உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை அணுகிக் கொள்வதற்கான வழிமுறைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாலைதீவில் வசிக்கும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பல சிரமங்களைத் தணிக்கும் முயற்சியில், வெளிநாட்டு உறவுகள் அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 10,000 கிலோ உதவிப் பொதிகளை (2000 பொதிகள்) மாலியிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் தொடர்ந்தும் விநியோகித்து வருகின்றது.
இந்த உதவிப் பொதிகளை கட்டணமின்றி ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சரக்கு விமானம் மூலம் 2020 ஜூன் 7 ஆந் திகதி மாலைதீவுக்கு எடுத்துச் சென்றதன் மூலமாக, இந்த நோக்கத்திற்காக வெளிநாட்டு உறவுகள் அமைச்சுடன் இணைந்து ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் ஒத்துழைத்துள்ளது.
கிரேட்டர் மாலி பகுதிக்கு வெளியில் அமைந்துள்ள தீவுகளான மாலி, ஹூல்ஹூமாலி, விலிங்கிலி, மாஃபுஷி, கெலா, துலுஸ்டூ, காகி மற்றும் மாபின்ஹூரா ஆகிய பிரதேசங்களில் வதியும் இலங்கைச் சமூகத்தினருக்கும், மாலைதீவிலுள்ள சஃபாரி படகுகளிலிருக்கும் இலங்கைக் குழு உறுப்பினர்களுக்கும் இந்த உதவிப் பொதிகளை விநியோகிப்பதற்கு இலங்கை உயர் ஸ்தானிகராலயம் ஆரம்பித்துள்ளது. மேலும் திலாபுஷி, கன் மற்றும் நவுரு தீவுகளுக்கும் இந்த உதவிப் பொதிகளை அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இந்த அத்தியாவசியப் பொருட்கள் கிரேட்டர் மாலியிலும் (மாலி, ஹூல்ஹூமாலி மற்றும் விலிங்கிலி தீவுகள்) உயர் ஸ்தானிகராலயத்தால் தொடர்ந்தும் விநியோகிக்கப்படவுள்ளன.
மாலைதீவிலிருந்த மிகவும் பாதிக்கப்படக்கூடிய இலங்கைக் குழுக்கள் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான வெளியேற்றுவதற்கான சிறப்பு விமானங்களில் 2020 மே 14 மற்றும் ஜூன் 13 ஆகிய திகதிகளில் நாட்டிற்கு மீள அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள இலங்கைச் சமூகத்தினருக்கு இந்த அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. ஜனாதிபதி செயலகம் மற்றும் மாலைதீவு அரசாங்கத்துடனான நெருக்கமான ஒருங்கிணைப்புடன், இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மற்றும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு ஆகியன இந்த விமானங்களை ஒழுங்கு செய்தன.