அக்டோபர் 10 மற்றும் 11 ஆந் திகதிகளில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு கொழும்பில் நடாத்திய பிம்ஸ்டெக் நிரந்தர செயற்குழுவின் (BPWC) 2வது கூட்டத்தின் போது, வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) மற்றும் அமைப்பின் வரைவு சாசனம் ஆகியவற்றின் கூட்டுறவிற்கான அம்சங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, பிம்ஸ்டெக் செயலகம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு இடையில் கைச்சாத்திடப்பட வேண்டிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த கலந்தாலோசனைகளில் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியான்மார், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய அனைத்து பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளும் மற்றும் பிம்ஸ்டெக் செயலகமும் கலந்து கொண்டன. இந்த கூட்டத்திற்கு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பொருளாதார விவகாரங்கள் பிரிவிற்கான மேலதிக செயலாளர் திரு. பி.எம். அம்ஸா தலைமை தாங்கினார்.
தனது தொடக்க உரையில், பிம்ஸ்டெக்கை மிகவும் வலுவான அமைப்பாக மாற்றுவதில் உறுப்பு நாடுகளின் தனிப்பட்ட மற்றும் கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தை வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க வலியுறுத்தினார். தனது மூன்றாவது தசாப்தத்தில் நுழைந்துள்ள பிம்ஸ்டெக், 3.7% ஆன உள்ளக பிராந்திய வர்த்தகம் மற்றும் அண்ணளவாக 5% ஆன முதலீடு என்ற வகையில், பிராந்தியத்தின் முழுமையான சமூக - பொருளாதார ஆற்றலின் பலன்களை இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை என அவர் கவலையுடன் சுட்டிக்காட்டினார். கற்பனையாற்றல், வளங்கள் அல்லது அரசியல் விருப்பம் போன்றவற்றில் அமைப்பை மீளச் செய்யும் விடயங்கள் குறித்து புரிந்துகொள்வதற்கு பிரதிநிதிகள் செயற்பாட்டு ரீதியில் முயற்சித்தல் வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். தற்போதைய பிம்ஸ்டெக் தலைவர் என்ற வகையில், நிறுவனத்தை மீண்டும் உற்சாகப்படுத்துதல், பிம்ஸ்டெக் சாசனத்தை விரைவாக இறுதிப்படுத்துதல், வளங்களை அதிகபட்சமாக பயன்படுத்துவதற்காக துறைகளை பகுப்பாய்வு செய்தல் மற்றும் பிம்ஸ்டெக்கை அதன் அனைத்து மக்களுக்கும் உறுதியான நன்மைகளை வழங்கும் ஒரு முடிவு சார்ந்த அமைப்பாக மாற்றுதல் ஆகியன முக்கியமானவையாக இலங்கை கண்டறிந்தது. ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னர், பிம்ஸ்டெக்கின் உறுப்பு நாடுகள் இலங்கைக்கு காட்டிய ஒற்றுமைக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்த அதே வேளை, குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நாடுகடந்த குற்றங்கள் போன்றவற்றில் இலங்கை நெருக்கமான ஒத்துழைப்பை நோக்கி முன்னேறிச் செல்லும் என தெரிவித்தார். IORA, ஆசியான் மற்றும் ADB போன்ற பல்வேறு சர்வதேச அமைப்புகளுடன் பிம்ஸ்டெக் நெருக்கமாக பணியாற்றுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
நிறுவன சீர்திருத்தங்கள், ஒத்துழைப்பு மற்றும் பிம்ஸ்டெக் சாசனம் ஆகியவற்றின் பகுப்பாய்வின் மூலம் துறைசார் நடவடிக்கைகளை புதுப்பித்தல் ஆகியவற்றுடன் தொடர்பாக காத்மாண்டுவில் 2018 ஆகஸ்டில் நடைபெற்ற 4 வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை தனது உரையின் போது குறிப்பிட்ட பிம்ஸ்டெக்கின் செயலாளர் நாயகம் தூதுவர் எம் ஷாஹிதுல் இஸ்லாம், கொழும்பில் நடைபெறவுள்ள ஐந்தாவது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டிற்கு முன்னர், நடைமுறையிலுள்ள பணிகளின் நிலைமையை வழங்குவதற்குப் புறம்பாக, ஒப்புதலுக்கான சில உறுதியான விளைவுகளை முன்வைக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார். BPWC என்பது அந்தந்த தலைநகரங்களில் பிம்ஸ்டெக்கின் தேசிய குவியப் புள்ளிகளாக செயற்படும் உறுப்பு நாடுகளின் சிரேஷ்ட மட்ட அதிகாரிகளைக் கொண்டுள்ளமையினால், அதிகபட்சமானதை உருவாக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
நிதி மற்றும் மனித வளங்கள் மூலம் பிம்ஸ்டெக்கின் நிறுவன ரீதியான திறனை விரிவுபடுத்துவதற்காக காத்மாண்டுவில் நடைபெற்ற 4 வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தைத் தொடர்ந்து, செயலகத்திற்கு புதிய பணிப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என BPWC மேலும் ஆலோசித்தது. 2020 ஜூன் மாதம் பிம்ஸ்டெக் செயலகத்திற்கு பணிப்பாளர் ஒருவரை நியமிப்பதற்கு இலங்கையும் தகுதி பெற்றுள்ளது. பிம்ஸ்டெக் நிறுவனங்கள் / அமைப்புக்களை நிறுவுவது தொடர்பான சங்கத்தின் குறிப்பாணையின் புதுப்பிக்கப்பட்ட வரைவு வார்ப்புரு, நடவடிக்கைகள் / நிகழ்வுகளின் வரைவு நாட்காட்டி - 2020 மற்றும் 2020 ஆம் நிதியாண்டிற்கான செயலகத்தின் மதிப்பிடப்பட்ட பாதீடு ஆகியன தொடர்பிலும் இந்தக் கூட்டத்தின் போது கவனம் செலுத்தப்பட்டது. 2020 ஜனவரி / பெப்ரவரி மாதங்களில் நடைபெறவிருக்கும் BPWC இன் 3 வது கூட்டத்திற்கான அடித்தளங்களை அமைக்கும் பிம்ஸ்டெக்கின் நோக்கங்களை அடைவதற்கான உறுதிப்பாட்டை அனைத்து உறுப்பு நாடுகளும் உறுதிப்படுத்தியதன் மூலம் கூட்டம் நிறைவடைந்தது.
பிம்ஸ்டெக்கின் செயலாளர் நாயகம் தூதுவர் ஷாஹிதுல் இஸ்லாம் கூட்டத்தின் பக்க நிகழ்வுகளில் வெளிவிவகார செயலாளரை சந்தித்து, பிம்ஸ்டெக்கின் நிறுவன மற்றும் செயற்பாட்டுக் கட்டமைப்பை வலுப்படுத்துவதை நோக்காகக் கொண்ட முறைகள் குறித்து கலந்துரையாடினார். வழக்கமான நிர்வாக விவரங்களுடன் முன்கூட்டியே ஆக்கிரமிக்கப்படுவதை விட, பிம்ஸ்டெக்கை அதன் மக்களின் அபிலாஷைகளுக்கு சேவை செய்யும் கற்பனை வலுவான அமைப்பாக மாற்றுவதற்காக இலங்கை முழுமையாக ஈடுபடும் என வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க செயலாளர் நாயகத்துக்கு உறுதியளித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு