பிராந்திய வளர்ச்சிக்காக, ‘புதிய வழமை’யைத் தழுவுமாறு பல்துறைசார் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவுக்கான வங்காள விரிகுடா முயற்சியின் (BIMSTEC) உறுப்பு நாடுகளிடம் இலங்கை வேண்டுகோள் 

பிராந்திய வளர்ச்சிக்காக, ‘புதிய வழமை’யைத் தழுவுமாறு பல்துறைசார் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவுக்கான வங்காள விரிகுடா முயற்சியின் (BIMSTEC) உறுப்பு நாடுகளிடம் இலங்கை வேண்டுகோள் 

பல்துறைசார் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவுக்கான வங்காள விரிகுடா முயற்சியின் (BIMSTEC) உறுப்பு நாடுகளின் சிரேஷ்ட அதிகாரிகளின் 21 ஆவது அமர்வின் முதலாவது மெய்நிகர் கூட்டம், 02 செப்டெம்பர் 2020 அன்று கொழும்பில் இடம்பெற்றது. அதற்குத் தலைமை தாங்கிய, இலங்கை வெளிநாட்டமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் கொலம்பகே, உறுப்பு நாடுகளை ‘புதிய வழமையை விரைவாக பின்பற்றவேண்டுமென வலியுறுத்தினார்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் வெளிநாட்டமைச்சின் செயலாளர் கருத்துரைக்கையில், கோவிட் 19 ஆனது, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகமான அண்டோனியோ கட்டரெஸ் அவர்கள் விபரித்திருப்பதுபோல, சகல நாடுகளையும் பல்வேறு வகைகளில் பாதித்திருப்பதாகவும் அது ஒரு மருத்துவ அபாயத்தினை பொருளாதார மற்றும் மானுட பேரழிவாக மாற்றியமைத்திருப்பதாகவும் இதன் பின்னர் உலகளவிலான இயக்கம் முன்போல இருக்கப்போவதில்லையென்றும் தெரிவித்தார். இந்தப் பேரழிவினால் உலகளாவிய மற்றும் பிராந்திய மாற்றிறன்கள் இடைநிறுத்தப்பட்டிருப்பதால் பொருளாதாரச் செயற்பாடுகள் குறைந்தும்,  லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வேலைகளை இழந்தும்,  வறுமையில் வாடியும் இருப்பதால் BIMSTEC உறுப்பு நாடுகளின் தினசரி வாழ்க்கை பாதிப்படைந்துள்ள நிலையில்,  ஜூன் 2020 இல்  BIMSTEC தினத்தின் 23 ஆவது ஆண்டு நிறைவில் BIMSTEC உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கோவிட்-19 இன் மோசமான பாதிப்புக்களை எதிர்கொள்வது தொடர்பில் உறுதிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பினை வழங்குவதால், இந்தக் கூட்டமானது, பொருத்தமான நேரத்திலேயே அமைந்துள்ளது. கோவிட்-19 இற்குப் பின்னர் நோயிலிருந்து மீண்டெழுதல் மற்றும் புனர்வாழ்வுச் செயன்முறையில் பிராந்திய கூட்டுறவிற்கு உந்துசக்தியளிக்கக்கூடிய சிறந்ததும் விரிவாற்றல் கொண்டதுமான நிறுவனத்தைக் கட்டியெழுப்பவேண்டிய தேவையை உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஏற்றுக்கொண்டு வலியுறுத்தியமையால் அவர்களின் செய்திகள் தெளிவாகவும் ஊக்கமளிப்பதாக இருப்பதாகவும் செயலாளர் தெரிவித்தார்.

வெளிநாட்டமைச்சின் செயலாளர் மேலும், இப்பிராந்தியமானது, உலக சனத்தொகையின் 23 வீதத்தினைக் கொண்டுள்ள நிலையில், இந் நோய்ப்பரவலால் பாதிப்படையக்கூடிய பிரிவுகளைப் பாதிக்கும் மோசமான பின்விளைவுகள், உறுப்பு நாடுகளை ஒரு காலத்தில் சமூக அந்தஸ்தில் உயர்த்திய மூலவளங்களை திசைமாற்றி, பொருளாதாரத்தினையும் முடக்கும் எனத் தெரிவித்தார். இந்த நோய்ப்பரவலுக்கு முன்னர், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பொது திட்ட அளவாகவிருந்த 3 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள், இந்த அழிவினால் அடையமுடியாததாக ஆகிவிடக்கூடாது என்ற வெளிநாட்டமைச்சின் செயலாளர், அந்த இலக்கை விஞ்சவேண்டும் என்று தெரிவித்தார். எனவே, துறைசார் நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக  வர்த்தகம் மற்றும் மூலதன கூட்டுறவினை ஊக்கப்படுத்தி, எரிபொருள் ஒத்துழைப்பினை வலுப்படுத்தி, இணைப்பு மற்றும் மக்கள் மத்தியிலான தொடர்பாடலை அதிகரித்து, பேரிடர் முகாமைத்துவம் மற்றும் பொது சுகாதாரத்தில் கவனஞ்செலுத்தி, பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தினை முறியடித்து, காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளைக் கையாண்டு, வறுமையை ஒழிப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் எனத் தெரிவித்தார்.

