ஆசிய நாடுகளுடனான உறவுகளைப் பலப்படுத்தவேண்டிய  தேவை பற்றி பிராந்திய கூட்டுறவுக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய வலியுறுத்தல் 

ஆசிய நாடுகளுடனான உறவுகளைப் பலப்படுத்தவேண்டிய  தேவை பற்றி பிராந்திய கூட்டுறவுக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய வலியுறுத்தல் 

பிராந்திய கூட்டுறவுக்கான இராஜாங்க அமைச்சர், தாரக பாலசூரிய, இன்று (19 ஆகஸ்ட் 2020) வெளிநாட்டமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். அமைச்சில் இவரது வருகையின்போது, வெளிநாட்டமைச்சின் செயலாளர், அட்மிரல் (பேராசிரியர்) ஜயநாத் கொலம்பகே மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளால் வரவேற்கப்பட்டார். இவர் தனது கடமைகளை ஆரம்பிப்பதற்கு முன்பாக, மத அனுஷ்டானங்கள் இடம்பெற்றன.

கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர், இராஜாங்க அமைச்சர் பாலசூரீய சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பிற அலுவலர்கள் மத்தியில் உரையாற்றுகையில், இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கைக்குள் அமையும் பிராந்திய கூட்டுறவின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டு, அதன் மூலமாக நாட்டுக்கு முதலீடுகளைப் பெற்றுத்தரும் வழிவகைகளை ஆராயவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.  மேலும் இவர், இலங்கை ஆசிய பிராந்திய நாடுகளுடனான நெருங்கிய உறவுகளைப் பேணவேண்டிய தேவையையும் முன்னிலைப்படுத்தினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையின் கீழ், நாட்டின் வெளிநாட்டுக் கொள்கைச் செயல்நோக்கங்களை அடைவதில் வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுடனும் அமைச்சின் அதிகாரிகளுடனும் நெருங்கிப் பணிபுரிவதை தாம் எதிர்பார்த்திருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இராஜாங்க அமைச்சரை வரவேற்ற வெளிநாட்டமைச்சின் செயலாளர், அட்மிரல் கொலம்பகே, அவரது புதிய நியமனத்திற்காக வாழ்த்துக்கூறி, பிராந்திய கூட்டுறவு மூலம் அயல் நாடுகளுடன் நட்புறவுக் கொள்கையைப் பேணும் அதேநேரம், இலங்கையின் பொருளாதாரத் துறையின் அபிவிருத்திக்கு வெளிநாட்டமைச்சின் பங்களிப்பினையும் முன்னிலைப்படுத்தினார்.

முதன் முதலாக 2015 இல் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் பாலசூரிய, நவம்பர் 2019 இல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நிறுவப்பட்ட புதிய அரசாங்கத்தில் சமூக பாதுகாப்புக்கான இராஜாங்க அமைச்சராகவிருந்தார்.

 

அதற்கு முன்னர் இவர் 2012 ஆம் வருடம் சபரகமுவ மாகாண சபையில் உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

 

 

வெளிநாட்டமைச்சு

கொழும்பு

19 ஆகஸ்ட் 2020

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close