21/4க்குப் பின்னர் இலங்கையில் இயல்பு நிலைமையை மீட்டெடுப்பதற்கு உறுதியான உதவி தேவை என இலங்கை கூறுகின்றது

21/4க்குப் பின்னர் இலங்கையில் இயல்பு நிலைமையை மீட்டெடுப்பதற்கு உறுதியான உதவி தேவை என இலங்கை கூறுகின்றது

Photo 1

 

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் பக்க நிகழ்வுகளில் ஒன்றாக, ஐ.நா பொதுச் சபையின் 74வது அமர்வுக்கான இலங்கைத் தூதுக்குழுவிற்கு தற்போது தலைமை தாங்கி வரும் வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க அவர்கள், பயங்கரவாத தடுப்பு அலுவலகத்தின் கீழ்நிலைச் செயலாளர் நாயகம் திரு. விலாடிமிர் வொரொன்கொவ் மற்றும் அவரது குழுவினரையும், பயங்கரவாத தடுப்புக் குழுவின் உதவிச் செயலாளர் நாயகமும், நிறைவேற்றுப் பணிப்பாளருமான திருமதி. மிச்சேல் கொனிங்ஸ்க் ஆகியோரை இந்த வாரம் சந்தித்தார். ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி தூதுவர் ஷெனுகா செனவிரத்ன மற்றும் ஏனைய சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் வெளிவிவகார செயலாளருடன் இதன் போது இணைந்திருந்தனர்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து தயக்கமின்றி கண்டனங்களைத் தெரிவித்தமைக்காகவும், பல வழிகளிலும் அரசாங்கத்தை ஆதரித்தமைக்காகவும் ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகத்திற்கும் செயலாளர் நன்றிகளைத் தெரிவித்தார். பயங்கரவாத தடுப்புக் குழுவின் உதவிச் செயலாளர் நாயகமும், நிறைவேற்றுப் பணிப்பாளருமான திருமதி. மிச்சேல் கொனிங்ஸ்க் மேற்கொண்ட சமீபத்திய விஜயமானது, தொடர்புடைய பங்குதாரர்களுக்கு மத்தியில், பயங்கரவாதம் மற்றும் வன்முறைத் தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் உள்நாட்டு முயற்சிகளை ஒருங்கிணைப்பதில் சிறந்த நடைமுறைகளைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது என அவர் விஷேடமாக சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து பல அமைச்சர்கள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், மேலும் உலகளாவிய சமூக ஈடுபாடு மற்றும் விரிவாற்றல் நிதியத்தின் நிபுணர் ஒருவர் மேற்கொண்ட விஜயங்கள் குறித்து வெளிவிவகார செயலாளர் திரு. வொரோன்கோவ்விற்கு விளக்கினார். நிபுணரின் விஜயத்தைத் தொடர்ந்து, உடனடியாக கவனம் செலுத்துவதற்காக அடையாளம் காணப்பட்ட பகுதிகள், சமூக கொள்கையாக்கம், சமூக ஒருமைப்பாட்டுக்கான இளைஞர்களின் ஈடுபாடு, சமூக ஊடகங்களை கண்காணித்தல், பாதிக்கப்படக்கூடிய சமூக இடங்களை குறிவைக்கும் நடவடிக்கைகள் மற்றும் மிதவாதமயமாக்கல் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தன.

எல்லை நிர்வாகத்தை வலுப்படுத்துதல், முன்கூட்டிய பயணிகள் தகவல் (API) மற்றும் பயணிகள் பெயர் பதிவுகள் (PNR) ஆகியவற்றை செயற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து கீழ்நிலை செயலாளர் நாயகம் வொரோன்கோவ் கவனம் செலுத்தினார். இது சம்பந்தமாக, API / PNR அமைப்புடன் ஒருங்கிணைப்பதில் மற்றும் வன்முறைத் தீவிரவாதத்தை எதிர்ப்பதில் இலங்கை முன்னெடுக்கவுள்ள எதிர்கால முயற்சிகளில் மேலதிக உதவிகளை வழங்குவதற்கான ஐ.நா. வின் தயார்நிலையை அவர் வெளிப்படுத்தினார். இலங்கைக்கு மேற்கொள்ளப்படவிருக்கும் விஜயத்தின் போது, முன்னுரிமைகள் குறித்த விடயங்களில் தனது அலுவலகம் இலங்கை அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து செயற்படும் என அவர் உறுதியளித்தார்.