BIMSTEC இல் தகவல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை உருவாக்கத் துறையில் முன்னணி நாடு என்ற வகையில்,  கோவிட்-19 இற்குப் பிந்திய பாதிப்புக்களை கவனத்தில் கொண்டு, தினசரி வாழ்க்கையில் தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்துவதை மேம்படுத்துவதற்கான முன்வைப்புக்களைத் தாம் பரிந்துரை செய்யவிருப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது. அத்துடன், இணைய அடிப்படையிலான பொருளாதார நடவடிக்கைகளுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக, கொழும்பில் BIMSTEC தொழில்நுட்ப மாற்ற வசதியை அமைப்பதற்கான ஆலோசனையானது, இத்துறையில் இலங்கை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கும் வேலைகளை மேலும் விரிவாக்கும்.

21 ஆவது சிரேஷ்ட அதிகாரிகளின் கூட்டத்திற்கு முன்னதாக, நான்காவது BIMSTEC நிரந்தர பணிக்குழுவின் கூட்டம் இடம்பெற்றது. இதற்கு வெளிநாட்டமைச்சின் பொருளாதார அலுவல்கள் பிரிவின் மேலதிக செயலாளர் தூதுவர் பி எம் அம்ஸா தலைமை வகித்தார்.

இக்கூட்டங்களில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள்; இந்நிறுவனத்தின் நிருவாக செயற்பாடுகள் மற்றும் நிதி பரிசீலனைகளை மையப்படுத்தியதாகவும் 17 ஆவது அமைச்சர்களுக்கான கூட்டத்தில் அங்கீகரிப்பதற்கான மற்றும் 5ஆவது BIMSTEC  உச்சிமாநாட்டினை ஏற்று நடாத்துவதற்கான ஆவணங்களைத் தயாரித்தல் மற்றும் இறுதிப்படுத்தல் பற்றியும்  அமைந்தன.

நாட்டில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் அரசாங்கத்தினால் முழுமையாகப் பின்பற்றப்பட்டதை இனங்கண்டு, உலக பயணம் மற்றும் சுற்றுலா கழகத்தினால் ‘பாதுகாப்பான பயணம்’ என்ற முத்திரையை இலங்கை பெற்றிருப்பதால், 17 ஆவது அமைச்சர்களுக்கான கூட்டத்திற்குப் பின்னர், 5ஆவது BIMSTEC  உச்சிமாநாட்டினை தாம் நடாத்துவதற்குத் தயார் நிலையில் உள்ளதாக இலங்கைக் குழுவினர் தெரிவித்தனர்.  உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் கோவிட்-19 நோய்ப்பரவலை எதிர்ப்பதில் பல்வேறு கட்டங்களில் இருப்பதால், அவற்றுடனான ஆலோசனைகளுக்குப் பின்னர் இக்கூட்டங்களுக்கான திகதிகள் தீர்மானிக்கப்படும்.

செயலாளர் நாயகமான தூதுவர் ஷஹிதுல் இஸ்லாம் அவர்களின் மூன்று வருட தவணைக்காலம் செப்டெம்பர் இறுதியில் முடிவடையும் நிலையில், அவரது பணி உறுப்பு நாடுகளால் பாராட்டப்பட்டது. குறிப்பாக அவரது தலைமையிலான பங்களிப்பினையும்  வழங்கிய ஆதரவையும் இலங்கை மெச்சியது.  அடுத்த BIMSTEC செயலாளர் நாயகமாக பூட்டான் நாட்டைச் சேர்ந்த திரு டென்சின் லெக்ஃபெல் அவர்கள் முன்மொழியப்பட்டமையை உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொண்டன.

இலங்கையால் முன்மொழியப்பட்டமைக்கிணங்க, முன்னாள் இந்திய ஜனாதிபதி, மேன்மை தங்கிய பிரணாப் முகர்ஜி அவர்களின் இறப்பினையொட்டி, இந்திய பிரதம மந்திரி மற்றும் இந்திய மக்களுடன் இணந்து, உறுப்பு நாடுகளால் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இலங்கை குழுவினருள் பொருளாதார அலுவல்கள் (பல்தரப்பு) பிரிவின் இடையேற்பு பணிப்பாளர் நாயகம் அன்சுல் ஜான், பிரதி சட்ட ஆலோசகர் திலனி சில்வா மற்றும் வெளிநாட்டமைச்சின் நிறைவேற்று உதவியாளர் கலனி தர்மசேன ஆகியோர் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.

 

 

வெளிநாட்டமைச்சு

கொழும்பு

3 செப்டெம்பர் 2020

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close