பொதுநலவாய நீல சாசனத்தின் கீழ் சதுப்புநில சூழலமைப்புகள் மற்றும் வாழ்வாதார நடவடிக்கைக் குழுவின் (MELAG) முதலாவது கூட்டம், இலங்கையின் நீர்கொழும்பில் 2019 அக்டோபர் 7 முதல் 9 வரை நடைபெற்றது.
உலகளாவிய காலநிலை இடர் குறியீட்டில் இலங்கை 2 வது இடத்தைப் பிடித்திருக்கும் நேரத்தில், சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, லண்டனில் நடைபெற்ற 2018 பொதுநலவாய தலைவர்கள் கூட்டத்தின் போது, பொதுநலவாய நீல சாசனத்தின் சதுப்புநில சூழலமைப்புகள் மற்றும் வாழ்வாதார நடவடிக்கைக் குழுவிற்காக (MELAG) இலங்கை முனைப்புடன் செயற்பட்டது. கடல் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக 53 பொதுநலவாய உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற உறுதிப்பாடான நீல சாசனத்தின் கீழ் ஒன்பது 'செயற்குழுக்களை' வழிநடத்த முன்வந்த 12 நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். பொதுநலவாய நீல சாசனத்தின் 'சாம்பியன்' நாடுகள், உலகின் மிக முக்கியமான கடல் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான கூட்டு நடவடிக்கை மற்றும் வலுவான, புது உத்திகளுக்கு அடித்தளத்தை அமைத்து வருகின்றன.
ஆகஸ்ட் 2019 நிலவரப்படி, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், வனவாடு, பஹாமாஸ், நைஜீரியா, ஜமைக்கா, டிரினிடாட் மற்றும் டொபாகோ மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய எட்டு பொதுநலவாய நாடுகளுடன் இலங்கை இணைந்துள்ளது. உரிமைத்துவம் மற்றும் இனங்களின் பன்முகத்தன்மை, சதுப்பு நிலங்களை மீட்டெடுப்பது மற்றும் சதுப்புநில சூழலமைப்புகளின் கடலோர வாழ்வாதாரங்களுக்கு தொழில்நுட்ப அறிவு மற்றும் சிறந்த நடைமுறையைப் பகிர்ந்து கொள்ளுதல், சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகள் தொடர்பான சமூக கூட்டாண்மைகளை வலுப்படுத்துதல் மற்றும் சதுப்பு நிலங்களை பாதுகாப்பதற்கான சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்த உத்திகளை உருவாக்குதல் போன்றன உள்ளடங்கலாக, சிறந்த நடைமுறையைப் பகிர்ந்து கொள்வதையும், சதுப்பு நிலங்களின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாட்டில் பரஸ்பர ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதையும், பொதுநலவாய நகரில் சதுப்புநில சூழலமைப்புகளின் அடிப்படைத் தரவுத்தளத்தை உருவாக்குவதையும் MELAG நோக்கமாகக் கொண்டுள்ளது.
சதுப்புநிலங்கள் இன்று மிகவும் அரிதான மற்றும் அச்சுறுத்தப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகும். உலகின் சதுப்புநில காடுகளில் மூன்றில் ஒரு பங்கு கடந்த இரண்டு தசாப்தங்களில் மறைந்துவிட்டது. சதுப்புநிலங்கள் மனிதகுலத்திற்கு முக்கியமான பல நன்மைகளை வழங்குகின்றன. வளிமண்டலத்திலிருந்து கார்பன் டையொக்சைட்டை உறுஞ்சுதல் மற்றும் பிரித்தெடுத்தல், பல வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு ஒரு வாழ்விடத்தை வழங்குதல், மீன்வளத்திற்கு முக்கியமான இனங்கள் உட்பட பல விலங்கினங்களுக்கு நாற்றங்கால் மைதானமாக அமைதல் மற்றும் கடலோர அரிப்பைத் தடுத்து, காலநிலை மாற்றத்தின் பாதகமான தாக்கங்களைத் தணித்தல் ஆகியவற்றை உள்ளடக்குகின்றது. மேலும், மிக முக்கியமாக, சதுப்புநில சூழலமைப்புகளின் கார்பன் பிரித்தெடுத்தல் திறனானது, வெப்பமண்டல நிலப்பரப்பு காடுகளை விட சராசரியாக 3 முதல் 4 மடங்கு அதிகமாகும். ஆகவே, எமது கிரகத்தின் வாழ்வாதாரம், வாழ்வாதார மேம்பாடு, கார்பன் தணிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் மற்றும் பேரழிவைத் தணித்தல் போன்றவற்றில் சதுப்பு நிலங்கள் மகத்தான பங்களிப்பைச் செய்கின்றன என்பது தெளிவாகின்றது.
