வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்த்தனஅவர்கள் இன்று திங்கட்கிழமை, 17 ஆகஸ்ட் 2020 அன்று, வெளிநாட்டமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
அமைச்சர் குணவர்த்தன; வெளிநாட்டமைச்சின் செயலாளர், அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் அமைச்சின் பிற சிரேஷ்ட அதிகாரிகளால் வரவேற்கப்பட்டார். பல்சமய வழிபாடுகளுக்குப் பின்னர், அமைச்சர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
பின்னர் அமைச்சர் அலுவலக ஊழியர்கள் மத்தியில் உரையாற்றியபோது, இலங்கை மக்களால் வழங்கப்பட்ட கட்டளைகளுக்கமைவாக, புதிய சவால்களை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயாராகவிருப்பதாக குறிப்பிட்டார். ஆட்சியிலுள்ள பலமான அரசாங்கமும் அதன் அணிசேரா மற்றும் நட்புறவுடனான வெளிநாட்டுக்கொள்கையும் நாட்டுக்கு நன்மையளிக்கும் பல முக்கிய மாற்றங்களைக் கொண்டுவருவதாக எதிர்பார்க்கப்படுகிறது என்பதை அமைச்சர் வலியுறுத்தினார். இந்த முயற்சியில் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களையும் அரசாங்கத்துடன் இணையுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
கோவிட்-19 இற்குப் பிந்திய காலகட்டத்தில் எழும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்தினால் எடுக்கப்படும் முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுகையில், அமைச்சர், எதிர்வரும் வருடங்களுக்குள் அதன் பொருளாதார இலக்குகளை அடைவதற்காக இலங்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். இக்கருத்தின் அடிப்படையில், ஏற்றுமதி, முதலீடுகள் மற்றும் இலங்கையர்களின் தொழில்முயற்சிகளை விரிவாக்கும் நோக்குடன், வர்த்தக திணைக்களமும், வெளிநாட்டமைச்சின் மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சரை வரவேற்றுப் பேசிய வெளிநாட்டமைச்சின் செயலாளர், அட்மிரல் கொலம்பகே, இலங்கையில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதில் வெளிநாட்டமைச்சின் வெற்றிகரமாக பங்கு பற்றிக் குறிப்பிட்டார். ஜனாதிபதியின் தொலைநோக்கான தேசிய பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி மற்றும் வெளிநாட்டு உறவுகள் ஆகிய மூன்று தூண்கள் பற்றிக் குறிப்பிட்ட செயலாளர் கொலம்பகே, புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டமைச்சரின் தொலை நோக்கானது, நிச்சயமாக இலங்கையை சர்வதேச அளவில் நேர்மறையாகப் பிரதிபலிக்குமெனத் தாம் நம்பிக்கை கொள்வதாகத் தெரிவித்தார். புதிய அரசாங்கத்தின் வெளிநாட்டுக்கொள்கைச் செயல்நோக்கங்களை பூர்த்திசெய்வதற்கு வெளிநாட்டுச் சேவை மற்றும் வெளிநாட்டமைச்சு ஆகியவற்றின் பங்கினைப் பலப்படுத்துவதில் அமைச்சர் தனது முழுமையான ஆதரவையும் நல்கினார்.
வெளிநாட்டமைச்சு
கொழும்பு
17 ஆகஸ்ட் 2020