லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை இலங்கை இராணுவத்தின் தளபதியாக நியமித்தமைக்காக, ஐக்கிய நாடுகள் அமைதி நடவடிக்கைத் திணைக்களமானது, தற்போது ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையணியில் பணியாற்றும் இலங்கை இராணுவப் பிரிவொன்றையும், குறிப்பிட்ட சில அதிகாரிகளையும் திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கும் அறிக்கையை, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பிரதிப் பேச்சாளர் நேற்று (2019 செப்டம்பர் 25) வெளியிட்டதைத் தொடர்ந்து, இலங்கை அரசு ஐ.நா. வுடன் இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடி வருகின்றது. 74 வது பொதுச் சபை அமர்வில் இலங்கைத் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர், இந்த விடயம் குறித்து ஐக்கிய நாடுகள் அமைதி நடவடிக்கைத் திணைக்களத்தின் கீழ்நிலைச்செயலாளர் நாயகத்துடன் 2019 செப்டம்பர் 27, வெள்ளிக்கிழமை கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.