கூட்டத்தை ஆரம்பித்து வைக்கையில், 'மனிதகுலத்தின் உயிர்வாழ்வு எமது செயலைப் பொறுத்தது. இப்போது சரியான தேர்வுகளை மேற்கொள்வதற்கு பூமி நம்மை சார்ந்துள்ளது. பொதுநலவாய நீல சாசனத்தின் உணர்வை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், பொதுநலவாய கடல் பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கு நியாயமான, சமமான, அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான அணுகுமுறையை எடுப்பதை உறுதி செய்வதன் மூலம், எமது மக்கள் மற்றும் எதிர்கால தலைமுறையினரின் நலனுக்காக அதிக நன்மைகளைப் பெற முடியும்' என பதில் வெளிவிவகார செயலாளர் திரு. அகமத் ஏ. ஜவாத் வலியுறுத்தினார். இந்த சூழ்நிலைகளின் அடிப்படையில், ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையும், முழுமையான திறனை அடைவதற்கான நன்கு ஒருங்கிணைந்த முயற்சியும் அவசியம் என்றும், எமது எதிர்கால சந்ததியினருக்காக ஒரு நிலையான எதிர்காலத்தை நோக்கிய செயல்முறையொன்றுக்கு பங்களிப்பதற்கான தனித்துவமான வாய்ப்பு எமக்கு உள்ளது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
தொடக்க விழாவில் உரையாற்றிய மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் பதில் செயலாளர் திரு. மாபா பத்திரன, சதுப்புநில வாழ்விடங்களை பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் இலங்கை ஏற்கனவே மேற்கொண்ட முயற்சிகள் குறித்து எடுத்துரைத்தார். குறிப்பாக இலங்கை சதுப்புநிலங்கள் மீதான முயற்சியை முன்னெடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் பின்னர், பங்குதாரர்களுடன் இணைந்து ஒரு வலுவான சதுப்புநில மறுசீரமைப்புத் திட்டத்தை வடிவமைத்தல் மற்றும் செயற்படுத்துதல் ஆகியன உள்ளங்கலாக, அந்த விடயத்தில் அமைச்சு ஆரம்பித்துள்ள பல்வேறு நடவடிக்கைகளை திரு. பத்திரன மேலும் வலியுறுத்தினார். முக்கியமான சாதனைகளில், சதுப்புநில மறுசீரமைப்பிற்கான ஒரு சிறப்புப் பணிக்குழுவை நிறுவுதல், சதுப்புநில சூழலமைப்புகள் அமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாடு குறித்த பிரத்யேக தேசிய கொள்கை மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்குதல் மற்றும் சதுப்புநிலப் பகுதிகளை மற்ற நிலப் பயன்பாடுகளுக்கு மாற்றுவதைத் தடுக்கும் நோக்கில் ஒரு சிறப்பு அமைச்சரவைத் தீர்மானத்தைப் பெறுதல் போன்றன உள்ளடங்கும்.