பயங்கரவாத தடுப்புக் குழு மற்றும் இலங்கைக்கு இடையிலான நெருங்கிய ஈடுபாட்டையும், உயர் மட்ட ஒத்துழைப்பையும் உதவிச் செயலாளர் நாயகம் கொனிங்ஸ்க் வரவேற்றார். இலங்கையுடன் ஒத்துழைப்பதற்கான ஒரு கட்டமைப்பை ஐ.நா. உருவாக்கி வருவதாக திருமதி. கொனிங்ஸ்க் தெரிவித்தார். வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளை மீள வழங்குதல், வன்முறைத் தீவிரவாதத்தை எதிர்த்தல் மற்றும் எல்லைப் பாதுகாப்பு தொடர்பான பொருத்தமான பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களின் கீழ், பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேசக் கடமைகளுக்கு இணங்க இலங்கை செயற்படுவதற்கு உதவும் நடவடிக்கைகளும் இதில் உள்ளடங்கும்.

இலங்கை கரிசனைக்குரிய விடயங்கள் குறித்து தெரியப்படுத்துவதில் முழுமையான அரசாங்க அணுகுமுறையை பின்பற்றி வருவதாகவும், உதவிக்கான திட்டங்கள் உறுதியானவையாக இருத்தல் அவசியம் என்பதுடன், இலங்கையின் திட்டங்களுக்குள் அவற்றை ஒருங்கிணைக்க முடியும் எனவும் செயலாளர் ஆரியசிங்க தெரிவித்தார். இது சம்பந்தமாக, நாட்டின் நலனுக்கு உதவும் உறுதியான நடவடிக்கைகளை அடையாளம் காண்பதற்கு இலங்கை அரசாங்கமும் ஐ.நா. வும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்து உதவிச் செயலாளர் நாயகமும், வெளிவிவகார செயலாளரும் ஒப்புக்கொண்டனர்.

38 உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பு நெருக்கப் பணிக்குழுவில் (முன்னாள் CTITF) ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்திசைவை மேம்படுத்துதல், உறுப்பு நாடுகளுக்கு பயங்கரவாத எதிர்ப்பு திறன் மேம்பாட்டு உதவியை வலுப்படுத்துதல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளுக்கான காட்சித்தன்மை, ஆலோசனை மற்றும் வளங்களை அணிதிரட்டுவதற்கு வசதியளித்தல் போன்றவற்றுக்காக, 2017 ஜூன் 15ஆந் திகதிய பொதுச் சபைத் தீர்மானம் 71/291 ஐ ஏற்றுக்கொண்டதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாத தடுப்பு அலுவலகம் (UNOCT) நிறுவப்பட்டது.

ஐ.நா. பாதுகாப்புச் சபையின் பயங்கரவாத எதிர்ப்புக் குழுவுக்கு உதவுவதற்கான ஒரு சிறப்பு அரசியல் பணியாக ஐ.நா. வினால் பயங்கரவாத தடுப்புக் குழு நிறுவப்பட்டதுடன், பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் கொள்கைத் தீர்மானங்களை முன்னெடுத்துச் செல்லல், உறுப்பு நாடுகளின் நிபுணர் மதிப்பீடுகளை நடாத்துதல் மற்றும் நாடுகளுக்கு பயங்கரவாத எதிர்ப்பு தொழில்நுட்ப உதவிகளுக்கு வசதியளித்தல் ஆகியவற்றை மேற்கொள்கின்றது.

 

 

 

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரத் தூதரகம்
நியூயோர்க்
02 அக்டோபர் 2019

Photo 2

Photo 3

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close