கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய குழுவின் தூதுவர் டெனிஸ் செய்பி மற்றும் இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்களும் ருமேனியா, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் துணைத் தூதுவர்களும் மரியாதை நிமித்தமாக வெளி நாட்டமைச்சர் தினேஷ் குணவர்த்தன அவர்களை 2 செப்டெம்பர் 2020 அன்று சந்தித்துப் பேசினர்.
வெளிநாட்டமைச்சரின் மீள்நியமனத்தையொட்டி இத்தூதுவர்கள் வாழ்த்து தெரிவித்ததுடன், இலங்கையுடன் நெருங்கிய கூட்டுறவைத் தொடர்ந்து பேணுவதிலான தமது விருப்பத்தையும் வெளிப்படுத்தினர். இலங்கை ஏற்றுமதிகளின் முதன்மை சேரிடமாகவும் வெளிநாட்டு நேரடி மூலதனம் மற்றும் சுற்றுலாத்துறைக்கான ஒரு பிரதான மூலமாகவும் ஐரோப்பா இருப்பது இச்சந்திப்பில் குறிப்பிடப்பட்டது. கோவிட் -19 பரவலைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை சிறப்பாக செயலாற்றியதாக குறிப்பிட்ட தூதுவர்கள், அதன் விளைவாக, இலங்கையில் விமான நிலையங்கள் மீளத் திறக்கப்பட்டதும் ஐரோப்பிய சுற்றுலா பயணிகள் மீளவும் இலங்கைக்கு வருவார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தனர்.
மேலும் தூதுவர்கள் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய அபிவிருத்தி உதவியின் நிலைப்பாடு தொடர்பிலும் கலந்துரையாடி, அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கு உதவும் தமது விருப்பத்தையும் வெளிப்படுத்தினர். அவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் நடைபெற்றுவரும் விவசாய, தொழிற்பயிற்சி, உணவுப் பாதுகாப்பு மற்றும் பிற செயற்றிட்டங்கள் தொடர்பாக சுருக்கமாக எடுத்துக்கூறினர்.
தூதுவர்கள் ஆலோசிக்கப்பட்டிருக்கும் திருத்தங்கள் மற்றும் அண்மைய தேர்தலின் பின்னர் உருவான புதிய அரசாங்கத்தின் அரசியல் நிகழ்வுகள் பற்றியும் கலந்தாலோசித்தனர்.
இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் வெளி நாட்டமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜனநாத் கொலம்பகே ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
வெளி நாட்டமைச்சு
கொழும்பு
04 செப்டெம்பர் 2020