உலகின் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள பலம் மற்றும் பலவீனங்களையும் ஒப்பிட்ட அதே வேளையில், பங்கேற்கும் நாடுகளில் கடலோர சமூகங்களின் வாழ்வாதாரத்தை ஆதரிக்கும் நிலையான சதுப்புநில சூழலமைப்புகளை அடைவதற்கான தற்போதைய நிலை, சிறந்த நடைமுறைகள், தோல்விகள் மற்றும் இடைவெளிகளை அடையாளம் காண்பதில் இந்த மூன்று நாள் நிகழ்வு முக்கியமாக கவனம் செலுத்தியது. அனைத்து மட்டங்களிலும் பங்குதாரர்களின் ஈடுபாட்டிற்கு உரிய அங்கீகாரத்தை வழங்கி, இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள சமூக அடிப்படையிலான நிறுவனங்கள் தமது நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக விளக்கக்காட்சிகளை வழங்குவதற்கு அழைக்கப்பட்டன. மேலும், குறிப்பு விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு, செயற்றிட்டத்தை உருவாக்கத் தேவையான தொகுக்கப்பட்ட தகவல்களுக்கு, ஊடாடும் அமர்வுகள் பங்களித்தன.
பொதுநலவாய செயலகத்தின் பொதுநலவாய நீல சாசனத்திற்கான ஆலோசகர் ஹெய்டி பிரிஸ்லன், அவுஸ்திரேலியாவின் பொதுநலவாய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பின் (CSIRO) முதன்மை ஆராய்ச்சி விஞ்ஞானி கலாநிதி மெட் வண்டர்க்லிஃப்ட் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கடல் விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஹசந்தி உருகொடவத்த திசாநாயக்க ஆகியோர் இந்த அமர்வுகளின் போது கலந்து கொண்டனர். இலங்கையிலிருந்து பங்கேற்றவர்களில், மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் சதுப்புநில பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள் மற்றும் சதுப்புநிலங்கள் பற்றிய கல்வி வல்லுநர்கள் இடம்பெற்றிருந்தனர்.
உலகின் முதல் சதுப்புநில அருங்காட்சியகமான கடலியல் - சுதீசா சதுப்பு அருங்காட்சியகம், வனவள திணைக்களத்தின் பராமரிப்பில் உள்ள சதுப்புநில நாற்றங்கால்கள் மற்றும் சதுப்பு நிலங்களை மீண்டும் நடுகை செய்த இடங்கள் ஆகியவற்றுக்கான ஒரு நாள் கள விஜயத்துடன், கருத்துரையாடல்கள் இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. மேலும், சிதைந்துள்ள சதுப்புநில தளங்கள் (கைவிடப்பட்ட இறால் பண்ணைகள்) மற்றும் அழகிய சதுப்புநில தளங்களுக்கு விஜயங்கள் மேற்கொள்ளப்பட்டன. கற்பிட்டியில் நடைபெற்ற சதுப்புநில இன வகையொன்றின் மரக்கன்றுகளை மீள் நடுகை செய்யும் நிகழ்விலும் பிரதிநிதிகள் இணைந்திருந்தனர்.
இந்த சந்திப்பானது, கிரிக்கெட் மூலம் செய்யப்பட்ட தொடர்புகளுக்கு அப்பால், ஒரு சில கரிபியன் நாடுகளுடனான இலங்கையின் ஈடுபாட்டிற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பாகும்.
பொதுநலவாய நீல சாசனத்தின் கீழ், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சுடன் இணைந்து சதுப்புநில சூழலமைப்புகள் மற்றும் வாழ்வாதார நடவடிக்கைக் குழுவின் (MELAG) முதலாவது கூட்டத்தை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஏற்பாடு செய்தது. இந்த கூட்டத்திற்கு அவுஸ்திரேலியாவின் பொதுநலவாய செயலகம் மற்றும் பொதுநலவாய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பு (CSIRO) தமது ஆதரவை நல்கின.