்ளிட்ட டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை இத்தகைய நடவடிக்கைகள் உள்ளடக்குகின்றன.
மிதமான வழிமுறைகளினாலாயினும் கூட, அதிகம் வளமுள்ள நாடுகளை விடவும் திறம்பட கோவிட்-19 ஐ கட்டுப்படுத்த இலங்கை மேற்கொண்ட முயற்சிகளை உலக சுகாதார தாபனம் பாராட்டியுள்ளது. கடந்த மாத ஆரம்பத்தில் 71% வாக்களிப்புடன் பாராளுமன்றத் தேர்தலை வெற்றிகரமாக நடாத்திய தெற்காசியாவின் முதலாவது நாடு இலங்கை ஆவதுடன், யுனிசெஃப் பாராட்டியபடி பாடசாலைகளைத் திறந்து குழந்தைகளை பாதுகாப்பான வழியில் மீள வெளிக்கொணர்ந்த தெற்காசியாவின் முதல் நாடுகளில் இலங்கையுவும் ஒன்றாகும். மேலும், உலக பிரயாண மற்றும் சுற்றுலா சபை சமீபத்தில் இலங்கையை சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பான புகலிடமாக அங்கீகரித்துள்ளது.
தலைவி அவர்களே,
கோவிட்-19 தொற்றுநோய் உச்ச நிலையில் இருந்த போது, இலங்கையின் சுமார் 1.5 மில்லியன் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளிநாடுகளில் இருந்தனர். இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் பலர் தமது தொழில்கள் மற்றும் வாழ்வாதார வழிமுறைகளை இழக்கும் கடுமையான நிலைமையை எதிர்கொள்ளும் அதே நேரத்தில் சிலர் கட்டாயமாக நாடு திரும்புவதற்கான சவாலை எதிர்கொள்கின்றனர்.
அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்காகவும், தேவையான இடங்களில் உணவு மற்றும் மருந்துகளை வழங்குவதற்காகவும், முடிந்தவரை பெற்றுக்கொண்ட நாடுகளுடன் இணைந்து அவர்களின் நிலை மற்றும் கோவிட்-19 பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ வசதிகளை சட்டபூர்வமாக்குவதற்காகவும் இலங்கை அரசாங்கம் அதிக முன்னுரிமை அளித்துள்ளது.
சவால்களை சமாளிப்பதற்கும், சுகாதாரம், தனிமைப்படுத்தல் மற்றும் பயணப் போக்குவரத்து அம்சங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு முழுமையான அரசாங்க அணுகுமுறையின் மூலமாக இலங்கை தற்போது கிட்டத்தட்ட 40,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வருகையை விரைவுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
தலைவி அவர்களே,
தொற்றுநோயின் காரணமாக வளர்ந்து வரும் நாடுகள் முன்னோடியில்லாத வகையில் பொருளாதார மற்றும் கடன் நெருக்கடியை எதிர்கொண்டு வருவதனால் இலங்கை கவலை கொண்டுள்ளது. இந்த நாடுகளுக்கான கடன் நிவாரணம் மற்றும் நிதித் தூண்டுதலின் தேவையை முறையாக அங்கீகரிக்க வேண்டும். தொற்றுநோயால் ஏற்படும் அல்லது மோசமடைந்து வரும் பல்வேறு சமூகப் பொருளாதார விளைவுகளை எதிர்கொள்வதற்காக இத்தகைய நாடுகளுக்குத் தேவையான நிதி உதவியை வழங்குவது முக்கியமாகும். கோவிட்-19 நிலைமைக்கு பிரதிபலிப்பதற்குத் தேவையான முக்கிய மருத்துவ வளங்களை அனைத்து நாடுகளும் கட்டுப்பாடற்ற வகையில் அணுகிக் கொள்வதனையும், அவதற்றை கொள்முதல் செய்வதில் தடைகள் எதிர்கொள்ளப்படாமலிருப்பதனையும் உறுதிசெய்வது அவசியமாகும்.
இந்த நெருக்கடிக்கான உலகளாவிய பிரதிபலிப்பை பூர்த்தி செய்வதற்கும் பலப்படுத்துவதற்கும் தேசிய மற்றும் பிராந்திய அளவிலான முயற்சிகள் அவசியமென இலங்கை நம்புகின்றது. அதன்படி, இந்த சவாலை எதிர்கொள்ளும் முயற்சிகளில் தெற்காசியப் பிராந்தியத்திற்கு உதவுவதற்காக, சார்க் கோவிட்-19 அவசர நிதிக்கு இலங்கை 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
இறுதியாக,
அனைத்து மக்களின் நலனுக்காகவும் கோவிட்-19 க்கு பிரதிபலிப்பதற்கான விரிவான, கூட்டு மற்றும் பயனுள்ளதொரு பிரதிபலிப்பை நோக்கிய உலகளாவிய முயற்சிகளுக்கான இலங்கையின் தெளிவான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகின்றேன்.
நன்றி.