ஜோர்தானில் கோவிட்-19 தொற்றுநோயின் பரவல் குறித்து இலங்கைத் தூதரகம் தொடர்ந்தும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், ஜோர்தானிலுள்ள இலங்கையர்களின் நலன்களை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது. ஜோர்தானில் கோவிட்-19 நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் தமது தொழில்களுக்குத் திரும்ப முடியாத ஏழை இலங்கைக் குடும்பங்களுக்கு உலர் உணவுகளை தூதரகம் தொடர்ந்தும் விநியோகித்து வருகின்றது. இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட நிதி உதவியின் மூலமாக ஜோர்தானிலுள்ள 576 இலங்கைக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. தேவைகள் மிகுந்த இலங்கையர்களுக்கு மேலதிகமான உலர் உணவுப் பொதிகளை சரியான நேரத்தில் விநியோகிப்பதில் பெருந்தன்மையுடன் ஈடுபட்ட இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு, தம்கீன் மற்றும் கரிட்டாஸுக்கும் தூதரகம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.
தொற்றுநோய் நிலையினால் மூடிய நிலையில் செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் ஜோர்தானிலுள்ள அட் துலாயிலுள்ள ஈ.ஏ.எம். மெலிபன் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் யுனைடெட் கிரியேஷன்ஸ் தொழிற்சாலை, சஹாபிலுள்ள பிரெஸ்டீஜ் தொழிற்சாலை மற்றும் எம்.ஏ.எஸ். க்ரீடா போன்ற ஆடைத் தொழிற்சாலைகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட தூதரகம், இந்தத் தொழிற்சாலைகளில் 46 இலங்கையர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொண்டது. தொழில்வாய்ப்புக்களற்ற இந்த இலங்கையர்கள் தமது வாழ்வாதாரங்களை இழக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, அவர்களை தமது பணியாளர்களாக உள்வாங்கிக் கொள்ளும் வகையில் உதவுவதற்கு முன்வந்த இத்தகைய தொழிற்சாலைகளிடமிருந்து கிடைத்த ஆதரவுகளை தூதரகம் நன்றியுடன் பாராட்டுகின்றது.
தடுப்பு மையங்களிலுள்ள இலங்கையர்களுடன் தூதரகம் தொடர்ச்சியாக தொடர்புகளைப் பேணி, அவர்களது நலன்கள் குறித்து விசாரித்து வருகின்றது. தற்போது ஜோர்தானிலுள்ள எந்தவொரு இலங்கையரும் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகவில்லை என்பதுடன், 2020 மார்ச் மாத இறுதியில் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளான இலங்கையர் ஒருவர் கண்டறியப்பட்டு, முழுமையாக குணமடைந்ததன் பின்னர் அவர் வெளியேறினார். இலங்கை நோயாளியை சிறப்பாகக் கவனித்து, சிகிச்சைகளை அளித்த பிரின்ஸ் ஹம்சா மருத்துவமனையின் ஜோர்தானிய மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் அர்ப்பணிப்புக்களுக்காக தூதரகம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.
ஜோர்தானிலுள்ள புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு தூதரகம் தொடர்ந்தும் தனது ஆதரவுகளை அளித்து வருவதுடன், துலைல் கவர்னரேட்டிலுள்ள சம்பந்தப்பட்ட தொழிலாளர் திணைக்களங்களுடன் சந்திப்புக்களை நடாத்தி, இலங்கைத் தொழிலாளர்களுக்கு காலதாமதமாக சம்பளம் வழங்கப்படுதல் தொடர்பான நிலுவையிலுள்ள சிக்கல்கல்கள் சார்ந்த விடயங்களைத் தீர்த்து வைப்பதற்காக நிரந்தரமாக மூடப்பட்டு வரும் அட் துலாயிலுள்ள தொழிற்சாலைகளுக்கும், காரக் கவர்னரேட்டிலுள்ள தொழிற்சாலைகளுக்கும் தூதரக அதிகாரிகள் விஜயங்களை மேற்கொண்டனர். உதவிகளை எதிர்பார்க்கும் நபர்களுக்கு அல்லது தொழிலாளர்கள் தொடர்பான கோரிக்கைகளுக்காக 24/7 பிரத்தியேக அவசரகால தொலைபேசி சேவையொன்று செயற்படுத்தப்படுகின்றது.
இலங்கைக்கு மீள நாடு திருப்ப எதிர்பார்க்கும் இலங்கையர்கள் பற்றிய தரவுகளை தற்போது தூதரகம் சேகரித்து, தொகுத்து வருகின்றது.
இலங்கைத் தூதரகம்
ஜோர்தான்